நீட் பயிற்சிக்கு பணம் இல்லாததால், மருத்துவ கனவுகளை கைவிடும் கிராமப்புற மாணவர்கள்

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

நீட் பயிற்சி நிறுவனங்களில் சேர பணம் இல்லாததால் இந்த ஆண்டு தங்களின் மருத்துவ கனவுகள் பறிபோகியுள்ளன என்கிறார்கள் தமிழ்நாட்டின் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்கள்.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கான பிரத்யேகப் பயிற்சிப் பெற்றுள்ளனர் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க ஓராண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. 12ஆம் வகுப்பு படித்த பிறகு ஓராண்டு பயிற்சிக்காக செலவு செய்யவும் வேண்டும். இது முடியாததால் பலரும் தங்கள் மருத்துவர் கனவுகளை கைவிட வேண்டியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சேலம் கெடவூரை சேர்ந்த 23 வயது சத்ரியன் தற்போது கிராம போஸ்ட் மேனாக வேலை பார்க்கிறார். நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் அவர் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக் கொண்டு ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றியிருக்கக் கூடும்.

மருத்துவராக வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தும், நீட் பயிற்சிக்கான பணம் இல்லை என்பதாலேயே அந்த ஆசையை கைவிட நேர்ந்ததாக பிபிசி தமிழிடம் கூறினார்.

2018ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், ஐந்து முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை நீட் தேர்வு எழுதும் போது, சில தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன், நீட் பயிற்சியில் சேர்ந்தார். அதில் பெற்ற மதிப்பெண்கள் அரசுக் கல்லூரியில் சேர போதுமானதாக இல்லை.

“எனக்கு சுயநிதி கல்லூரியில் அரசு கோட்டாவில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் பணம் இல்லை. என்னுடன் தேர்வு எழுதிய நண்பருக்கு காசு இருந்ததால், அவர் தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர்ந்துவிட்டார். நான் அதிக மதிப்பெண் பெறுவதற்காக மறுமுறை நீட் தேர்வு எழுதினேன்” என்றார்.

தொடர்ந்து நீட் பயிற்சி மையத்திற்கு செல்ல காசு இல்லாவிட்டாலும் தானே வீட்டில் படித்து நான்கு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார் சத்ரியன். அவருக்கு இறுதியாக 281 மதிப்பெண்கள் கிடைத்தன.

“அதை வைத்து தனியார் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும். ஆனால் ஓராண்டு சுமார் ரூ.5 லட்சம் செலவாகும் என்பதால் சேரவில்லை” எனும் சத்ரியன் தற்போது பாரதி தாசன் பல்கலைகழகத்தில், இரண்டாம் ஆண்டு விலங்கியல் தொலைதூர கல்வி மூலம் படித்து வருகிறார். கூலி வேலை செய்து வந்த அவரது தந்தை தற்போது சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளார். சத்ரியனுக்கு ஒரு தம்பியும் தங்கையும் இருக்கின்றனர்.

ஒரு ஆண்டு பயிற்சிக்கு ரூ.2 லட்சம் செலசெலவு

அரியலூர் மாவட்டம் நமங்குணத்தை சேர்ந்த ஆர் ஜீவா இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 543 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரது தந்தை கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாவார்.

“நான் தமிழ் வழியில் படித்தேன். தமிழில் நீட் தேர்வு தயாரிப்பு பாடங்கள் அதிக அளவில் கிடையாது. ஆங்கிலத்தில் புரிந்துக் கொண்டு தேர்வு எழுத ஓராண்டு பயிற்சி தேவை” என்கிறார் ஜீவா.

