ஆளுநர் ரவியின் திராவிட மாடல் எதிர்ப்புக் கருத்துக்கு திமுக பதில் என்ன?

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லை என்றும் அது காலாவதியான கொள்கை என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெரிவித்துள்ள ஆளுநர், அரசு நிதியை பயன்படுத்துவதில் ஆளுநர் மாளிகை விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

திராவிட மாடல் குறித்த ஆளுநரின் பேட்டி சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், `திராவிட மாடல் ஆட்சி நிர்வாகத்திற்கான மாடல்` என குறிப்பிட்டுள்ளார்.

திமுக கடந்த 2021இல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திராவிட மாடல் என்ற சொல்லாடல் பிரபலமடைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியை பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் திராவிட மாடல் ஆட்சி என்றே குறிப்பிட்டு வருகிறார். திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள பேட்டியில், 'திராவிட மாடல் முறையை நான் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார். முதலில், திராவிட மாடல் என எதுவும் இல்லை. அது ஒரு அரசியல் முழக்கம் மட்டுமே, காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சி. ஒரு பாரதம், ஒரே இந்தியா என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளாத சித்தாந்தம் அது.

தேசிய சுதந்திர போராட்டத்தை மட்டுப்படுத்தும் சித்தாந்தம் அது. தங்கள் இன்னுயிரையையும் அனைத்தையும் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை வரலாற்றில் இருந்து அழித்துவிட்டு, மாறாக ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தவர்களை மகிமைப்படுத்துகிறது. நாடு முழுவதும் மொழிசார் நிறவெறியை வெறித்தனமாக அமல்படுத்தும் ஒரு கருத்தியல் இது. வேறு எந்த இந்திய மொழியும் தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை.

சமீபத்திய பட்ஜெட்டில், 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அமைக்கப் போவதாக அரசு தெரிவித்துள்ளது. இதில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி நூல்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. வேறு மொழி நூல்கள் இல்லை. பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் சூழலை உருவாக்கிய ஒரு கருத்தியல். நான் அதை ஆதரிப்பேன் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்' என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

இதேபோல், ஆளுநர் மாளிகையிடமோ தன்னிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், `நான் 2021 செப்டம்பர் மாதம் பதவி ஏற்றுகொண்டபோது, 19 மசோதாக்கள் ஒப்புதலுக்கு வந்தன. அவற்றில் 18 மசோதாக்களுக்கு நான் ஒப்புதல் அளித்துவிட்டேன். மீதமுள்ள நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளேன். ஏனென்றால் கல்வி பொதுப்பட்டியலில் வருகிறது. 2022ல் 59 மசோதாக்கள் ஒப்புதலுக்கு வந்தது. இதில் 48க்கு நான் ஒப்புதல் அளித்து விட்டேன். 3 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்துள்ளேன். ஒன்றை அரசு திரும்பப் பெற்றுகொண்டது. 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, 2022ல் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. 2023ல் ஏழு மசோதாக்கள் வந்தன. ஏழுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது` என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை அரசு நிதியை பயன்படுத்துவதில் விதிமீறலா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன். ரவி, அரசு நிதியை பயன்படுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த குற்றச்சாட்டுகளையும் இந்த நேர்காணலில் மறுத்துள்ளார் ஆளுநர் ரவி.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "அவர்கள் பண்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அமைச்சர் கூறியது அனைத்துமே பொய் மூட்டைகள்தான். முதலாவதாக, நிதி குறியீட்டின்படி ஆளுநரின் விருப்ப மானியத்தில் இருந்து சிறு தொண்டு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கு சில ஆயிரம் ரூபாய்களும் தரலாம் என்று அவர் கூறினார். 2000ஆம் ஆண்டிலேயே நிதி குறியீட்டில் இருந்து ‘Petty’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு விட்டது. ஆளுநரின் விருப்ப மானிய நிதியில் வரம்பு இருக்க முடியாது, இருக்க கூடாது என்று அது கூறுகிறது. அதாவது ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்படக்கூடாது.

அடுத்ததாக, 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அக்ஷய பாத்திரம் அமைப்பு குறித்து ஆளுநர் பேசியுள்ளார்.

ஏழை மாணவர்களின் இடைநிற்றல் குறித்து கவலைப்பட்ட அப்போதைய ஆளுநர், ஆரோக்கியமான இலவச உணவை வழங்க விரும்பினார். இது கற்றல் இடைநிற்றலைக் குறைக்கும் என்று அவர் நினைத்தார். அக்ஷய பாத்திரம், மிகவும் பிரபல அரசு சாரா அமைப்பாகும். அந்த அமைப்பு ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்குகிறது. 2020இல் அக்ஷய பாத்திரம் அமைப்பு, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவச உணவை வழங்க முன்வந்தது.

