You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேலும் வலுப்பெறும் 'மோன்தா': புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது? எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று மோன்தா புயலாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள தென்கிழக்குப் பகுதியில் உருவெடுத்த மோன்தா புயல் கடந்த 6 மணி நேரத்தில் அங்கிருந்து மேற்கு-வடமேற்காக மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இன்று (அக்டோபர் 27) மதியம் 5.30 மணியளவில் அந்தப் புயல் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது.
இது அடுத்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. பின்னர் மேற்கு-வடமேற்காக நகர்ந்து மேலும் வலுப்பெற்று நாளை (அக்டோபர் 28) காலை தீவிர புயலாக மாறும்.
பின்னர் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்டோபர் 28) மாலை அல்லது இரவு ஆந்திராவில் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கபட்டணம் இடையே கரையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 90–100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கலாம். அது மணிக்கு 110 கிலோமீட்டர் வரையிலும் வேகமடையலாம்" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
அக்டோபர் 27
இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
அக்டோபர் 28
நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற இடங்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மோன்தா புயல் எதிரொலியாக, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இரு துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.
ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 30-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ரெட் அலர்ட்
இந்தப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என்பதால், மிகவும் கனமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
அதனால் இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு கடலோர ஆந்திர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போதுவரை ஆந்திராவிலுள்ள 6 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோரத்தில் வாழும் குடிசைப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு