அமலாக்கத்துறை அதிகாரி விரட்டிப் பிடிக்கப்பட்டது எப்படி? சபாநாயகர் அப்பாவு கூறுவது என்ன? - காணொளி
திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது, கையும் களவுமாகப் பிடிபட்ட அமலாக்கத்ததுறை அதுிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி, கடந்த நான்கு மாதங்களாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அதற்கு முன் நாக்பூரில் பணியற்றி வந்ததும் தமிழ்நாடு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், அங்கீத் திவாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது உள்ள வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ 51 லட்சம் கேட்டுள்ளதாகவும், அதில் ஒரு தவணையாக ரூ 20 லட்சம் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், நவம்பர் 31-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த அரசு அதிகாரியிடம் கொடுத்து அனுப்பி, அங்கீத் திவாரியிடம் கொடுக்க வைத்ததாகவும், அந்த பணத்தை அங்கீத் திவாரி பெற்றுக்கொண்டு செல்லும்போது, அவரை கையும் களவுமாகப் பிடித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை இரவு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொடங்கிய சோதனை, சனிக்கிழமை காலை 7 மணியளவில் நிறைவடைந்தது.
இச்சம்பவத்தைக் குறித்துப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அமலாக்கத்துறை அதிகாரி தவறு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருகிறார்.
அதேசமயம், தமிழகச் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு மத்தியப் புலனாய்வு முகமைகளின் ‘இடைத்தரகர்கள் தன்னையும் மிரட்டினர்’ என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