ஜீவாவின் அண்ணன் ஆர் தமிழ்ஒளி பேசுகையில், “நீட் பயிற்சிக்கு திருச்சியில் ரூ.2 லட்சமும், சேலத்தில் ரூ.1.5 லட்சமும் ஆண்டுக்கு வசூலிக்கப்படுகிறது. அதை எங்கள் குடும்பத்தால் புரட்ட முடியாது. உதவியாக தெரிந்தவர்கள் பலரிடமும், சில சமூக அமைப்புகளிடமும் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை” என்றார். தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஜீவா. தற்போது சென்னையில் தனியார் கல்லூரியில் பிஎஸ்.சி கணிதவியல் படிப்பில் சேர்ந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்து உள்ள காட்டூரை சேர்ந்த பத்மினி, இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த அவர், தங்கள் ஊரில் அரசுப் பள்ளி இல்லாததால், அருகில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதிய முதல் முயற்சியில் 370 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழ் வழியில் பயின்றுள்ள பத்மினிக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியவில்லை. மீண்டும் நீட் தேர்வு எழுத ஓராண்டு செலவிட வேண்டும் என்பதால் மருத்துவ கனவை கைவிட்டுவிட்டார்.

“தென்னந்தோப்பில் கூலி வேலை செய்யும் எனது பெற்றோர்கள் கொஞ்சம் காசு சேர்த்து, ஒரு மாத நீட் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். அந்த மையத்தில் நானும் எனது தோழி மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்கள். எங்களுக்கு முறையாக சொல்லிக் கொடுக்க பயிற்றுநர்கள் இல்லை. எனவே, ஒரு வாரத்துக்கு மேல் பயிற்சியை தொடர முடியவில்லை” என்றார்.

பத்மினியின் ஊருக்கு அருகில் பயிற்சி மையம் எதுவும் இல்லாததால், தினமும் நான்கு மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது அவருக்கு.

“இனி இந்த தேர்வை எழுத முடியாது என்று முடிவு செய்துவிட்டேன். சொல்லப்போனால் என் வகுப்பில் உள்ள யாருக்குமே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இல்லை. எங்கள் வகுப்புக்குள் நுழைந்து யாரெல்லாம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கப் போகிறார்கள் என்று ஆசிரியர் கேட்ட போது, ஒருவர் கூட கை தூக்கவில்லை.” என்றார். “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 7.5% இட ஒதுக்கீடு அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ் அப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்.

நீட் ஏன் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது?

2021-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஏ கே ராஜன் குழு அறிக்கையில், முதல் முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு எதிராக நிலவும் பாரபட்சத்தை எடுத்துக்காட்டியது. நீட் தேர்வு, தேர்வை மீண்டும் எழுதும் மாணவர்களுக்கு (2021-ல் 71%) மற்றும் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு (2020 -ல் 99%) சாதகமாக உள்ளது என்று கூறியது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் போன்ற வளர்ச்சியடையாத மாவட்டங்களில் மருத்துவ இடங்கள் ஒதுக்கீட்டில் 50% குறைப்பு இருப்பதையும், சென்னை போன்ற நகர்ப்புற மையங்களில் அதிகரிப்பதையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

முதல் தலைமுறை பட்டதாரிகள் (9.74%), கிராமப்புற விண்ணப்பதாரர்கள் (12.1%) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மருத்துவ மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழி மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சதவீதம் 14.88%. இது 2021இல் 1.99% ஆக இருந்தது.

"நீட் தேர்வு ஏழைகள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட, அதை நான் எனது அறிக்கையில் விளக்கியுள்ளேன். எனது அறிக்கை எப்போதும் நிலைத்து நிற்கும், இப்போது இன்னும் வலுவாக நிற்கிறது" என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பிபிசியிடம் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி, பின் தற்கொலைக்கு தள்ளப்பட்ட மாணவி அனிதாவின் அண்ணன் எஸ்.மணிரத்னம் கூறுகையில், "நீட் தேர்வு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை” என்று தெரிவித்தார். “2017ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் மட்டும்தான் கோரிக்கை வைத்தது. இப்போது தமிழகத்தின் கோரிக்கையை ஒட்டுமொத்த நாடும் கோருகிறது” என்றார்.

ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை பரிந்துரைகளின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கையில் மாநில தன்னாட்சி கோரி 'தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021' ஐ மாநில அரசு நிறைவேற்றியது.

நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சர்ச்சைகள் தற்போது பல்வேறு மாநிலங்களில் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு சட்டமன்றம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கடந்த வாரம் நிறைவேற்றியுள்ளது. மேலும் ஏ கே ராஜன் குழுவின் அறிக்கையை மற்ற மாநிலங்களுக்கும் புரியும் வகையில் எட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளது தமிழக அரசு.

நீட் தேர்வுக்கு ஏன் பயிற்சி அவசியம்?

நீட் தேர்வுக்கு பாடம் சம்பந்தப்பட்ட அறிவு மட்டுமல்ல, தேர்வு எழுதும் திறன்களும் அதிகம் வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

"இந்த திறன்களை பெரும்பாலும் அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி மையங்கள் மூலம் பெற முடியும். ஏழை கிராமப்புற மாணவர்கள் தங்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கினாலும், பள்ளியிலேயே இந்த பயிற்சியை பெறுவது சாத்தியமில்லை. நீட் தேர்வின் வடிவம் மற்றும் கேள்வி கேட்கும் முறைகள் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத்தான் இந்த தேர்வு சாதகமாக இருக்கும். இதுவே நீட் தேர்வின் அடிப்படை குறைபாடு" என்கிறார் மூத்த கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.

“தமிழ்நாட்டில் மொத்தம் 481 நீட் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. ஓராண்டிற்கு ரூ.5750 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் தொழிலாக பயிற்சி மையங்கள் உள்ளன என்ற தகவலை எங்கள் அறிக்கை வெளிக்கொண்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலாக மாறியுள்ளன என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன” என்கிறார் ஜவஹர் நேசன்.

தமிழ் வழி மாணவர்களுக்கான சவால்கள்

ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம், ஆனால் வினாத்தாள்களில் மொழி அமைப்பு மற்றும் மொழிபெயர்ப்பில் உள்ள பிழைகள், தமிழில் பாடப்புத்தகங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் குறைவாக கிடைப்பது போன்ற காரணங்களால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு பயிற்சி பெறுவது எளிதாக இல்லை. ஆங்கிலம் தவிர பிற மொழியில் படிப்போருக்கு இந்த தேர்வுகள் சிரமம் ஏற்படுத்துகின்றன.

நீட் தேர்வுக்காக ஆன்லைன் வழி இலவச தமிழ் தேர்வுகளை நடத்திய 'டெக் ஃபார் ஆல்' அமைப்பைச் சேர்ந்த ராம் பிரகாஷ், தமிழ் மொழியாக்க சொற்கள் மாணவர்களுக்கு சிரமத்தை உருவாக்குவதாக கூறினார்.

உதாரணமாக “டயா மேக்னடிக் - போன்ற அறிவியல் சொற்கள் தமிழ் பாட நூல்களில் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆனால் மாணவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் பார்த்திராத இந்த சொற்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் கேள்வித்தாள்களில் வழங்கப்பட்டன” என்றார். 2018 ஆம் ஆண்டில் இலவச ஆன்லைன் தமிழ் வகுப்புகளை அவர்கள் தொடங்கினர்.

12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்ப்பதுதான் சரி என்று கூறுகிறார் கல்வியாளர் ஜவஹர் நேசன்.

“நீட் தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள் ஏன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெறுவதில்லை?. எனவே அது தகுதிக்கான அளவுகோல் இல்லை” என்றார் அவர்.

தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளின் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்ய 2006 ஆம் ஆண்டில் ஆனந்தகிருஷ்ணன் குழுவை நியமித்த மாநில அரசின் உறுப்பினர் நெடுஞ்செழியன், "நாங்கள் தரவுகளை சேகரித்து நுழைவுத் தேர்வுகள் பயனுள்ளதாக இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்” என்று தெரிவித்தார்.

நுழைவுத் தேர்வு என்ற முறை ஏழை மாணவர்களை கல்வியை நோக்கி ஈர்ப்பதாக இல்லை என்பதையே கல்வியாளர்களும், மாணவர்களும் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)