You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லையா? நிபுணர்கள் சொல்வது என்ன?
- எழுதியவர், மாடில்டா வெலின்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தினமும் குளிக்க வேண்டியது உண்மையில் அவசியம் தானா? என்ற கேள்விக்கு நிபுணர்கள் ”மனித உடலுக்கு குளியல் என்பது அவசியமா இல்லையா என்பதை தாண்டி அது ஒரு 'சமூக சடங்கு' போலாகிவிட்டது” என்கின்றனர்.
நான் தினமும் குளிப்பதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிறது. கொரோனா பரவல் தீவிரமாகி , வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் படி சூழல் ஏற்பட்ட காலகட்டம் அது. என்னுடன் வீட்டில் இருந்த துணை, தினமும் குளிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனாலும் அவர் பார்க்க மிகவும் சுத்தமான சுகாதாரமான நபராக தான் தெரிவார். இளம் வயதில் இருந்த எனக்கும் தினமும் குளிப்பதை தவிர்க்க தோன்றியது.
என்னுடைய சோம்பேறித்தனமும் அதற்கு காரணம். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பின்பற்றிய குளியல் பழக்கத்தை கைவிட முடிவு எடுத்தேன். அப்போதிலிருந்து, வாரத்திற்கு மூன்று முறை மட்டும் குளிப்பேன். அதாவது, உடற்பயிற்சி செய்யும் தினங்களில் மட்டும் குளிப்பேன்.
எனது நண்பர்களில் சிலர் குளிர்காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். மேலும் சிலர் தோல் பிரச்னைகள் காரணமாகவும் முடி ஈரமாவது பிடிக்காமலும் வாரத்துக்கு ஒரு முறை குளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். ஆனால் மற்றவர்கள் என்னுடன் ஒத்துப்போகவில்லை. சிலர் என்னை அருவருப்பாக எண்ணினர். சிலர் கிண்டல் செய்தனர்.
"காலையில் எழுந்ததும் குளிக்கவில்லை எனில் தூக்கக் கலக்கத்தோடு இருப்பேன்"
"தினமும் காலையில் குளித்துவிட்டு ஒரு கோப்பை தேநீருடன் என் நாளை தொடங்குவேன்”
"லண்டனில் வசிக்கிறேன். இங்கு தினமும் பயணம் செய்த பிறகு குளிக்காமல் தூங்கவே முடியாது”
"வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே குளியலா? ஐய்யயோ."
இப்படி தான் பலரின் எதிர்வினை இருந்தது.
எப்போதாவது குளிப்பவர்கள் இந்த சமூகத்தில் ஒரு சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறோம். தினமும் குளிக்கும் பழக்கமில்லாத குகையில் வசிக்கும் ஹிப்பிகள்தான் இப்படி வித்தியாசமாக பார்க்கப்படுவார்கள்.
ஆனால் எப்போதாவது குளிக்கும் பழக்கம் கொண்ட டிக்டாக் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்களும் சமூகத்தின் முன் வித்தியாசமான நபர்களாகவே தெரிகின்றனர்.
கடந்த மாதம், பிரிட்டிஷ் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜொனாதன் ரோஸ், "வாரத்துக்கு ஒரு முறை தான் குளிப்பேன்” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டது தலைப்புச் செய்திகளானது.
அதே போன்று, 2023 இல் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது, நடிகை அமெரிக்கா ஃபெர்ரெரா “நான் எப்போதாவது தான் குளிப்பேன்” என்று சொன்னது அவருடன் நேர்காணலில் இருந்த சக நடிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
2021 இல், நடிகர் ஆஷ்டன் குட்சர், "நான் தினமும் அக்குள் மற்றும் கால் கவட்டை பகுதியை மட்டும் கழுவுவேன். குளிக்க மாட்டேன்” என்று சொல்லி பேட்டி எடுத்தவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் அங்கு ஒரு சின்ன பிரளயமே வெடித்தது.
அவருடன் இருந்த சக நடிகரான ஜேக் கில்லென்ஹால், "ஆமாம் முன்பெல்லாம் மக்கள் எப்போதாவது தான் குளிப்பார்கள்” என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தான் கிண்டலாக அதை சொன்னதாக சமாளித்து விட்டார்.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற பிரபலங்கள் கத்தி கூச்சல் எழுப்பத் தொடங்கினர். எனவே , ஆஷ்டன் உடன் வந்த மற்ற நடிகர்கள். "தினமும் குளிப்பது அவசியம். நாங்கள் தினமும் குளிப்போம்” என்று சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
அடிக்கடி கைகளை கழுவுவது கிருமிகள் பரவுவதை தடுக்கும் என்பது அறிவியல் கூற்று. ஆனால், பெரும்பாலான மருத்துவர்களின் கூற்றுப்படி, தினசரி குளிப்பதால் உள்ளார்ந்த உடல் ஆரோக்கிய நன்மை எதுவும் இல்லை என்பதே.
உண்மையில், அடிக்கடி குளிப்பது உங்கள் சருமத்தை உலர்த்தி, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்க செய்து, உங்களுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டன் மக்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தினமும் குளிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொஞ்சம் பின்னோக்கி முந்தைய காலக்கட்டத்தை பார்க்கலாமா?
எப்போதாவது குளிக்கும் பழக்கத்தை பற்றி பொதுவெளியில் பதிவு செய்ய யாருமே விரும்பமாட்டார்கள். ஆனால், 2015 ஆம் ஆண்டில், வேதியியலாளர் டேவிட் விட்லாக், தான் 12 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது தலைப்புச் செய்திகளானது.
குளிப்பதற்கு பதிலாக, அவர் நல்ல பாக்டீரியாவை தன் உடல் மீது அவரே ஸ்பிரே செய்து கொண்டாராம், மேலும் இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு தோல் பராமரிப்பு பிராண்டையும் தொடங்கி உள்ளார்.
இது நடந்து ஒரு வருடம் கழித்து, மருத்துவர் ஜேம்ஸ் ஹாம்ப்ளின், அவர் எப்படி குளிப்பதை நிறுத்தினார் என்பது பற்றி புத்தகமாக எழுதி பகிர்ந்தார்.
2020 ஆம் ஆண்டில், அவருடைய புத்தகம் ”Clean: The New Science of Skin and the Beauty of Doing Les” வெளியானது.
அவர் பிபிசியிடம் பேசுகையில்: "என் உடலுக்கென்று ஒரு வாசனை உள்ளது, அதை தற்போது உணர முடிவதாக என் மனைவி கூறுகிறார். ஆனால் அவளுக்கு அது பிடித்திருக்கிறது. மற்றவர்கள் என் மீது வரும் வாசம் மோசமாக இல்லை என்கின்றனர்”. என்றார்.
ஒரு நேர்காணலுக்காக நான் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது, நான் வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே குளிக்கிறேன் என்பதை குறிப்பிட்டு இருந்தேன். அவர் பிஸியாக இருப்பதால், நேர்காணல் தர மிகவும் பிஸியாக இருப்பதாக சொன்னார். ஆனால் அவர் எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்.
“குளிக்காமல் இருப்பது பற்றி உங்களை யாரேனும் கிண்டல் செய்தால், தினமும் குளித்து அவர்கள் தோல் நுண்ணுயிரிகளுக்கு துரோகம் செய்வதாக சொல்லுங்கள்” என்றார்.
ஒரு வழியாக, நான் சுற்றுச்சூழல் ஆர்வலர் டோனாசாத் மெக்கார்த்தியைக் கண்டடைந்தேன். என்னை சந்திக்கையில், "நீங்களும் தினமும் குளிக்க மாட்டீர்களா? பரவாயில்லை நான் தனி ஆளில்லை. பலர் தினமும் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கவில்லை என்ற போதிலும், பொதுவெளியில் அதை பற்றி பேச தயங்குகின்றனர். ஆனால் நான் பேச தயாராக இருக்கிறேன்” என்றார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், மெக்கார்த்தி கார்டியன் இணையத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதினார் - அதில் வாரத்துக்கு ஒரு முறை குளிப்பது, உடலின் சில பாகங்களை மட்டும் கழுவுதல் (sink washes ) உள்ளிட்டவற்றை பற்றி எழுதினார்.
எப்போதாவது குளிக்கும் நபராக பொதுவெளியில் இதனை பகிர்வது பயமாக இருந்தது என்று குறிப்பிடும் அவர், "இதன்மூலம் நான் கேலி கிண்டல்களுக்கு ஆளாவேன் என பயந்தேன்” என்கிறார்.
ஆனால் கட்டுரை வெளியானதும், பலர் நாங்களும் இப்படி தான் செய்வோம் என ரகசியமாக அவரின் காதில் கிசுகிசுத்து உள்ளனர்.
மெக்கார்த்தி ஒரு தொழில்முறை பாலே நடன கலைஞராக இருந்தவர். அவருக்கு ஏற்பட்ட காயத்தால் நடனம் ஆடுவதை கைவிட்டார். அனைவரை போன்றும், சராசரியாக குளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அவர் அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் பழங்குடி இனமான யானோமாமி மக்களுடன் இரண்டு வாரங்கள் செலவழிக்க நேர்ந்தது.
அதன்பிறகு, சுற்றுச்சூழலுக்காக தன்னை அர்ப்பணிக்க எண்ணினார். மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், நீரை சூடுபடுத்த சூரிய ஆற்றல் தகடுகள் உள்ளிட்டவற்றை தனது லண்டன் வீட்டில் நிறுவினார், மேலும் அவரின் தண்ணீர் பயன்பாட்டைக் கவனமாக கையாண்டார்.
அடுத்த சில மாதங்களில் குளிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார். ஒரு கட்டத்தில் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குளித்தார். சில சமயம், ஒரு துணியைப் பயன்படுத்தி நீரில் நனைத்து, முழு உடலையும் துடைத்து சுத்தம் செய்யத் தொடங்கினார். மேலும் ஒரு கோப்பை தண்ணீரைப் பயன்படுத்தி முகச்சவரம் செய்தார். ஆனால் அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக யாருமே சொல்லவில்லை.
"நீங்கள் தொன்மையான பழைய கட்டிடங்களுக்கு சென்றால், அதன் படுக்கை அறைகளில் இந்த அழகான மர மேஜைகள் மீது கிண்ணங்கள் வைக்கப்பட்டு இருப்பதைக் காண்பீர்கள். பண்டைய காலக்கட்டத்தில் மக்கள் கிண்ணங்களில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி துணியை வைத்து முகத்தையும் உடலையும் துடைத்துக் கொண்டனர். முன்பெல்லாம், குழாயில் தண்ணீர் வரும் செயல்முறை இல்லை. எனவே அவர்கள் தண்ணீரை குறைவாக பயன்படுத்தினர்” என்றார்.
2005 ஆம் ஆண்டு குளியல் முறை குறித்து ஒரு ஆய்வறிக்கை வெளியானது. தற்போது வரை குளியல் தொடர்பான ஆராய்ச்சி வட்டங்களில் அந்த ஆய்வறிக்கை ஒரு அளவுகோலாக உள்ளது.
அந்த ஆய்வறிக்கையின் படி, "பிரிட்டனில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது சில நேரங்களில் இரண்டு முறை குளிப்பது வழக்கம். பலருக்கு இது ஒரு சாதாரண வழக்கமாகிவிட்டது. குளிக்காமல் இருப்பது சமூக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சங்கடமான ஒன்றாக கருதுகின்றனர்.”
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நுகர்வு சமூகவியல் பேராசிரியர் டேல் சவுதர்டன், இந்த அறிக்கையை வெளியிட்ட இணை ஆசிரியர்களில் ஒருவர்.
அவர் பிபிசி-யிடம் கூறுகையில், "நாம் முந்தைய கால கட்டத்தை விட மிகவும் அதிகமாக நம் உடலை சுத்தம் செய்கிறோம். தினமும் குளிக்கும் இந்த சமூக சடங்கு ஏறக்குறைய கடந்த 100 ஆண்டுகளில் வழக்கமாகி இருக்கலாம், இது திட்டமிட்டு நிகழ்ந்த மாற்றமல்ல. தற்செயலாக நடந்ததாகத் தெரிகிறது."
"முந்தைய காலகட்டத்தில், பாரம்பரியமாக, மக்கள் தங்கள் சுத்தப்படுத்திக்கொள்ள குளித்தனர். மேலும் குளித்தல் என்ற கலாச்சாரம் சமூக அந்தஸ்து தொடர்பானது- நகரங்களில் இருக்கும் ஸ்பாவில் தூய்மையான தண்ணீரில் குளிப்பது, பாத் டப்பில் ஒரு குவளை ஒயின் அல்லது தேநீருடன், புத்தகம் படித்துக் கொண்டே ஆசுவாசமாக குளிப்பது போன்ற நடைமுறை இருந்தது."
(பலரின் கருத்துபடி, குளிப்பதற்கு குறைவான நீர் தான் தேவைப்படுகிறது, மேலும் மலிவானது, சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இது குளிக்கும் கால அளவைப் பொறுத்தது. மேலும் சிலர் குளிப்பது மிகவும் சுகாதாரமானது என்று நம்புகின்றனர்)
சதர்டன் மேலும் பேசுகையில், "1950-களில் , பிரிட்டிஷ் மக்கள் குளியலறைகளில் தண்ணீர் வரும் முறையை கண்டறிந்தனர். அதே காலகட்டத்தில், குழாய்களுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் சல்லடையுடன் ஷவர் ஹெட் கண்டுபிடிக்கப்பட்டது."
"இன்று, வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒவ்வொரு அறைக்கும் ஒரு தனி குளியல் அறை இணைக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒரே ஒரு குளியல் அறை மட்டுமே கிடைத்திருந்தால், அது குளிப்பதற்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய சூழலில், நீங்கள் படுக்கையில் இருந்து இறங்கியதும் குளியலறை உள்ளது. எனவே தேவையின்றி அடிக்கடி குளிக்கின்றனர்."
"ஷவர், நேரத்தைச் சேமிப்பதற்கான ஒரு கருவியாகச் சந்தைப் படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் குளிப்பதற்கான நேரத்தை குறைக்கவே ஷவர் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஷவரில் குளிப்பது புத்துணர்ச்சி தருவதாக மக்கள் கருதி நீண்ட நேரம் செலவிடுகின்றனர். ” என்று அவர் விவரித்தார்.
"நீங்கள் 100 ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டத்தை நோக்கினால், மக்கள் மத்தியில் தினமும் குளிக்கும் பழக்கம் இல்லை, வழக்கமான ஒன்றாக குளியல் பார்க்கப்படவில்லை" என்கிறார் டென்மார்க்கில் உள்ள ஆல்போர்க் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டன் கிராம்-ஹேன்சன்.
"உடல்நலனை கருதி நாம் குளிக்கவில்லை, இது வழக்கமாக சமூகத்தில் பின்பற்றப்படும் விஷயம் என்பதால் குளிக்கிறோம். விடுமுறைக்காக ட்ரெக்கிங் செல்லும் போது, இசை விழாக்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும் போது குளிக்க முடியாத சூழல் ஏற்படும். அந்த சமயத்தில் மட்டும் குளியல் அவசியமற்றதாகிறது.” என்று அவர் கூறுகிறார்.
இனி வரும் காலகட்டத்தில் மக்கள் தினசரி பழக்கத்தில் இருந்து குளியலை கைவிட ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா?
கண்டிப்பாக இல்லை என்கிறார் சதர்டன். ”குளியல் நடைமுறை, சமூகத்தில் ஆழமாக வேரூன்றி விட்டது. இனி அதை மாற்றமுடியாது” என்கிறார்.
நான் எப்போதாவது குளிப்பது, சிலருக்கு வித்தியாசமாகப் படுகிறது. நான் மெக்கார்த்தியின் அணுகுமுறையை பின்பற்றப் போகிறேன்.
“குளிப்பது சமூக சடங்காகவே நான் பார்க்கிறேன். பெரும்பாலும் சுற்றியிருப்பவர்கள் முகம் சுளிப்பார்கள். நம் மீது நாற்றம் வீசும் என்ற பயத்தால் தான் குளிக்கிறோம். நானும் அந்த பயத்தை எதிர்கொண்டேன், ஆனால் இப்போது இல்லை. நான் நிம்மதியாக வாழ்கிறேன்." என்றார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)