You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹஜ் பயணம் செல்வோர் சௌதி அரேபியாவில் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்?
சௌதியில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட 1000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அதீத வெப்பம் காரணமாகக் கூறப்படுகிறது.
சௌதியில் இந்த ஆண்டு வெப்பம் 51 செல்ஷியஸை தாண்டியது. உயிரிழந்தவர்களில் 75% பேர், ஹஜ் பயணத்துக்கான உரிய அனுமதி பெறவில்லை என்று சௌதி கூறுகிறது. எனவே, தங்குமிடம் இன்றி நேரடியான சூரிய வெப்பத்தில் இருந்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும முதியவர்கள்.
ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும். பொருளாதார ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தகுதியானவர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்வது கடமை அல்லது கட்டாயமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு 18 லட்சம் மக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டதாக சௌதி கூறுகிறது.
சௌதியில் உயிரிழந்த 1,301 பேரில் 658 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தோனீசியாவை சேர்ந்தவர்கள் என்றும் செய்தி முகமைகள் கூறுகின்றன. ஹஜ் பயணத்தில் 98 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய அரசு உறுதி செய்துள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு யாத்ரீகர் இறந்தால், அவரது மரணம் ஹஜ் மிஷனுக்கு தெரிவிக்கப்படுகிறது. இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த மணிக்கட்டு பேண்டுகள் (Wrist bands) அல்லது கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் அடையாள அட்டைகளை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.
பின்னர், அதிகாரிகள் மருத்துவரின் சான்றிதழைப் பெறுகிறார்கள். அதன் அடிப்படையில் சௌதி அரேபிய அரசு இறப்புச் சான்றிதழை வழங்குகிறது.
மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் அல்லது மதீனாவில் உள்ள நபி மசூதி போன்ற முக்கியமான மசூதிகளில் இறுதிச் சடங்குகள் நடக்கும். உடலைக் கழுவி, துணிகள் போர்த்தி, சௌதி அரசாங்கத்தால் வழங்கப்படும் ஃப்ரீசரில் (Freezer) வைக்கிறார்கள். இறுதிச் சடங்கிற்கான அனைத்து செலவுகளையும் சௌதி அரசு ஏற்றுக் கொள்கிறது.
அடக்கம் செய்யும் முறை என்பது எளிமையானது. அடையாளக் குறியீடுகள் இல்லாமல், சில நேரங்களில் ஒரே இடத்தில் பல உடல்கள் அடக்கம் செய்யப்படும். யார் எங்கு புதைக்கப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் அரசு பதிவேட்டில் இருக்கும். எனவே குடும்பங்கள் விரும்பினால் அடக்கஸ்தலங்ளை பார்வையிடலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)