You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"புல்வாமா விவகாரத்தை பாகிஸ்தான் திசையில் கொண்டு செல்வது எனக்கு தெரிந்தது"- சத்யபால் மாலிக் சிறப்பு நேர்காணல்
- எழுதியவர், சர்வப்ரியா சாங்வான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
“அசாதுதீன் ஒவைசிக்கு விஷயம் தெரியாது. அந்த நேரத்திலும் நான் புல்வாமா விவகாரம் பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். நம்முடைய தவறே இதற்குக் காரணம் என்று சொன்னேன்.
இதுகுறித்து விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். விசாரணை நடத்தப்படும் என்று நினைத்தேன். எனவே அந்த நேரத்தில் நான் ராஜினாமா செய்ய எந்த முகாந்திரமும் இல்லை,” என்று கூறுகிறார் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்.
புல்வாமா சம்பவத்திற்கு உள்துறை அமைச்சகம்தான் பொறுப்பு என்று பிபிசிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் கூறினார்.
எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துக் கூறியதாகவும் மாலிக் தெரிவித்தார். எனவே உள்துறை அமைச்சர் ஏதாவது செய்திருக்க வேண்டும். இதற்கு யார் பொறுப்போ அவர்கள்தான் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார்.
சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், 2019 புல்வாமா தாக்குதலுக்கு மத்திய அரசே பொறுப்பு என்பது உட்பட பல பரபரப்பான கூற்றுகளை சத்யபால் மாலிக் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு பல எதிர்வினைகள் இருந்தன. அவர் மீதும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன.
அவர் அந்த நேரத்திலேயே ஆளுநர் பதவியைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். தொடர்ந்து ஆளுநர் பதவியில் இருந்துவிட்டு, நாலரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேசுகிறார் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.
இதே கருத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். “எங்களிடமிருந்து பிரிந்த பிறகு மட்டும் ஏன் இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன என்று செய்தியாளர்கள் கேட்க வேண்டும்,” என்று அமித் ஷா கூறினார்.
அப்படியென்றால் உறவு முறிந்த பிறகு இப்படியெல்லாம் செய்யும் சத்யபால் மாலிக் சந்தர்ப்பவாதியா?
"புல்வாமாவில் தாக்குதல் நடந்த அன்றே, இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன். ஆனால் அமைதியாக இருக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. அப்போதுதான் அவர்கள் பாகிஸ்தானை நோக்கிய திசையில் கொண்டு செல்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது.
அந்த நேரத்தில் அவர்களை எதிர்ப்பது ஆபத்தான வேலை. ஏனென்றால் அவர்கள் என்னை தேசத்துரோகி என்று அறிவித்திருப்பார்கள். விவசாயி இயக்கத்தின்போது இவர்கள் விவசாயிகளைப் புறக்கணிப்பதைப் பார்த்தபோதுகூட நான்தான் பிரச்னையை எழுப்பினேன்,” என்று பிபிசியிடம் பேசிய சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.
புதிய மற்றும் பழைய அறிக்கைக்கு இடையே முரண்பாடு?
பிரதமர் நரேந்திர மோதிக்கு ஊழலால் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்று கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் சத்யபால் மாலிக் மற்றொரு கூற்றைத் தெரிவித்திருந்தார்.
ஆனால் மேகாலயா ஆளுநராக இருந்தபோது சத்யபால் மாலிக், ராஜஸ்தானில் அவர் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் தான் காஷ்மீரில் பதவி வகித்த காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை அவர் குறிப்பிட்டார்.
காஷ்மீரில் தன்னிடம் இரண்டு கோப்புகள் வந்ததாகவும், ஆர்.எஸ்.எஸ்-இன் பெரிய நபர் ஒரு திட்டத்திலும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றொரு திட்டத்திலும் தொடர்புடையவர்களாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களில் முறைகேடு நடப்பதாக இந்தத் துறைகளின் செயலர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சத்யபால் மாலிக் இந்தத் திட்டங்களை ரத்து செய்தார்.
ஆனால், இதுபற்றி பிரதமரிடம் தெரிவித்தபோது, 'ஊழலில் எந்த சமரசமும் செய்யத் தேவையில்லை' என பிரதமர் கூறியதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
அப்படியானால் அவரின் தற்போதைய அறிக்கைக்கும் பழைய அறிக்கைக்கும் இடையே முரண்பாடு இல்லையா?
இதற்குப் பதிலளித்த சத்யபால் மாலிக், "ஆம். ஊழல் குறித்து அவருக்கு பிரச்னை எதுவும் இல்லை. உண்மையில் ஊழல் புகாருக்குப் பிறகுதான் அவர் என்னை கோவாவில் இருந்து நீக்கினார்.
ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் என்னை இடமாற்றம் செய்தார். காஷ்மீரில் திட்டங்களை ரத்து செய்த பிறகுதான் நான் அவரை சந்திக்கச் சென்றேன். நான் ரத்து செய்துவிட்டேன், நீங்கள் விரும்பினால் என்னை நீக்குங்கள் என்று சொன்னேன். ஆனால் ஊழலில் எந்த சமரசமும் இல்லை என்று அவர் சொன்னார்,” என்று குறிப்பிட்டார்.
அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார்
ஊழலுக்கு எதிராக நாட்டில் வேறு ஒரு முகம் அவருக்குத் தெரிகிறதா?
ஒருவரல்ல, பலர் எஞ்சியிருக்கிறார்கள், நிதீஷ் குமார் போல என்று மாலிக் பதில் அளித்தார்.
ஆனால் பிகாரில் நீண்ட காலமாக நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். பிகார் ஆளுநராக இருந்தபோது சத்யபால் மாலிக், பிகார் கல்வி முறை சீர்கெட்டுள்ளது என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு எப்படி நிதிஷ்குமாருக்கு க்ளீன் இமேஜ் இருக்கிறது என்று அவரால் சொல்ல முடியும்?
அவர் சிரித்துக்கொண்டே, 'இருந்தபோதிலும் ஒப்பீட்டளவில் மற்றவர்களைவிட அவர் மேம்பட்டவர்' என்றார்.
அரவிந்த் கேஜ்ரிவாலும், மாலிக் எழுப்பிய கேள்விகளை தனது பிரச்னையாக ஆக்கிக்கொள்கிறாரா?
இதற்கு பதிலளித்த அவர் “அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒப்பீட்டளவில் சிறந்தவர்” என்று கூறினார்.
ஆனால் கேஜ்ரிவாலின் அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே?
"தேர்தலுக்கு முன் அவர் கைது செய்யப்படுவார் என்று நான் நூறு சதவிகிதம் நினைக்கிறேன்," என்று மாலிக் பதிலளித்தார்.
அப்படியானால் அரவிந்த் கேஜ்ரிவால் நரேந்திர மோதியின் போட்டி முகமாக இருக்க முடியுமா?
"மோதிக்கு போட்டி முகமாக நான் யாரையும் சொல்லவில்லை. பொது மக்கள்தான் மோதிக்கு எதிரான முகமாக இருக்க வேண்டும். பொது மக்களுக்கும் மோதிக்கும் இடையே தேர்தல் நடக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா?
சத்யபால் மாலிக்கின் அரசியல் இன்னிங்ஸும் நீண்டது.
1974இல், அவர் சௌத்ரி சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளம் கட்சியின் சீட்டில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980-இல் மாநிலங்களவை எம்பி ஆனார். ஆனால் 1984-இல் காங்கிரசில் சேர்ந்து 1986-இல் மீண்டும் மாநிலங்களவை எம்பி ஆனார்.
போஃபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது எம்பி பதவிக்காலம் முடிவதற்கு முன்பே காங்கிரஸை விட்டு வெளியேறினார்.
பின்னர் 1989இல் ஜனதா தளம் டிக்கெட்டில் மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 2004இல் பாஜகவில் இணைந்தார்.
2012இல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2017இல் பிகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ஜம்மு-காஷ்மீர், கோவாவின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அவர், மேகாலயாவின் ஆளுநராக இருந்து 2022 அக்டோபரில் ஓய்வு பெற்றார்.
சத்யபால் மல்லிக் புதிய அரசியல் இன்னிங்ஸ் தொடங்குகிறாரா?
இதற்குப் பதிலளித்த அவர், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
அவர் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க விரும்புகிறார், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸை ஒன்றிணைக்க முயல்கிறார். எனவே அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பாத்திரத்தை வகிக்கிறாரா?
"என் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளேன். நான் வி.பி.சிங் அவர்களுடன் இருந்தபோது அந்த நாட்களில் ஒற்றுமை சாத்தியமாக இருக்கவில்லை.
எனவே அவர் "ஒருவருக்கு எதிராக ஒருவர்" என்ற சூத்திரத்தை வழங்கினார் அதாவது ஒரு வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளர். யார் தலைவராக ஆவார், யார் இல்லை என்ற நுணுக்கங்கள் எல்லாம் இதில் அடங்காது. ஏறக்குறைய எல்லா கட்சிகளும் இதை ஒப்புக் கொள்கின்றன,” என்று அவர் பதில் கூறினார்.
பாஜகவில் சேர்ந்தது ஏன்?
"நான் பாஜகவுக்கு மிகவும் தாமதமாகவே வந்தேன். நான் லோஹியாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவனாக இருந்தேன். இது என் கட்சி அல்ல என்று நான் நினைத்தேன். ஆனால் ஒட்டுமொத்த அமைப்பும் முடிவுக்கு வந்தது.
எல்லா கட்சிகளும் உடைந்து, லோக்தளம் நான்கு துண்டுகளாக உடைந்தது. வேறு வழியின்றி நான் பாஜகவில் சேர்ந்தேன். என்னுடைய பேச்சு பாஜகவினர் பேசுவதைப் போல இருக்காது. சரண் சிங், லோஹியாவின் தொண்டர் போலவே எனது பேச்சு இருக்கும்,” என்றார் அவர்.
நரேந்திர மோதியின் பிரபலத்திற்கு என்ன காரணம் என்று சத்யபால் மாலிக் நினைக்கிறார்?
"அந்த பிரபலம் நிர்வகிக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது. அவரது புகழ் இந்து-முஸ்லிம் தொடர்பானது. நான் பார்த்த வரையில் 2024இல் இவையெல்லாம் வேலை செய்யாது. மக்கள் அவரது விளையாட்டைப் புரிந்து கொண்டுவிட்டனர்.
வேலையின்மை, பணவீக்கம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 8 முதல் 10 பொதுக்கூட்டங்களை நான் நடத்துகிறேன். இப்போது மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்," என்று அவர் பதில் அளித்தார்.
'சிறைக்குச் செல்ல வேண்டும் என்றால் செல்வேன்'
76 வயதான சத்யபால் மாலிக் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருடைய பாதுகாப்புக்காக ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு சிபிஐயும் விசாரணைக்காக அவரது வீட்டிற்குச் சென்றது.
தன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் அல்லது சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்று சத்யபால் மாலிக் அஞ்சவில்லையா?
“நான் இதற்கு முன்பு பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். நான் சரியான பக்கத்தில் இருக்கிறேன், சரியான கேள்வியில் நிற்கிறேன் என்ற எனது உறுதிப்பாட்டிலிருந்து எனது தன்னம்பிக்கை வருகிறது. இதற்காக நான் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், நான் போவேன்,” என்று அவர் பதில் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்