சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம் பிடித்த துர்காதேவி யார்? பகத் சிங் மனைவியாக நடித்தது ஏன்?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடியில் பஞ்சாப் கேசரி லாலா லாஜபத் ராய் இறந்தபோது, 1928 டிசம்பர் 10 ஆம் தேதி புரட்சியாளர்களின் கூட்டம் துர்காதேவி தலைமையில் லாகூரில் நடந்தது.

அவர் 'இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் குடியரசுக் கட்சி'யின் அறிக்கையை எழுதிய புரட்சியாளர் பகவதி சரண் வோஹ்ராவின் மனைவி ஆவார். இந்த கூட்டத்தில் லாலா லாஜ்பத் ராயின் மரணத்திற்கு பழிவாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யர் தனது ‘வித்அவுட் ஃபியர், தி லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற புத்தகத்தில், “ஸ்காட்டின் கொலையை உங்களில் யாரால் செய்யமுடியும் முடியும் என்று துர்கா தேவி கேட்டார். பகத் சிங், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத் மற்றும் ஜெய்கோபால் ஆகியோர், தாங்கள் தயார் என்று கையை உயர்த்தினர். தனியாளாக இந்தப்பணியை செய்ய சுக்தேவ் முதலில் விரும்பினார். ஆனால் அவருக்கு உதவ மேலும் நான்கு தோழர்கள் பகத் சிங், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத் மற்றும் ஜெய்கோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,” என்று எழுதியுள்ளார்.

1928 டிசம்பர் 17 ஆம் தேதி, பகத்சிங்கும் ராஜ்குருவும் லாலா லாஜ்பத் ராயின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் ஆங்கிலேய அதிகாரி சாண்டர்ஸை மாலை 4 மணியளவில் கொன்றனர். அந்த நேரத்தில் தலைமறைவாக இருந்த பகவதிசரண் வோஹ்ராவின் வீட்டிற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு சுக்தேவ் சென்றார்.

'உங்களிடம் கொஞ்சம் பணம் இருக்கிறதா?' என்று அவர் பகவதி சரணின் மனைவி துர்காதேவியிடம் கேட்டார். கணவர் கொடுத்திருந்த 500 ரூபாயை துர்கா அளித்தார். ’சிலரை லாகூரிலிருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களுடன் நீங்கள் லாகூரிலிருந்து வெளியே செல்ல முடியுமா?’ என்று சுக்தேவ் அவரிடம் கேட்டார். அந்த நாட்களில் லாகூரில் உள்ள மகளிர் கல்லூரியில் துர்கா பாபி இந்தி பேராசிரியராக இருந்தார். மூன்று நான்கு நாட்களில் கிறிஸ்துமஸ் விடுமுறை வரவிருந்தது. கிறிஸ்துமஸுக்கு முன்பே அவருக்கு விடுமுறை கிடைக்கச்செய்வதாக சுக்தேவ் கூறினார்.

மல்விந்தர் ஜீத் சிங் வாடாய்ச் தனது 'பகத் சிங், தி எடர்னல் ரெபெல்' புத்தகத்தில், "மறுநாள் சுக்தேவ், பகத் சிங் மற்றும் ராஜகுரு என் வீட்டிற்கு வந்தார்கள் என்று துர்கா பாபி என்னிடம் கூறினார். அதுவரை நான் பகத்சிங்கை முடியுடன்தான் பார்த்திருக்கிறேன். உனக்கு இவர்களை அடையாளம் தெரிகிறதா என்று சுக்தேவ் கேட்டார். ராஜ்குருவை நான் முன்பு சந்தித்ததே இல்லை. எனவே நான் தெரியவில்லை என்றேன். சுக்தேவ் புன்சிரிப்புடன் பகத்சிங்கை காட்டி, இவர் அவரே தான். ஆரஞ்சு இவருக்கு மிகவும் பிடிக்கும் என்றார். இதைக்கேட்டதும் பகத் சிங் சத்தமாகச் சிரித்தார். அவரது சிரிப்பில் இருந்து அவர் பகத்சிங் என்பதை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.

பகத் சிங் சிரித்துக்கொண்டே,"அண்ணி, உங்களாலேயே என்னை அடையாளம் காண முடியாதபோது, பிரிட்டிஷ் போலீஸ்கார்களால் என்னை அடையாளம் காண முடியாது.” என்று சொன்னார்,” என்று எழுதியுள்ளார்.

கணவன் மனைவியாக நடித்த பகத் சிங்கும் துர்காவும்

மறுநாள் காலை அதாவது டிசம்பர் 20 அன்று, பகத் சிங் ஒரு அதிகாரி போல் உடையணிந்து குதிரை வண்டியில் ஏறினார். ஓவர் கோட் அணிந்திருந்த அவர் முகம் தெரியாதவாறு கோட்டின் காலரை மேலே உயர்த்தி வைத்திருந்தார். அவருடன் துர்கா பாபி, விலையுயர்ந்த புடவை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து, அவரது மனைவியாக பயணம் செய்தார். துர்கா பாபியின் மூன்று வயது மகன் ஷாச்சி, பகத்சிங்கின் மடியில் இருந்தான். ராஜ்குரு அவரது உதவியாளர் வேடத்தில் இருந்தார். பகத் சிங் மற்றும் ராஜகுரு இருவரும் ரிவால்வர்களை வைத்திருந்தனர்.

லாகூர் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் இருந்ததால் அது கோட்டை போல் காட்சியளித்தது. இந்த பயணத்திற்காக பகத் சிங்கிற்கு ரஞ்சித் என்றும் துர்கா பாபிக்கு சுஜாதா என்றும் பெயரிடப்பட்டது. குல்தீப் நய்யர் தனது 'வித்தவுட் ஃபியர், தி லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்' என்ற புத்தகத்தில்,"அந்த நாட்களில் ஒவ்வொரு முதல் வகுப்பு பயணியும் ரயிலில் ஏறும் முன் தனது பெயரைச் சொல்ல வேண்டும். பகத் சிங்கிடம் பெயரைச் சொல்லுமாறு டி.சி. கேட்டார். அதற்குப் பதிலாக தனது டிக்கெட்டை அவர் அசைத்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் தங்கள் பெட்டியை அடைந்தபோது, அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் தனது சக ஊழியரிடம் 'இவர்கள் சாஹிப்கள். குடும்பத்துடன் பயணம் செய்யும் மூத்த அதிகாரிகள்,’ என்று கிசுகிசுத்தார். ராஜகுரு அவர்களின் வேலைக்காரராக மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். டேராடூன் எக்ஸ்பிரஸ் சிறிது நேரத்தில் லாகூரில் இருந்து புறப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்தபடி, ரயிலில் ஏறும் மனைவிகள் மற்றும் குழந்தைகளை கைக்குட்டையை அசைத்து வழி அனுப்பிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் கண்களுக்கு முன்னால் இருந்தே அவர்கள் தப்பிச்சென்றனர். அப்போது பகத்சிங்கைத் தேடும் பணியில் 500 பாதுகாப்புப் படையினர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

'சகோதரருடன் வருகிறேன்' என்று தந்தி

பயணத்தை விவரித்த துர்கா பாபி, மல்விந்தர் ஜித் சிங் வாராய்ச்சிடம், "நாங்கள் முதல் வகுப்பு கூபேயில் இருந்தோம். ஒரு வயதான தம்பதி எங்களுடன் சிறிது தூரம் பயணித்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கிவிட்டனர். ஒரு பயணி மட்டும் வெகுநேரம் வரை எங்களுடன் இருந்தார். ஆனால் அவர் வழியெங்கும் உறங்கிக் கொண்டே இருந்தார். எங்களை யாரும் கண்காணிப்பதாக ஒரு கணம்கூட எங்களுக்குத்தோன்றவில்லை,” என்று குறிப்பிட்டார்.

ரயில் கான்பூரை அடைந்ததும் அவர்கள் மூவரும் கல்கத்தா செல்லும் ரயிலைப் பிடித்தனர். இதற்கிடையில் உளவாளிகளை ஏமாற்ற பகத்சிங் ஒரு முழு நாடகத்தை நடத்தினார். ஐ டி கெளட் தனது ' மார்டியர்ஸ் ஏஸ் ப்ரைட்க்ரூம்' என்ற புத்தகத்தில், "முழுப் பயணத்தையும் இயல்பாக்க, சாஹிப், லக்னெளவின் ’சார்பாக்’ ஸ்டேஷனில் டீ குடிக்க இறங்கினார். வேலைக்காரர் குழந்தைக்கு பால் வாங்க வேறு பக்கம் சென்றார். பாலை கொடுத்த பிறகு ராஜ்குரு வேறுதிசையில் சென்றுவிட்டார். இங்கிருந்து துர்கா பாபி கல்கத்தாவில் உள்ள தனது தோழியான சுசீலா தீதிக்கு ஒரு தந்தி அனுப்பினார், அதில் 'சகோதரருடன் வருகிறேன் - துர்காவதி' என்று எழுதப்பட்டிருந்தது. அந்நாட்களில் துர்கா பாபியின் கணவர் பகவதி சரண் வோஹ்ரா, சுசீலா தீதியுடன் தங்கியிருந்தார். தன் சகோதரனுடன் கல்கத்தா வரும் துர்காவதி யார் என்று தந்தியைப் பார்த்து இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.

1928 டிசம்பர் 22 ஆம் தேதி காலை, சுசீலா திதி மற்றும் பகவதிசரண் வோஹ்ரா, துர்கா பாபியை அழைத்துச் செல்ல கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தை அடைந்தனர். சத்யநாராயண் ஷர்மா தனது 'கிராந்திகாரி துர்கா பாபி' என்ற புத்தகத்தில், "அந்த நாட்களில் பகவதிசரண் வோஹ்ரா தலைமறைவாக இருந்தார். ரயில்வே கூலி உடையில், பெரிய தாடியுடன் முழங்கால் வரை வேட்டி அணிந்திருந்தார். மனைவி துர்கா, மகன் ஷாச்சி மற்றும் பகத் சிங் ஆகியோரைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். திடீரென்று அவர் வாயிலிருந்து, 'துர்கா உன்னை இன்று அடையாளம் கண்டுகொண்டுவிட்டேன்’ என்ற வாக்கியம் வெளியானது.

துர்கா பாபி, 1907 அக்டோபர் 7 ஆம் தேதி அலகாபாத்தில் உள்ள ஷாஜாத்பூரில் பிறந்தார். இவரது தந்தை பாங்கே பிஹாரி லால் பட் அலகாபாத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்தார்.1918 இல் துர்கா, பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் பகவதி சரண் வோஹ்ராவை மணந்தார். 1925 டிசம்பர் 3 ஆம் தேதி அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கணவருடன் அவர் வாழ்ந்தபோது புரட்சியாளர்களை ஆதரிக்கத் தொடங்கினார்.

”புரட்சியாளர்களுக்காக சிறைக்கு அனுப்பப்படும் துணிகளுக்குள், குறியீட்டு வார்த்தைகளில் எழுதப்பட்ட செய்திகள் கொண்ட காகிதங்களை வைத்து தைத்து துர்கா பாபி அனுப்புவார். எருக்கு பால் மற்றும் வெங்காயச் சாறு ஆகியவற்றால் எழுதப்பட்ட செய்திகள் அனுப்பப்பட்டன. பால் அல்லது சாற்றை உலர்த்திய பின் எழுத்துக்கள் எதுவும் தெரியாது. விளக்கின் சுடரில் காட்டும்போது எழுத்துக்கள் தெரியும். அதை புரட்சியாளர்கள் படித்துக்கொள்வார்கள்,” என்று சத்யநாராயண் ஷர்மா எழுதியுள்ளார்.

குண்டுவெடிப்பில் கணவர் வீரமரணம் அடைந்த பிறகு, தனக்குத் தெரிந்த கேவல் கிருஷ்ணாவின் வீட்டில் 15 நாட்கள் முஸ்லிம் பெண் போல அவர் வாழ்ந்தார். அவர் பர்தா அணியும் வழக்கமுடையவர் என்று அக்கம்பக்கத்தினரிடம் சொல்லப்பட்டது. அவரது கணவர் கிருஷ்ணாவின் நண்பர் என்றும் அந்த நேரத்தில் ஹஜ் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கணவர் திரும்பிவரும் வரை அவர் தங்களுடன் இருப்பார் என்றும் கூறப்பட்டது. தனது கட்சி உறுப்பினர்களுக்காக ஜெய்ப்பூரில் இருந்து இரண்டு முறை கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்களை கொண்டு வந்ததாகவும், பிரிட்டிஷ் காவல்துறைக்கு அவர் மீது எந்த சந்தேகமும் இருக்கவில்லை என்றும் துர்கா பாபி என்னிடம் கூறினார்,” என்று சத்யநாராயண் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

பகத்சிங்கை கல்கத்தாவில் விட்டுவிட்டு லாகூர் திரும்பிய துர்கா பாபி தனது ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.

சார்ஜென்ட் டெய்லரின் கொலை

1930 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் புரட்சிகர நடவடிக்கைகள் வேகமாக நடக்கவில்லை என்று சந்திரசேகர் ஆசாத் நினைத்தார். எனவே துர்கா பாபி, விஸ்வநாத் வைசம்பாயன் மற்றும் சுகதேவ் ஆகியோரை அவர் பம்பாய்க்கு அனுப்பினார். அங்கு அவர்கள் போலீஸ் கமிஷனர் லார்ட் ஹெய்லியைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களது மோட்டார் கார் லாமிங்டன் சாலையில் உள்ள காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மலபார் ஹில்லில் இருந்து ஒரு கார் வருவதை அவர்கள் பார்த்தனர். காரில் கவர்னரின் கொடி இருந்ததாக நினைத்தனர். ஒரு ஆங்கிலேய அதிகாரி காரில் இருந்து இறங்கினார்.

”பிருத்வி சிங் ஆசாத், 'சுடு' என்று உத்தரவிட்டார். உடனே துர்கா பாபி துப்பாக்கியால் சுட்டார். சுக்தேவும் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூட்டில் சார்ஜென்ட் டெய்லரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டனர். துர்கா பாபியின் ஓட்டுநர் ஜனார்தன் பாபட் உடனடியாக காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றார். சம்பவம் நடந்த உடனேயே, துர்கா தேவி மற்றும் சுக்தேவ் ராஜ் கான்பூருக்கு புறப்பட்டனர்,” என்று சத்யநாராயண் ஷர்மா எழுதியுள்ளார்.

" துர்கா பாபி இந்தச் சம்பவத்தின் விவரங்களை என்னிடம் சொன்னார். ‘நாங்கள் பம்பாயிலிருந்து கிளம்பும்போது மிகவும் பயந்தோம். எங்களைப் பார்த்ததும், சந்திரசேகர் ஆசாத் கோபத்தில் கொந்தளித்தார். திட்டம் வெற்றியடைந்திருந்தால், ஆசாத் ஒருவேளை தவறுகளை கவனித்திருக்கமாட்டார். ஆனால் ஹேய்லிக்கு பதிலாக போலீஸ் சார்ஜென்ட் மற்றும் அவரது மனைவியைக் கொன்றது வீண் அபாயம். அது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால் சிறிது நேரம் கோபமாக இருந்த பிறகு ஆசாத் சகஜமாகிவிட்டார்’ என்று துர்கா பாபி கூறினார்,” என்று ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.

பகத்சிங்கை சந்திக்க லாகூரிலிருந்து டெல்லி வந்த துர்கா

சென்ட்ரல் அசெம்ளியில் பகத்சிங் வெடிகுண்டு வீசிய நாளன்று அவரைச் சந்திக்க துர்கா பாபி டெல்லி வந்தார். பின்னர் அவர் மல்விந்தர் ஜித் சிங் வாராய்ச்சிற்கு அளித்த பேட்டியில், "நான் சியால்கோட்டில் இருந்தபோது, என் கணவரிடமிருந்து ஒரு தூதுவர் மூலம் எனக்கு கடிதம் வந்தது. சுசீலா தீதியுடன் இரண்டு நாட்களுக்கு உடனடியாக டெல்லிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நாங்கள் லாகூருக்கு பஸ்ஸில் சென்றோம். அங்கிருந்து இரவு ரயில் ஏறி ஏப்ரல் 8 அதிகாலை டெல்லியை அடைந்தோம். நாங்கள் குடேசியா கார்டனுக்குச் சென்றோம், அங்கு எங்களைச் சந்திக்க சுக்தேவ் பகத்சிங்கை அழைத்து வந்திருந்தார். லாகூரிலிருந்து எங்களுடன் உணவு கொண்டு வந்திருந்தோம். அதை நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்."என்று கூறியுள்ளார்.

துர்கா பாபி வாராய்ச்சிடம், "சுசீலா தீதி தன் விரலை அறுத்து ரத்தத்தால் பகத்சிங்கின் நெற்றியில் திலகமிட்டார். பகத் சிங் எந்தப் பணிக்காக செல்கிறார் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. அவர் ஏதோ 'ஆக்‌ஷனுக்காக' செல்கிறார் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. அசெம்ப்ளி அருகே சென்றபோது அங்கு நாலாபுறம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது பகத்சிங்கையும் படுகேஷ்வர் தத்தையும் போலீஸ் காரில் ஏற்றிச் செல்வதைக் கண்டோம். என் மடியில் அமர்ந்திருந்த என் மகன் ஷாச்சி பகத்சிங்கைப் பார்த்ததும் 'லம்பு சாச்சா'(உயரமான சித்தப்பா) என்று கத்தினான்.

நான் உடனே அவன் வாயை கையால் மூடினேன். பகத்சிங்கும் ஷாச்சியின் குரலைக் கேட்டு எங்களைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால் கணநேரத்தில் அவர் எங்கள் கண்களில் இருந்து மறைந்துவிட்டார்,” என்று தெரிவித்தார்.

மகாத்மா காந்தியை சந்தித்த துர்கா பாபி

பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து, சந்திரசேகர் ஆசாத் இந்த மரண தண்டனையை நிறுத்தும் முயற்சிகளில் இறங்கினார். மகாத்மா காந்தியை சந்திக்க துர்கா பாபியை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்தார்.

ஆனால் பகத் சிங் தனது மரண தண்டனையை நிறுத்துவதை எதிர்த்தார். 1931 பிப்ரவரி 26 அன்று, காஜியாபாத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர் ரகுநந்தன் ஷரன், துர்கா பாபி மற்றும் சுசீலா தேவியுடன் இரவு 11 மணியளவில் தர்யாகஞ்சில் உள்ள டாக்டர் எம்.ஏ.அன்சாரியின் வீட்டை அடைந்தார். அங்கே காந்திஜி தங்கியிருந்தார்.

'ஜவஹர்லால் நேரு வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்தார். அவர், மகளிர் இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். துர்கா பாபி காந்திஜியிடம், சந்திரசேகர் ஆசாத்தின் ஆலோசனையின் பேரில் தான் அவரை சந்திக்க வந்ததாகவும், பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோரின் தூக்கு தண்டனையைத் தடுக்க அவர் முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த மூவரின் மரண தண்டனையை மகாத்மாவால் நிறுத்த முடிந்தால், புரட்சியாளர்கள் அவர் முன் சரணடைவார்கள் என்ற ஆசாத்தின் செய்தியையும் மகாத்மாவிடம் சொன்னார். ஆனால் காந்திஜி இந்த ஆலோசனையை ஏற்கவில்லை. தனிப்பட்ட முறையில் பகத்சிங்கை பிடிக்கும். ஆனால் அவரது பணியாற்றும் முறைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று காந்தி கூறினார்,” என்று துர்கா பாபியின் வாழ்க்கை வரலாற்றில் சத்யநாராயண் ஷர்மா எழுதியுள்ளார்.

காந்திஜியின் பதில் பிடிக்காத துர்கா பாபி அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்பிச் சென்றார்.

கைது செய்யப்பட்ட துர்கா

பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு, 1931 மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இதற்குச் சில நாட்களுக்கு முன்பு 1931 பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த போலீஸ் என்கவுண்டரில் சந்திரசேகர் ஆசாத் கொல்லப்பட்டார்.

சரணடைந்து கைதாகி பின்னர் பிற வழிகளில் நாட்டிற்கு சேவை செய்ய துர்கா பாபி முடிவு செய்தார். 1931 செப்டம்பர் 12 ஆம் தேதி லாகூர் செய்தித்தாள்களில் துர்கா பாபியின் அறிக்கை வெளியிடப்பட்டது.

மதியம் 12 மணியளவில் அவரது வீட்டில் இருந்து போலீசார் அவரை கைது செய்தனர். "என்னை கைது செய்ய மூன்று லாரிகளில் போலீசார் வந்தனர். என்னை லாகூர் கோட்டைக்கு கொண்டு சென்றனர். உங்கள் தோழர்களிடம் இருந்து உங்களைப்பற்றிய எல்லா விவரங்களும் கிடைத்துவிட்டன. உங்களின் அனைத்து பதிவுகளும் எங்களிடம் உள்ளன" என்று எஸ்எஸ்பி ஜென்கின்ஸ், மிரட்டும் தொனியில் என்னிடம் சொன்னார். "எனக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால், என் மீது வழக்குத் தொடருங்கள், இல்லையெனில் என்னை விட்டுவிடுங்கள் என்று நான் பதிலளித்தேன்,” என்று பின்னர் துர்கா பாபி அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆனால் ஜென்கின்ஸ் அவர் பேச்சைக் கேட்கவில்லை. முதல் இரவு அவர் பயங்கரமான பெண் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக காவல்துறையால் எந்த ஆதாரங்களையும் சேகரிக்க முடியாததால், அவர் 1932 டிசம்பரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் லாகூரிலிருந்து வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.

1936 இல், துர்கா பாபி லாகூரிலிருந்து காஜியாபாத்திற்குச் சென்று அங்குள்ள பியாரேலால் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார். 1940 இல் அவர் லக்னெள மாண்டசெரி பள்ளியை நிறுவினார். பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தக்கட்டிடத்தை திறந்து வைத்தார். உடல்நிலை சரியில்லாமல் போனதால் 1983 ஏப்ரலில் அவர் பள்ளியில் இருந்து விடுப்பு எடுத்தார். 1999 அக்டோபர் 15 ஆம் தேதி துர்கா பாபி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: