You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அண்ணாமலை வாக்குறுதி உண்மையில் சாத்தியமா?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுவரை அரசு வேலை பெறாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறியிருக்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியம்?
தமிழ்நாடு முழுவதும் நடைப் பயணம் மேற்கொண்டிருக்கும் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அரசு வேலை அளிப்பது குறித்து அவர் பேசிய சில கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது என்ன?
"பாரதிய ஜனதா கட்சி உங்கள் அன்பையெல்லாம் பெற்று 2026ல் ஆட்சிக்கு வரும்போது இதுவரை எந்தக் குடும்பத்தில் யாருக்கு ஒரு தலைமுறைகூட அரசு வேலை கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு கட்டாயமாக அரசு வேலை கொடுக்கப்படும். உங்க ஊரிலே இத்தனை தலைமுறையாக அரசு வேலை இல்லாமல் ஒருவர் இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஒரு சகோதரர், சகோதரி டிகிரி முடித்துவிட்டால் முன்னுரிமை அளித்து அரசு வேலை அளிக்கப்படும்" என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதில்
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பதிலளித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று. அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
தேர்தல் வாக்குறுதி
ஆனால், அண்ணாமலை மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் இதேபோன்ற வாக்குறுதிகளை இதற்கு முன்பு வழங்கியிருக்கின்றனர். குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற வாக்குறுதியை கோவா சட்டமன்றத் தேர்தலின்போது முன்வைத்தது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் இதனை ஒரு வாக்குறுதியாக முன்வைத்தது. "இதுவரை அரசு பணிகளில் இடம் பெறாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி உறுதியாக வழங்கப்படும்" என அந்த வாக்குறுதி கூறியது.
இதுவரை அரசுப் பணிகளைப் பெறாதவர்களின் குடும்பங்களைத் தேர்வுசெய்து, அந்த வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியமா?
தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் எப்படி வழங்கப்படுகின்றன?
தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் நிரப்பப்படுகின்றன. அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தப் பணியிடங்களை தகுதித் தேர்வுகளின் மூலமும் நிரப்புகிறது. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு வழங்கப்படுகிறது.
அந்த இட ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் உள் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால், இதுவரை அரசுப் பணியில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணிகளை வழங்கும் வகையில் விதிகள் ஏதும் இல்லை.
"அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் விதிகளின்படி, இடஒதுக்கீடு மட்டும்தான் அளிக்க முடியும். இதுபோல முன்னுரிமை அளிக்க ஒரு விதியை உருவாக்கினாலும் அது தகுதி வாய்ந்த மற்றவர்களுக்கு பாதகமாக அமையும் என்று வழக்குகள் தொடரப்படும். அது சாத்தியமே இல்லை" என்கிறார்கள் தமிழ்நாடு தேர்வு பணியாளர் ஆணையத்தின் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள்.
டிஎன்பிஎஸ்சியின் தற்போதைய உறுப்பினர்கள் சிலரிடம் கேட்டபோது, "இது ஒருபோதும் சாத்தியமில்லாத வாக்குறுதி" என்கிறார்கள். "முதலில் அரசுப் பணியாளர் தேர்வாணயம் என்பது, அரசியல் சாசன ரீதியாக சுயாதீனமான ஒரு அமைப்பு. விருப்பப்படி விதிகளை உருவாக்கி, பணியிடங்களை நிரப்ப எந்த அரசும் அதற்கு உத்தரவிட முடியாது."
"அடுத்ததாக, அரசுப் பணிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு தகுதி நிர்ணியிக்கப்படுகிறது. அதற்கான தகுதித் தேர்வுகள் இருக்கின்றன. இதையெல்லாம் கடந்த பிறகு இட ஒதுக்கீடு இருக்கிறது. இவற்றைத் தாண்டித்தான் ஒருவர் பணி வாய்ப்பையே பெறுகிறார். இதற்கு நடுவில், இப்படி ஒரு விதியை வைப்பதே சாத்தியமில்லை. அப்படிச் செய்ய முடியும் என்றால், மத்திய அரசுப் பணிகளில், ஐஐடியில் அப்படி முதலில் செய்யலாமே" என்கிறார்கள்.
தமிழ்நாடு மக்கள்தொகை
தமிழ்நாட்டில் தோரயமாக சுமார் 14 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் ஏழு கோடியே 21 லட்சமாக இருக்கிறது.
இதில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கையை கழித்தால், சுமார் ஆறே முக்கால் கோடிப் பேரில் அரசு ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்த எண்ணிக்கையை குடும்பமாக கணக்கிட்டால், சுமார் ஒன்றேகால் கோடி குடும்பங்களில் அரசு ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த ஒன்றே முக்கால் கோடி குடும்பங்களில் ஏற்கனவே யாராவது அரசுப் பணியில் இருந்தார்களா என்பது குறித்த புள்ளிவிவரங்கள் கிடையாது.
இம்மாதிரிச் சூழலில், ஏற்கனவே அரசுப் பணியில் இருந்தவர்களின் குடும்பங்களைத் தவிர்த்துவிட்டு, அரசுப் பணியாளர்களைத் தேர்வுசெய்வது எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வியும் இருக்கிறது.
சாத்தியமில்லாத வாக்குறுதியா?
இது போகாத ஊருக்கு வழிசொல்வது என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான கோ. கருணாநிதி.
"ஒரு குடும்பம் என்பதை எப்படி வரையறுப்பது? ஒரு குடும்பத்தில் தந்தை அரசுப் பணியில் இருக்கலாம். மகன் அவரைப் பிரிந்து தனியாக வசிக்கலாம். அப்படியிருக்கும்போது, மகனுக்குத் தகுதியிருந்தால், அரசுப் பணி வழங்க முடியாது எனச் சொல்ல முடியுமா? இதுபோல விதிமுறைகளை வகுத்தால் அது நீதிமன்றத்தில் நிற்காது" என்கிறார் அவர்.
வேறு எந்த மாநிலமாவது இதுபோன்ற வாக்குறுதியை அளித்து நிறைவேற்றியிருக்கிறதா?
சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் இது முயற்சிக்கப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பவன் குமார் சம்லிங் முதலமைச்சராக இருந்தபோது 2019ல் அரசுப் பணியில் இல்லாதவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 11,700 பேருக்கு தற்காலிக பணி ஆணைகளை வழங்கினார்.
ஆனால், இப்படித் தற்காலிகமாகச் சேர்க்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவது பெரிய அளவில் நடக்கவில்லை. 2021-22ல் 191 பேருக்கும் 22-23ல் 43 பேருக்கு மட்டுமே பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)