You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதினை கொல்ல யுக்ரேன் முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய அதிபர் விளாதிமிர் புதினை கொல்ல யுக்ரேன் முயற்சித்ததாக கிரெம்ளின் குற்றம்சாட்டியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத காணொளி காட்சியொன்றில் கிரெம்ளினுக்கு மேலே ஒரு பொருள் அது வீழ்த்தப்படும் முன்பாக பறப்பதை காண முடிகிறது.
இந்நிலையில், இந்த ட்ரோன் தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று யுக்ரேன் தெரிவித்துள்ளது.
மின்னணு ரேடார் தளவாடத்தை பயன்படுத்தி இந்த இரண்டு ட்ரோன்களும் முடக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் புதின் கிரெம்ளினில் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நடந்த சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்றிரவு, யுக்ரேன் ஆட்சியாளர் ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரை இலக்கு வைத்து கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா வான்வழி சாதனங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றது." என கூறப்பட்டுள்ளது.
மேலும், "இது திட்டமிட்ட பயங்கரவாத செயலாகவும், அதிபர் மீதான படுகொலை முயற்சியாகவும் கருதுகிறோம். "எங்கு, எப்போது தேவை என்று கருதினாலும் பதிலடி நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யாவிற்கு உரிமை உள்ளது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு மிக உயரிய அளவிலான தனி பாதுகாப்பு உள்ளது. இது குறித்து பிபிசியின் ரஷ்யா ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க் கூறுகையில், "ட்ரோன்கள் கிரெம்ளினுக்கு அருகே சென்றிருக்கலாம் என்று நினைப்பது கூட ஆச்சரியமாக இருக்கிறது. நடந்த தாக்குதலில் அதிபருக்கு எதுவும் ஆகவில்லை. அவரது அன்றாட பணிகள் எப்போதும் போல் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. மாஸ்கோவிற்கு வெளியே நோவோ ஒகாரியோவோவில் அதிபர் இருந்துள்ளார்," என்று தெரிவித்தார்.
ரஷ்ய சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் மத்திய மாஸ்கோவில் புகை படிந்திருந்ததை காண முடிந்தது.
"இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிரெம்ளின் வளாகத்தில் ட்ரோன்களின் பாகங்கள் விழுந்துள்ளன. ஆனால் இதில் யாரும் காயம் அடையவில்லை. கட்டடங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை," என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் 'மே 9 வெற்றி தின' அணிவகுப்புக்கு சில தினங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கிரெம்ளின் அதன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
அந்த அணிவகுப்பில் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் கிரெம்ளினை மேற்கோள்காட்டி தெரிவித்தன.
இந்நிலையில், "ரஷ்யாவில் நடந்த சம்பவம், மே 9 நிகழ்வுக்கு முன்பு நிலைமையை பதற்றமாக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது" என்று யுக்ரேன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் செரி நிகிஃபோரோஃப் கூறினார்.
இதற்கிடையே, இமாஸ்கோ நகரில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன் விமானங்கள் பறப்பதற்கு நகர மேயர் செர்கே சோபியானின் புதன்கிழமை தடை விதித்துள்ளார்.
ட்ரோன் விமானங்களுக்கு அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி தேவைப்படும் என்று அவர் கூறினார்.
ரஷ்யாவில் உள்ள பல நகரங்கள் இந்த ஆண்டு வெற்றி தின கொண்டாட்டங்களின் தன்மையை குறைத்துக் கொள்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் யுக்ரேனிய சார்பு படைகளின் சாத்தியமிகு தாக்குதல்களை மேற்கோள்காட்டியும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்யப்படுவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் வெடிப்புகள் மற்றும் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்