You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் கொரோனா நிலைமை என்ன? விவரம் கேட்கிறது உலக சுகாதார அமைப்பு
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி செய்திகள்
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தொற்று பரவல் குறித்த உண்மை தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டாலும், உடனே சுதாரித்துக் கொண்ட அந்நாட்டு அரசு, கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் பெரிய அளவில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொண்டது.
அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் ஈராண்டுகள் கொரோனாவால் முடங்கி கிடக்கையில், மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனா மட்டும் கொரோனா பரவலை திறம்பட கட்டுப்படுத்தியதை உலகமே உற்றுநோக்கியது.
சீனாவைப் பின்பற்றி உலகின் பிற நாடுகளும் பொது முடக்கத்தை அமல்படுத்தியதுடன், அடுத்து வந்த நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் கொரோனாவை படிப்படியாக வெற்றி கொண்டன. உலகமே இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் சீனா மட்டும் பாதிப்பு குறைவாக இருநதாலும், ஜீரோ கோவிட் பாலிசி (Zero Covid Policy) கொரோனா கட்டுப்பாடுகளை கைவிடவில்லை.
அதன்படி, ஒருசில கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அந்த பகுதி முழுமைக்கும் சீல் வைக்கும் வழக்கம் தொடர்ந்தது. கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் கடுமையாக பின்பற்றப்பட்டது.
உலகமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடுகளைத் தொடர்வதா என்று கடந்த நவம்பரில் சீனர்கள் வீதிக்கு வந்த போராடியதன் தொடர்ச்சியாக அங்கு அமலில் இருநத கடும் கட்டுப்பாடுகள் படிப்படியாக அல்லாமல், ஒரே இரவில் தளர்த்தப்பட்டன. அதுவே, சீனாவின் இன்றைய கவலை தரத்தக்க நிலைக்குக் காரணம்.
சீனாவில் இன்று பொதுமுடக்கம் இல்லை. கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் கடும் கட்டுப்பாடுகளும் இல்லை. ஈராண்டுகளாக முடங்கியிருந்த மக்கள் வெளிநாடு செல்லவும் சீனா கதவுகளை அகலத் திறந்துள்ளது.
அதேநேரத்தில், உலக நாடுகள் பலவும் சீனாவில் இருந்து வருவோருக்கு கதவுகளை படிப்படியாக அடைத்து வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இத்தாலி, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளன.
பிரிட்டனோ, சீனாவில் இருந்து புறப்படும் போதே "கொரோனா தொற்று இல்லை" என்பதற்கான சான்றிதழை அளிப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
உலக நாடுகளின் கதவடைப்புக்குக் காரணம், சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகத்தில் பரவத் தொடங்கியதே. நாளொன்றுக்கு 5 ஆயிரம் புதிய தொற்றுகளுக்கு கீழேயே பதிவாவதாக சீன அரசு தரவுகள் கூறுகின்றன. ஆனால், உண்மை நிலையை சீனா மறைப்பதாகவும், தினசரி கொரோனா தொற்று மிக அதிகமாக, அதாவது 10 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சீன அரசு கூற்றுப்படி, டிசம்பர் மாதம் முழுவதுமே அங்கு 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஏர்ஃபினிட்டி (Airfinity) என்ற சுகாதாரத் தரவுகள் நிறுவனமோ, சீனாவில் நாள்தோறும் சுமார் 9 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரை பறிகொடுப்பதாக கடந்த வியாழக்கிழமையன்று கூறியுள்ளது.
சீனாவில் இருந்து வெளிவரும் கவலை தரும் செய்திகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தியுள்ளது.
பின்னர் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, "கொரோனா பரவல் குறித்த தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளுமாறு சீன அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அத்துடன், தடுப்பூசி போடப்பட்ட தரவுகள், தடுப்பூசி திட்டத்தின் தற்போதைய நிலை, 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கொரோனாவால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய மக்களுக்கான தடுப்பூசி திட்டம் குறித்த தரவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்," என்று தெரிவித்துள்ளது.
"கொரோனா பரவலை கண்காணிப்பது, உண்மை தரவுகளை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்வது போன்றவை சீனாவுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கும் கொரோனா ஆபத்தை மதிப்பீடு செய்யவும், அதற்கேற்ப தயாராகவும் உரிய அவகாசத்தை தரும்" என்று அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
கோவிட்-19 பரவல் குறித்து வரும் செவ்வாய்க்கிழமையன்று உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் பங்கேற்று, புதிய கொரோனா வைரஸ் திரிபு குறித்த விரிவான விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு சீன அறிவியலாளர்களுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சில நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருவதை புரிந்து கொள்ள முடிவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்