அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: காயத்தை சரி செய்த தோழனை விட்டுப் பிரியாத பறவை

உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள மண்ட்கா என்ற கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிஃப்புடன் நாரை ஒன்று கடந்த ஒரு வருட காலமாக தோழமையாக பழகி வருகிறது.
தனது கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வயல்வெளியில் காயம் அடைந்த நிலையில் கிடந்த இந்த நாரையை ஒரு ஆண்டுக்கு முன் முகமது ஆரிஃப் முதல்முறையாக கண்டார்.
நாரையின் ஒரு கால் முறிந்திருந்தது. பறவையால் பறக்கக்கூட முடியவில்லை. இவ்வளவு பெரிய பறவையைக் கண்டு ஆரிஃப் முதலில் பயந்தார். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதற்கு உதவ முன்வந்தார். பறவையை வீட்டிற்கு கொண்டு வந்து அதன் காலில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு தடவி சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார் ஆரிஃப். அதன் காரணமாக பறவையின் கால் குணமானது.

”இந்த நாரையை சுமார் ஒரு வருடத்திற்கு முன்னால் முதல்முறையாக பார்த்தேன். நாம் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 200-250 மீட்டர் தூரத்தில் என்னுடைய இன்னொரு வயலில் அந்த நாரையை பார்த்தேன். அந்த நாரைக்கு ஏதோ காயம் ஏற்பட்டு அது விழுந்து கிடந்தது. அதன் வலதுகால் உடைந்திருந்தது. காயம் காரணமாக ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அதனின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நான் உடனே அதன் அருகில் செல்லவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. அதனின் அலகு மிகவும் பெரிதாக இருந்தது. என்ன காயப்படுத்திவிடுமோ என்று பயமா இருந்தது. பிறகு நான் பக்கத்தில் சென்று பார்த்தபோது, அது ரொம்ப பாவமா எதுவும் செய்யமுடியாம கிடந்தது. நான் அதை தூக்கி வீட்டுக்கு கொண்டுவந்தேன். வீட்டில் அதற்கு வைத்தியம் செய்தேன். பின்பு மெதுவாக அதனின் கால் ஒன்று ஒன்றரை மாதத்தில் சரியானது. ஒன்றரை மாததுக்கு காலை கீழ வைத்து நிற்க தொடங்கியது. அது பறக்க ஆரம்பித்ததும் தன் குடும்பத்திடம் சென்றுவிடும் என நினைத்தேன். இது ஒரு காட்டுப்பறவை, அது எப்படி என் கூடவே இருக்கும் என்று யோசித்தேன். ஆனால் நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை. என்கூடவே இருக்க தொடங்கியது.”
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஆரிஃப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வசித்து வரும் நாரையை கட்டி வைத்ததில்லை. எங்கும் அடைத்தும் வைக்கவில்லை.அது சுதந்திரமாக சுற்றித்திரிகிறது என்கிறார் ஆரிஃப்.
”நாரை நாங்க சாப்பிடுவதையே சாப்பிடும். வீட்டில் சமைத்த உணவையே அதுவும் சாப்பிடும். பருப்பு, சாதம், காய்கறி மற்றும் ரொட்டியை சாப்பிடும். என்கூட சேர்ந்து சாப்பிடும். என் தட்டில் இருந்தும் எடுத்து சாப்பிடும்.”
முதன்முறையாக இந்த பறவையை காணும்போது அச்சமடைந்த ஆரிஃப் தற்போது தனது குடும்பமே இதற்கு பழகிவிட்டது என்றும் இந்த நாரையால் தனது குடும்பத்துக்கு எந்த பிரச்னையும் வந்தது இல்லை என்கிறார்.
"இந்த நாரையால் குடும்பத்தில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாரும் சந்தோஷமாக உள்ளனர். இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. இதுபோல திரைப்படங்களில்தான் பார்த்துள்ளேன். நிஜவாழ்க்கையில முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன்.” என்கிறார் ஆரிஃப்.

மேலும், ” நீங்க பார்ப்பதுபோல இது எப்பவும் சுதந்திரமாக இருக்கும். இதை கட்டி வைப்பது இல்லை. இதை அடைத்து வைத்திருந்தால் இது எங்காவது சென்றிருக்கும். இது சுதந்திரமாக இருக்க விரும்பும் பறவை. அதற்கு பிடித்த இடத்தில் அது வந்துபோகும். அப்படி இருந்தால்தான் இது தங்கும். கட்டி வைத்த பிறகு அதை திறந்துவிட்டால் அது பறந்து சென்றிருக்கும். மத்தியான நேரத்தில் தன் குடும்பத்திடம் அது செல்லும். 20-25 பறவைகளின் கூட்டத்தோட இதை நான் பார்த்திருக்கிறேன். மாலைக்குள் அது திரும்பவும் எங்களின் வீட்டுக்கு வந்துவிடும். அதை தேடிச் சென்று கூட்டிவந்த நாள் எதுவும் இல்லை. அது தானாகவே வந்துடும். தினமும் அதன் நேரத்துக்கு அது திரும்பி வந்துவிடும்.” என்றார் ஆரிஃப்.
ஆரிஃப் தனது ஸ்கூட்டியில் எங்காவது செல்லும்போது, இந்த நாரை அவரைப் பின்தொடர்ந்து பறக்கும் என்கிறார் அவர்.
”நான் 4 முதல் 5 கிலோமீட்டர் தூரம்வரை இதை கூட்டிச் சென்று வருவேன். சாலையில் மிகுந்த டிராஃபிக் இருப்பதால் அதிக தூரம் செல்வது இல்லை. அதுவும் என்னுடன் பறந்துவரும். அது தலைக்கு அருகே தாழ்வாக பறக்கும். அதிக உயரம் போகாது. வாகனங்கள் மீது மோதி விடுமோ என்ற பயம் இருக்கும். டிரக் வரும்போது உயரத்துக்கு சென்று, அது போனதும் மறுபடியும் என் கிட்ட வரும். இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில நடக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எல்லாம் ஆண்டவன் செயல். நான் மனிதாபிமான அடிப்படையில் என் கடமையை செய்தேன். அதை பார்த்ததும், வீட்டுக்கு எடுத்து சென்று அதனின் காயம் சரியாக வேண்டும் என்று மனதிற்கு தோன்றியது. இது சுதந்திரமாக இருக்கு. இதை கட்டி வைத்தால் அல்லது அடைத்து வைத்தால் யாராவது ஏதேனும் சொல்வார்கள். பிரச்சனை வரும். இப்போது இது சுதந்திரமா இருக்கு. நினைத்த இடத்திற்கு வந்துசெல்கிறது. அதனால எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