அவர்கள் விரும்பியதெல்லாம் சுகாதாரமான சமையலறை மட்டுமே. அந்த சமையலறையின் மதிப்பீடு ரூ.5 கோடி. ஆளுநர் இந்த தொகையை தனது விருப்ப மானியத்தில் இருந்து தவணையாக விடுவித்து, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அரசின் குழுவை அமைத்தார். முதலில் ரூபாய் 4.50 கோடி விடுவிக்கப்பட்டது. பணி முடிந்தவுடன் மீதமுள்ள 50 லட்சமும் விடுவிக்கப்படுவதாக இருந்தது. டிசம்பர் 2021இல், சமையலறை அமைக்கும் பணி முடிந்தது. இதையடுத்து குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்புக்கு அனுமதி கேட்டு மாநகராட்சியை அவர்கள் நாடினர்.

ஆனால், மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. எல்லாம் நன்றாக இருப்பதாக கூறிய அவர்கள், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் அனுமதி தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்தில் பேசி தீர்த்துக்கொள்ளும்படியும் அதிகாரிகள் கூறினர்.

கடந்த 16 மாதங்களாக அக்ஷய பாத்திரம் திட்டத்துக்காக முதலமைச்சர் அலுவகத்தை நாடி வருகின்றனர். ஆனால், அவர்களால் முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதியை பெற முடியவில்லை. வங்கி பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து ஆவணங்களும் உள்ளன.

அடுத்ததாக ஆளுநர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தேநீர் விருந்து நடத்துகிறார் என்று கூறுகின்றனர்.

பாரம்பரியமாக குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில், ராஜ் பவனில் ‘அட் ஹோம்’ - நடத்தப்படும். இது நமது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மற்றும் நாடு முழுவதும் நடக்கும். முன்னதாக, இதில் அதிகாரிகள்தான் அதிகளவில் பங்கேற்பார்கள். நான் அதை மாற்றினேன். அதிகாரிகள் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டு, விவசாயிகள், இளைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள், பாரம்பரிய கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றனர். ‘அட் ஹோம்’ நிகழ்ச்சியில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதனை ஆளுநரின் தேநீர் விருந்து என்று கூறுவது தமிழக மக்களையும் தேசிய தினத்தை கொண்டாடுவதையும் அவமதிப்பது ஆகும்.

இதேபோல் மத்திய குடிமைப்பணி குரூப் 1 தேர்வுக்கு தயாராவோருடன் கலந்துரையாட ஆளுநர் பணம் செலவழிப்பதாக தெரிவித்தனர். நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது, தமிழகம்தான் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களைக் கொண்டிருந்தது. இன்று நாம் பல மாநிலங்களுக்கு கீழே இருக்கிறோம். அதனால், 250 முதல் 300 பேர் வரை, ஏழை மாணவர்களை படிக்க வைக்க ஆரம்பித்தேன். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன். தேர்வுக்கு எப்படி தயாராவது என்று அவர்களுக்கு வழிகாட்டுகிறேன். நான் அவர்களை பசியுடன் திருப்பி அனுப்ப முடியாது. நான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இதைப் பற்றி அரசாங்கம் ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் (பிடிஆர்) இந்த பொய்களை எல்லாம் சொன்னார்.

"ஊட்டியில், ஆளுநர் தேநீர் விருந்து நடத்தி சில லட்சம் ரூபாயை ஆளுநர் செலவு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த தேநீர் விருந்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் நீலகிரியின் பழங்குடியின மக்கள். அவர்கள் என் விருந்தினர். நாங்கள் முழு மாலை பொழுதையும் அவர்களுடன் கழித்தோம். அவர்களின் குரலுக்கு செவிமடுத்தோம். எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்குமான உணவுக்கான கட்டணத்தை நான் செலுத்துகிறேன். ஆளுநருக்கு உள்ள சலுகைகளின் கீழ், ஆளுநர் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நான் உணவுக் கட்டணத்தை தவறாமல் செலுத்துகிறேன். அவர்களால் என்னை நோக்கி விரலை உயர்த்த முடியாது," என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அன்றைய தினம், ஆளுநர் மாளிகை அரசு நிதியை கையாள்வது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்தார்.

"ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில் அரசு நிதி ஒதுக்குகிறது. ஒன்று ஆளுநரின் செயலகத்திற்கானது. அடுத்ததாக ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட். இதில் இரண்டு ராஜ் பவன்களின் வீட்டுச் செலவுகள் அடங்கும். அடுத்ததாக, விருப்புரிமை நிதி (Discretionary grants). 2.41 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு 2.86 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 3.63 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் செலவு 11.6 கோடி ரூபாயாக இருந்ததை கடந்த ஆண்டு 15.93 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 16.63 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

1937ல் உருவாக்கப்பட்ட நிதி நெறிமுறைகளின்படி விருப்புரிமை நிதி வழங்கப்படுகிறது. 2011-12ல் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் இது எட்டு லட்சம் ரூபாயாகவே தொடர்ந்தது.

2016-17ல் இது 5.44 லட்சம் ரூபாயாக இருந்தது. 2017-18ல் இது 1.57 லட்சம் ரூபாயாக ஆகக் குறைந்தது. இப்படி ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக இருந்த விருப்புரிமை நிதியை மூன்றே மாதத்தில் 50 லட்சம் ரூபாயாகவும் பிறகு, ஐந்து கோடியாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

இதனை petty grant என்பார்கள். அதாவது இந்த ஆளுநரின் விருப்புரிமை நிதி என்பது பொதுத் துறை அல்லது அரசு - தனியார் பங்களிப்பில் செயல்படும் நிறுவனங்களுக்கும் அரசின் நிதியைப் பெறத் தகுதியான தனி நபர்களுக்கும் ஆளுநர் அளிக்கும் நிதி நல்கை ஆகும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் இதுதான் விதி.

எப்போதுவரை இது ஒரு லட்சமாக, ஐந்து லட்சமாக, எட்டு லட்சமாக இருந்ததோ அப்போதுவரை பிரச்னை இல்லை. இந்த நிதி ஐந்து கோடி ரூபாய் ஆக இருக்கும் நிலையில், விதி தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. அக்ஷயபாத்ரா என்ற காரணத்தைச் சொல்லி ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்தப் பணம் அக்ஷய பாத்ராவுக்கும் வேறு நபர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் விருப்புரிமை செலவு 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதிலிருந்து ஆளுநருக்கான மொத்த செலவு 18 கோடியே 38 லட்சம் ரூபாய். அதில் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் அவர்களது கணக்குக்கு மாற்றப்பட்டு, எங்கே செலவிடப்பட்டது என்பது அரசுக்கு தெரியாது. இது ஒரு விதிமுறை மீறல்.

petty என்றால் சிறு தொகை. அது ஐந்தாயிரமாக இருக்கலாம், ஐம்பதாயிரமாக இருக்கலாம். ஒரு லட்சமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாயெல்லாம் வராது.

2021 செப்டம்பருக்கு பிறகு இந்தத் தலைப்பில் வந்திருக்கும் பில்களைப் பார்த்தால், யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.தேநீர் விருந்துக்கு 30 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் கலாச்சார நிகழ்ச்சிக்கு 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் எல்லாம் இந்தத் தலைப்பில் வந்திருக்கவே கூடாது. அதேபோல, ஒரே நபருக்கு திரும்பத் திரும்ப பணம் கொடுக்கக் கூடாது. ஆனால், ஒரே நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஐம்பத்து எட்டாயிரம் என்ற வகையில் சுமார் 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணியார்களுக்கு போனஸ் ஆக ஒரு முறை 18 லட்சம் ரூபாயும் மற்றொரு முறை 14 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. நிதி நெறிமுறைகள் சொல்வதை மீறி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு` என்று கூறியிருந்தார்.

தனது பேட்டியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருப்பதாகவும், ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி நிர்வாக ஃபார்முலா

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அக்கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், திராவிட மாடல் குறித்து குறிப்பிடும்போது, `திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். திமுகவை திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது` என்று கூறியுள்ளார்.

திமுக கூறுவது என்ன?

இதனிடையே, திராவிட மாடல் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆளுநர் இதுபோன்று பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தனது பணியை ஆளுநர் பார்க்க வேண்டும். இவ்வாறு பேசுவது அவரது வேலை அல்ல. ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை தெலங்கானா ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. வரம்பு மீறி பேசினார் என்றால், ஆளுநராக இருக்கக் கூடிய தகுதி அவருக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்திற்கே சவால் விடுவதுபோன்று ஆளுநர் செயல்படுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

திராவிட இயக்க தலைவர்கள் சுதந்திரத்திற்கு போராடியவர்கள், கள்ளுக்கடை வேண்டாம் என்றதும் தன் வீட்டில் இருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டவர் பெரியார். இந்த வரலாறு எல்லாம் ஆளுநருக்கு தெரியாது. ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என்பதால் அவர் இதுபோன்று பேசி வருகிறார். இதையே வேறு யாராவது பேசியிருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்போம்" என்றார்.

திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசியிடம் பேசுகையில், `இவ்வாறு சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எப்போது அவர் அரசியல் பேசிவிட்டாரோ, அப்போதே அரசியலமைப்பு சட்டம் அவரை ஆளுநர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தயாராகி விடுகிறது. குடியரசு தலைவர் உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும். நான் அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் நின்று களமாடுகிறேன் என்று அவர் கூறுகிறார். அரசியல் சார்பற்ற கருத்துகளை அவர் பேசக்கூடாது. ஒரு கொள்கையை அவர் விமர்சிக்கிறார் என்றால், அதற்கு எதிரான கொள்கையை அவர் ஆதரிக்கிறார் என்றுதானே அர்த்தம்? சனாதனத்தை தூக்கிப் பிடிப்பதற்காக மக்களின் வரிப்பணத்தில் மிக பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு செய்யும் இந்த அரசியலை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்க்க வேண்டும்` என்றார்.

ஆளுநர் கூறியதில் தவறில்லை

ஆளுநர் கூறியதில் எவ்வித தவறும் இல்லை என்று பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், ` திராவிட மாடல் என்று சொல்வது, திமுக நிறுவனர் அண்ணாதுரை திராவிட நாடு என்ற கோரிக்கையை வைத்து செயல்பட்டதில் இருந்து தொடங்குகிறது. திராவிடம் என்பது நிலப்பரப்பை குறிக்கிறதே தவிர இனத்தை குறிக்கவில்லை. தற்போது அரசு என்பது இந்திய மாடல்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து இந்தியாவில் இருந்து இந்த அரசு பிரிந்திருப்பது போன்று திராவிட மாடல் என்று கூறுவது தவறு. இது பிரிவினைவாதத்தை தான் நினைப்படுத்துகிறது` என்றார்.

காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. தமிழக காவல்துறை திறன் வாய்ந்தது, சிறப்பு வாய்ந்தது என்று அவர் கூறியிருக்க அதேவேளையில், அது எப்படி அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை சொல்லியுள்ளார். அவர் ஆதீனத்தை பார்க்க சொன்றபோது, அவரின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தில் எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. காரணம், இதில் தொடர்புடையவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆளுநருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்பதை அவர் கேள்வியாக எழுப்பியுள்ளார். எனவே, அவர் கூறியது சரியே` என்றார்.

திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி

ஆளுநர் கூறியிருப்பது அபத்தமானது என்று மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் கூறுகிறார்.

இது தொடர்பாக தனது கருத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் ஏன் வடநாட்டு தொழிலாளர்கள் இங்கு படை எடுக்கிறார்கள். ஆளுநர் ரவியின் சொந்த மாநிலத்துக்காரர்கள் இங்கு இருக்கிற அரசுக் கல்வி மற்றும் தனியார் கல்வி மாதிரி எங்கள் மாநிலத்தில் இல்லை என்று சிலாகிக்கிறார்கள். திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி.

1977 ஜூன் 15 கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கிற தீர்மானத்தில் முதல்வர் எம்ஜிஆர் பதில் உரை ஆற்றும்போது மூன்று விஷயங்களில் திமுகவும் அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று கூறினார்.

அவை, மொழி உரிமை, மாநில நலன் மற்றும் சமூக நீதி. 1962க்குப் பிறகே தனித் திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டுவிட்டது. அதை ஏற்று 1967 ல் மக்கள் தீர்ப்பு வழங்கி அன்று முதல் இன்று வரை தேசீயக் கட்சிகளுக்கு இங்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் அளிக்கவில்லை.

2006இல் கலைஞருக்கு மெஜாரிட்டி இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. மாறாக புதுச்சேரியில் திமுகவுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டு இங்கு 5 ஆண்டு திமுக தனியாகத்தான் ஆட்சி நடத்தியது.

மொழிவாரி மாநிலப் பிரிப்பு சட்டம் வருவதற்கு முன்பே ஆந்திரா பிரிந்து விட்டது. பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது இதற்கு காரணம். அதன் பின்னர் அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் இருந்து பல்வேறு மாநிலங்கள் பிரிந்து எஞ்சிய பகுதி மெட்ராஸ் ஸ்டேட் ஆனது. இது எங்கள் பள்ளி காலத்து வரலாறு. பின்னர் அண்ணா காலத்தில் தமிழநாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

ரவி முன்பு பணியாற்றிய நாகாலாந்து மாநிலத்திற்கு என்ன அர்த்தம் தருகிறது? நாகர் பூமி என்று தானே? அப்படியானால் அனைவரும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்களா? சர்ச்சை நாயகனாக இருப்பதன் மூலம் பதவியின் மாண்பைச் ஆளுநர் ரவி சீர்குலைக்கிறார். வெற்று விளம்பரம் தேடுவதன் மூலம் நிர்வாக அமைதியைக் கெடுக்கிறார். இப்படியான கருத்தை வேறு எந்த மாநிலத்திலாவது இவர் வைக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: