உத்தம் சிங்: ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு 21 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கியது எப்படி?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத துயரமாகப் பதிந்திருக்கும் ஜாலியன்வாலா பாக் படுகொலை 1919இல் நடந்தது. அதை அரங்கேற்றியவர்களை பழிவாங்க 21 ஆண்டுகள் காத்திருந்தார் உத்தம் சிங்.

'பழிவாங்கல் என்பது ஆற வைத்து பரிமாறப்படும்போது மட்டுமே மிகச் சுவையாக இருக்கும் உணவு பதார்த்தம் போன்றது.'

மாரியோ புஸோ எழுதிய தி காட் ஃபாதர் என்ற ஆங்கில நாவலில் கூறப்படும் ஒரு வசனம் இது.

இந்த வசனம் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக 21 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கிய உத்தம் சிங் வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

அதற்குள் ஜாலியன்வாலா பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் ரெஜினோல்ட் டயர் இறந்துவிட்டார். ஆனால் அப்போது பஞ்சாப் மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ ட்வயர், உத்தம் சிங்கின் தோட்டாக்களுக்கு பலியானார். அவர்தான் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.

ஜாலியன்வாலா பாக் சம்பவம் நடந்த போது உத்தம் சிங் எங்கே இருந்தார்?

ஜாலியன்வாலா பாக்கில் படுகொலைகள் நடந்த நேரத்தில் உத்தம் சிங் அங்கே இருந்ததாகவும், அங்கிருந்த மண்ணை எடுத்து, ஒரு நாள் இந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவேன் என்று சபதம் செய்ததாகவும் பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் உத்தம் சிங் தொடர்பாக நன்கு அறியப்பட்ட புத்தகம்,’Patient Assassin’ ஐ எழுதிய பிரபல பிபிசி தொகுப்பாளர் அனிதா ஆனந்த் இதை ஏற்கவில்லை.

​​"உத்தம் சிங்குக்குத்தான் அன்று அவர் எங்கே இருந்தார் என்று தெரியும். அன்று உத்தம் சிங் எங்கே இருந்தார் என்று கண்டுபிடிக்க நான் கடுமையாக முயற்சித்தேன், ஆனால் அதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை,” என்கிறார் அனிதா ஆனந்த்.

"உத்தம் சிங்கின் பெயரை ஜாலியன்வாலா பாக் உடன் எப்போதுமே இணைக்கக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் கடுமையாக முயற்சித்தனர், ஆனால் அவர்களின் பிரச்சாரம் வெற்றி பெறவில்லை. உத்தம் சிங் அப்போது பஞ்சாபில் இருந்தார். ஆனால் துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் அவர் திடலில் இருக்கவில்லை என்று தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன்,” என்று அனிதா குறிப்பிட்டார்.

இந்தியர்களைப் பற்றி ட்வயரின் கருத்து

ஜாலியன் வாலாபாக் படுகொலைகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான மைக்கேல் ஓ'ட்வயர் யார் என்பதும், ஓய்வு பெற்று இந்தியாவிலிருந்து திரும்பிய பிறகு அவர் லண்டனில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் இப்போது நாம் தெரிந்துகொள்வோம்.

"சர் மைக்கேலின் பணிக்காலம் இந்தியாவில் 1919 ஆம் ஆண்டிலேயே முடிவடைந்துவிட்டது, ஆனால் அவர் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் மூலம் அதன் பிறகும் அவர் அறியப்பட்டார். பஞ்சாபில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் ஒவ்வொரு மேடையிலும் நியாயப்படுத்தினார்," என்று அனிதா ஆனந்த் விளக்குகிறார்,

"அவர் வலதுசாரிகளின் மிகப்பெரிய 'போஸ்டர் பாய்' ஆனார். அவர் தேசியவாதிகளை கடுமையாக வெறுத்தார். இந்தியாவில் பணிபுரிந்தபோது இந்திய மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் நேசித்த பல ஆங்கிலேயர்கள் இருந்தனர். ஆனால் மைக்கேல் ஓ'ட்வயர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல. அவர் ஒருபோதும் இந்தியர்களை நம்பவில்லை,” என்று அனிதா குறிப்பிட்டார்.

"இந்திய மக்கள் இனரீதியாக குறைபாடுடையவர்கள் என்றும் அவர்கள் தங்களைத் தாங்களே ஆள முடியாது என்றும் மைக்கேல் நம்பினார். ஆங்கிலேயர்கள் கண்டிப்பாக இந்தியாவில் தங்க வேண்டும் என்றும் இந்தியா கை நழுவிப்போனால் முழு பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் சீட்டுக்கட்டு போல சரிந்துவிடும் என்றும் அவர் எண்ணினார்" என அனிதா ஆனந்த் சுட்டிக்காட்டினார்.

உத்தம் சிங் 1933 இல் லண்டனை அடைந்தார்

உத்தம் சிங் போலி பாஸ்போர்ட் மூலம் 1933-ம் ஆண்டு பிரிட்டனுக்குள் நுழைந்தார். 1937 இல், அவர் லண்டனில் உள்ள ஷெப்பர்ட் புஷ் குருத்வாராவில் காணப்பட்டார்.

அவர் நல்ல சூட் அணிந்திருந்தார். தாடியை மழித்திருந்த அவர், அங்கிருந்தவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு நபர் உத்தம் சிங்கால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் பெயர் ஷிவ் சிங் ஜோஹல். ஒரு சிறப்பு பணியை முடிக்க தான் இங்கிலாந்து வந்ததாக ஒரு ரகசியத்தை உத்தம் சிங் அவருடன் பகிர்ந்து கொண்டார். கான்வென்ட் கார்டனில் உள்ள அவரது 'பஞ்சாப் உணவகத்திற்கு' உத்தம் சிங் அடிக்கடி செல்வது வழக்கம்.

ஆல்ஃபிரட் டிரேப்பர் தனது 'அம்ரித்சர்-தி மாசாக்கர் தட் என்டெட் தி ராஜ்' புத்தகத்தில்," 1940 மார்ச் 12 ஆம் தேதி உத்தம் சிங் தனது நண்பர்கள் பலரை பஞ்சாபி விருந்துக்கு அழைத்தார். உணவின் முடிவில் அனைவருக்கும் லட்டுகளை அளித்தார். அனைவரும் கிளம்பும்போது, அடுத்த நாள் லண்டனில் ஒரு அதிசயம் நடக்கப் போகிறது, அது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைக்கும் என்று உத்தம் சிங் அறிவித்தார்,” என்று எழுதியுள்ளார்.

காக்ஸ்டன் ஹாலில் 'முகமது சிங் ஆசாத்'

1940 மார்ச் 13 ஆம் தேதி லண்டன் கண் விழித்தபோது ​​சுற்றிலும் பனி போர்வையாக இருந்தது. உத்தம் சிங் தனது அலமாரியில் இருந்து சாம்பல் நிற சூட்டை எடுத்தார். முகமது சிங் ஆசாத், 8 மார்னிங்டன் டெரஸ், ரீஜண்ட்ஸ் பார்க், லண்டன் என்று எழுதப்பட்டிருந்த அடையாள அட்டையை தனது கோட்டின் மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.

உத்தம் சிங் 8 தோட்டாக்களை எடுத்து தனது கால்சட்டையின் இடது பாக்கெட்டிலும், ஸ்மித் & வெசன் மார்க் 2 ரிவால்வரை தனது கோட்டிலும் வைத்துக்கொண்டார்.

இந்த நாளுக்காக அவர் 21 வருடங்கள் காத்திருந்தார்.

அவர் மத்திய லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலுக்கு வந்தபோது ​​​​யாரும் அவரை சோதனை செய்யவில்லை என்பதோடு கூடவே நிகழ்ச்சிக்கான டிக்கெட் உள்ளதா என்றுகூடப்பார்க்கவில்லை.

"உத்தம் தனது தொப்பியைக் கீழே இறக்கிய நிலையில் அணிந்திருந்தார். அவர் தனது ஓவர்கோட்டை ஒரு கையில் அழகாக மடித்து வைத்திருந்தார். இந்திய அரசின் செயலாளரும் அங்கு வருவதாக இருந்தார். ஆனாலும்கூட வியக்கத்தக்க வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. ஹாலுக்குள் கடைசியாக நுழைந்தவர்களில் உதமும் ஒருவர்,” என்று அனிதா ஆனந்த் குறிப்பிட்டார்.

மைக்கேல் ஓ' ட்வயரின் நெஞ்சை நோக்கி குறி

இரண்டு மணிக்கு காக்ஸ்டன் ஹாலின் கதவுகள் திறந்தபோது, ​​அங்குள்ள 130 நாற்காலிகள் சில நிமிடங்களில் நிரம்பிவிட்டன. மைக்கேல் ஓ' ட்வயரின் இருக்கை மண்டபத்தில் முன் வலதுபுறத்தில் இருந்தது.

உத்தம் சிங் பின்னால் செல்வதற்கு பதிலாக, வலது பக்கம் உள்ள பாதையில் சென்றார். மெதுவாக நடந்து நான்காவது வரிசையை அடைந்தார்.

Michael O'Dwyer அவரிடமிருந்து சில அடி தூரத்தில் அமர்ந்திருந்தார் மற்றும் அவரது முதுகு உத்தம் சிங்கை நோக்கி இருந்தது.

"உத்தம் சிங் புன்னகைத்துக் கொண்டிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர். அவர் அங்குலம் அங்குலமாக முன்னேறினார். உரை முடிந்ததும் மக்கள் தங்கள் சாமான்களை எடுக்கத் தொடங்கினர். உத்தம் சிங் கையை நீட்டியவாறு ட்வயரை நோக்கி நகர்ந்தார். அவர் தன்னுடன் கைகுலுக்க வருவதாக ட்வயர் நினைத்தார். ஆனால் அப்போதுதான் உத்தம் சிங்கின் கையில் ரிவால்வரைப் பார்த்தார். அதற்குள் உத்தம் சிங் அவருக்கு மிக அருகில் வந்துவிட்டார். அப்போது ரிவால்வர் கிட்டத்தட்ட ட்வயரின் கோட்டைத் தொட்டிருந்தது. உத்தம் நேரம் கடத்தாமல் சுட்டார். தோட்டா அவரது விலா எலும்புகளை உடைத்து இதயத்தின் வலது பக்கத்திலிருந்து வெளியேறியது,” என்று அனிதா ஆனந்த் விவரிக்கிறார்.

ட்வயர் கீழே முழுவதுமாக சரிவதற்கு முன்பாகவே உத்தம் சிங் இரண்டாவது முறை சுட்டார். அந்த தோட்டா முதல் புல்லட்டிற்கு சற்று கீழே முதுகில் நுழைந்தது. Sir Michael O'Dwyer கிட்டத்தட்ட ஸ்லோ மோஷனில் தரையில் விழுந்து வெறுமையான கண்களால் கூரையை பார்த்தார்.

இந்திய அரசின் செயலாளரும் சுடப்பட்டார்

இதைத் தொடர்ந்து மேடையில் நின்றிருந்த இந்திய அரசின் செயலாளர் லார்ட் ஜெட்லேண்டின் மார்பைக் குறிவைத்தார். இரண்டு தோட்டாக்கள் அவரது உடலின் இடது பக்கத்தை தாக்கியது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவர் நாற்காலியில் சரிந்தார்.

இதற்குப் பிறகு, உத்தம் சிங் தனது கவனத்தை பம்பாயின் முன்னாள் கவர்னர் லார்ட் லாமிங்டன் மற்றும் பஞ்சாபின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் சர் சூய் டென் மீது திருப்பினார்.

அன்று உத்தம் சிங்கின் ஒவ்வொரு தோட்டாவும் இலக்கைத் தாக்கியது. திட்டப்படி அன்று நான்கு பேர் இறந்திருக்க வேண்டும், ஆனால் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.

ஒரு பெண் மூலம் பிடிபட்ட உத்தம் சிங்

உத்தம் சிங் சுடுவதை நிறுத்தியபோது, ​​அவரது ரிவால்வரின் பீப்பாய் சூடாக இருந்தது. 'வழியை விடு, வழியை விடு' என்று கத்திக் கொண்டே ஹாலின் வெளிக் கதவை நோக்கி அவர் ஓடினார்.

உத்தம் சிங் பற்றிய மற்றொரு புத்தகமான 'உத்தம் சிங் ஹீரோ இன் தி காஸ் ஆஃப் இந்தியன் ஃப்ரீடம்' ஐ எழுதிய ராகேஷ் குமார், "ட்வயரை கொன்றுவிட்டு உதம் சிங் ஹாலின் பின்புறம் ஓடினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த பெர்தா ஹெர்ரிங் என்ற பெண்மணி அவரை நோக்கிப்பாய்ந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

"அவர் ஒரு உயரமான பெண், உத்தம் சிங்கின் தோளைப் பிடித்துக் கொண்டு தரையில் விழுந்தார். உத்தம் சிங் பெர்தாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார், ஆனால் கிளாட் ரிச்சஸ் என்ற மற்றொரு நபர் அவரை மீண்டும் தரையை நோக்கி இழுத்தார்," என்று ராகேஷ் குமார் கூறுகிறார்.

"அங்கிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஓடி வந்து, அவரது உள்ளங்கையில் கால்களை வைத்து நசுக்கினர். உத்தம் சிங்கை சோதனையிட்டபோது, ​​ஒரு சிறிய பெட்டியில் 17 தோட்டாக்கள், 1 கூர்மையான கத்தி மற்றும் அவரது கால்சட்டை பாக்கெட்டில் 8 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

சுடப்பட்ட ஆறு தோட்டாக்களில் நான்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன

அரை மணி நேரத்திற்குள் சுமார் 150 போலீசார் காக்ஸ்டன் ஹாலை சுற்றி வளைத்தனர், மேலும் உத்தம் சிங்கிடம் விசாரணை நடக்க ஆரம்பித்தது.

அங்கு என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் பிரிட்டனின் 'தி நேஷனல் ஆர்க்கிவ்ஸ்' இல் இப்போதும் உள்ளன.

"சார்ஜென்ட் ஜோன்ஸின் பாஸ், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டேட்டன், அறைக்குள் நுழைந்து, நான்கு காலியான கார்ட்ரிட்ஜ் பெட்டிகளை மேஜையில் வைத்தபோது, ​​உத்தம் சிங்கின் அமைதி முதன்முறையாக உடைந்தது. உத்தம் சிங் கோபமாக, 'இல்லை இல்லை, நான் நான்கு அல்ல, ஆறு தோட்டாக்களை சுட்டேன்’ என்று கூறினார். அந்த தோட்டாக்களை தேடி டேட்டன் மீண்டும் 'டியூடர் ரூமுக்கு' சென்றார்," என்று அது தெரிவிக்கிறது.

மைக்கேல் ஓ'ட்வயரின் உடலுக்குள் ஒரு தோட்டா இன்னும் பதிந்திருந்தது, மற்றொன்று மாநிலச் செயலாளர் லார்ட் ஜெட்லாண்டின் மார்பில் துளைத்துள்ளது என்பதும் உத்தம் சிங்குக்குத் தெரியாது.

'ஜெட்லாண்ட் இறந்தாரா இல்லையா? நான் அவரை இரண்டு முறை சுட்டேன்,” என்றார் உத்தம் சிங்.

எல்லா இடங்களிலும் கண்டனம், ஆனால் ஜெர்மனியில் பாராட்டு

இந்த சம்பவத்தை அடுத்து, லண்டன் மற்றும் லாகூரில் கொடிகள் இறக்கப்பட்டன. ஹவுஸ் ஆஃப் காமன்ஸில், பிரிட்டிஷ் பிரதமர் ட்வயரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

இந்த கொலையை இந்தியாவில் மகாத்மா காந்தி கண்டித்தார். லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 200 பேர் கூடி இந்தக்கொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த கொலையை ஜெர்மனி மட்டுமே வரவேற்றது. அங்கு உத்தம் சிங் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகக் கருதப்பட்டார்.

சிறையில் கொடூரம்

உத்தம் சிங் பிரிக்ஸ்டன் சிறையில் 1010 என்ற எண் கொண்ட அறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உத்தம் சிங் மிகவும் கொடூரமாக நடத்தப்பட்டார். அங்கு பலமுறை அவர் உண்ணாவிரதம் நடத்தினார்.

அவருக்கு 42 முறை வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டது இதற்கான ஆதாரம் ஆகும்.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஜான் ஸ்வேனின் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவதற்கு பென்சில் மற்றும் காகிதத்தை உத்தம் கேட்டதாக 'தி நேஷனல் ஆர்கைவ்' இல் உள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.

அந்தக் கடிதத்தில், "எனக்கு சிகரெட் அனுப்ப வேண்டும். மேலும் நீண்ட கைகொண்ட சட்டை மற்றும் இந்திய பாணி ஷூக்களில் ஒன்றை எனக்கு வழங்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

உத்தம் தனது பருத்தி கால்சட்டை மற்றும் தலைப்பாகையை தனது பிளாட்டில் இருந்து கொண்டுவர முடியுமா என்றும் அவற்றை சிறையில் அணிந்து கொள்ள முடியுமா என்றும் கேட்டார்.

"நான் ஒரு இந்தியன் என்பதால் ஹேட் அதாவது தொப்பி அணிவதை உகந்ததாக கருதவில்லை,” என்று அவர் சொன்னார்.

இவற்றை அணிந்து கொண்டு இந்த விவகாரத்துக்கு அரசியல் நிறம் கொடுக்க உத்தம் சிங் முயன்றார்.

மரணத்திற்கு பயப்படவில்லை

விசாரணையின் போது, ​​பிரிட்டிஷ் அரசை தாக்கிப் பேசும் எந்த வாய்ப்பையும் உத்தம் சிங் தவறவிடவில்லை.

ஆல்ஃபிரட் டிரேப்பர் தனது 'அம்ரித்சர்-தி மாசாக்கர் தட் என்டெட் தி ராஜ்' புத்தகத்தில் "அவரை ஏன் தூக்கிலிடக்கூடாது என்பதை விளக்குமாறு நீதிபதி அவரிடம் கேட்டார்.

மரண தண்டனையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் ஒரு லட்சியத்தை முடித்ததற்காக இறக்கப்போகிறேன். ட்வயர் மீது எனக்கு புகார் இருந்ததால் நான் அதைச் செய்தேன். அவர்தான் உண்மையான குற்றவாளி. அவர் என் நாட்டு மக்களின் தன்னம்பிக்கையை நசுக்க விரும்பினார். அதனால்தான் நான் அவரை நசுக்கினேன்.

பழிவாங்க 21 வருடங்கள் காத்திருந்தேன்.எனது பணியை முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், மரணத்திற்கு பயப்படவில்லை, என் நாட்டிற்காக நான் சாகிறேன், என்று உத்தம் பதில் கூறினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பென்டன்வில்லே சிறையில் தூக்கிலிடப்பட்டார்

1940 ஜூலை 31 அன்று, ஜெர்மானிய விமானங்களின் குண்டுவீச்சுக்கு மத்தியில் காலை 9 மணிக்கு பென்டன்வில்லே சிறையில் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்டார்.

அவரது சவப்பெட்டியின் மீது மண்வெட்டியால் கடைசி மண் போடப்பட்டபோது,​​ அவரது கதையை அதனுடன் என்றென்றைக்குமாக புதைத்துவிட்டதாக ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். ஆனால் இது நடக்கவில்லை.

இந்தியா திரும்பல்

1974 ஜூலை 19 ஆம் தேதி அவரது உடல் கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஏர் இண்டியாவின் வாடகை விமானத்தில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

​​"உதமின் உடலை ஏற்றி வந்த விமானம் இந்திய மண்ணைத் தொட்டபோது, ​​விமானத்தின் இன்ஜின் சத்தத்தை விட அங்கிருந்தவர்களின் கோஷம் அதிகமாக இருந்தது. அவர்களை டெல்லி விமான நிலையத்தில் கியானி ஜைல் சிங் மற்றும் ஷங்கர்தயாள் சர்மா ஆகியோர் வரவேற்றனர். இவர்கள் இருவருமே பின்னர் இந்தியாவின் குடியரசுத்தலைவர் ஆனார்கள்.” என்று அனிதா ஆனந்த் கூறினார்.

"இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங்கும் விமான நிலையத்தில் இருந்தார். உத்தம் சிங்கின் உடல் கபுர்தலா இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு பிரதமர் இந்திரா காந்தி காத்திருந்தார். இந்தியாவில் எங்கெல்லாம் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டதோ அவருக்கு மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்,” என்று அனிதா குறிப்பிட்டார்.

அப்போதைய பஞ்சாப் முதல்வர் கியானி ஜைல் சிங் அவரது சிதைக்கு தீ மூட்டினார். அவரது அஸ்தி 1974 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சேகரிக்கப்பட்டது. அவை ஏழு கலசங்களில் வைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று ஹரித்வாருக்கும், மற்றொன்று கீரத்பூர் சாஹிப் குருத்வாராவுக்கும், மூன்றாவது ரௌஸா ஷெரீப்புக்கும் அனுப்பப்பட்டன.

கடைசி கலசம் 1919 படுகொலை நடந்த ஜாலியன் வாலாபாக் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், ஜாலியன்வாலா பாக் வெளியே உத்தம் சிங்கின் சிலை நிறுவப்பட்டது. ரத்தம் தோய்ந்த மண்ணை கையால் அவர் எடுப்பதுபோல அந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: