வடகொரியாவில் தயாராகும் செயற்கை கண் இமை, முடி உலகம் முழுக்க தடையின்றி விற்கப்படுவது எப்படி?

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவுடனான பதற்றமான உறவுகள் மற்றும் தனது அணுசக்தி திட்டத்தால் சர்வதேச தடைகளை எதிர்கொண்டு வரும் வடகொரியா ஒரு புதிய காரணத்திற்காக தற்போது செய்திகளில் அடிபடுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் ஆர்டிபிஷல் ஐலேஷஸ் (செயற்கை கண் இமைகள்) மற்றும் விக் (போலி முடி) ஆகியவை உலகெங்கிலும் உள்ள கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவற்றில் ”வட கொரியாவில் தயாரிக்கப்பட்டது" என்று இல்லாமல் "மேட் இன் சைனா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வியாபாரம் காரணமாக வடகொரியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் நேர்மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது.

வட கொரியாவில் தயாரிக்கப்படும் போலி கண் இமைகளின் ப்ராஸஸிங் மற்றும் பேக்கேஜிங் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான அண்டை நாடான சீனாவில் செய்யப்படுகிறது என்று செய்தி முகமை ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

இந்த வணிகத்தின் மூலம் கிம் ஜாங்-உன் தலைமையிலான வடகொரிய அரசு, தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்து, நாட்டுக்குத் தேவையான அன்னியச் செலாவணியை ஈட்ட முடிகிறது என்று அறிக்கை கூறுகிறது.

வட கொரியா மற்றும் சீனாவின் பதில்களை அறிவதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கான வட கொரியாவின் அமைப்பு, சீனாவில் உள்ள அதன் தூதரகம் மற்றும் தான்தோங்கில் உள்ள அதன் கான்ஸலக அலுவலகத்தையும் ராய்ட்டர்ஸ் தொடர்பு கொண்டது. ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் வரவில்லை.

சீனாவையும் வட கொரியாவையும் "நல்ல அண்டை நாடுகள்" என்று விவரித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இரண்டுக்கும் இயல்பான கூட்டாண்மை உறவுகள் உள்ளன. அவை முற்றிலும் சட்டபூர்வமானவை மற்றும் அதை மிகைப்படுத்தி கூறக்கூடாது" என்று தெரிவித்தார்.

அறிக்கை தெரிவிப்பது என்ன?

சுமார் 20 பேரிடம் பேசியதாகவும், அவர்களில் குறைந்தது 15 பேர் ஐலேஷஸ் எனப்படும் கண் இமைகள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராய்ட்டர்ஸ் கூறுகிறது. வட கொரியாவின் பொருளாதாரத்தை கூர்ந்து கவனிக்கும் நிபுணர்கள் மற்றும் வணிகத்துடன் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஆகியோர்களுடனும் அது பேசியுள்ளது.

சீன நிறுவனங்கள் வட கொரியாவில் இருந்து செயற்கை கண் இமைகளின் மூலப்பொருளை இறக்குமதி செய்து, சீனாவில் பதப்படுத்தி பேக்கேஜ் செய்து, 'மேட் இன் சைனா' என்ற டேக் போட்டு ஏற்றுமதி செய்கின்றனர் என்று இந்த நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுமே லாபம் ஈட்டும் நடவடிக்கையாக இது ஆகியுள்ளது.

இந்த தயாரிப்புகள் மேற்கத்திய நாடுகளிலும் தென் கொரியா மற்றும் ஜப்பான் சந்தைகளிலும் அழகுசாதனக் கடைகளில் விற்கப்படுகின்றன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

"மேட் இன் சைனா" என்ற குறிச்சொல்லுடன் கூடிய விக் மற்றும் செயற்கை கண் இமைகள் அமெரிக்க கடைகளில் விற்கப்படுகின்றன. இது வட கொரியா மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறுவதாக இருக்கலாம். ஏனெனில் அவற்றின் உற்பத்தி உண்மையில் வட கொரியாவில் செய்யப்படுகிறது,’ என்று 2023 செப்டம்பரில் ’வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

2023 ஏப்ரலில் சீனா, வட கொரியாவிலிருந்து 227 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சுமார் 30 டன் விக் மற்றும் போலி கண் இமைகளை இறக்குமதி செய்ததாக சீன சுங்க நிர்வாகத்தின் தரவை மேற்கோள் காட்டி வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் கொரிய சேவை குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம்

வடகொரியாவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது.

1950 மற்றும் 1953 க்கு இடையில் கொரியப் போரின் போது சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான உறவுகள் ஆழமடைந்தன என்று வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் தெரிவிக்கிறது. சீனா தனது நட்பு நாட்டிற்கு உதவ ராணுவத்தை அனுப்பியது.

பின்னர் வட கொரியாவும் தென் கொரியாவும் பிரிந்த பிறகும் சீனா, வட கொரியாவின் முக்கிய நட்பு நாடாகவே இருந்தது.

ஆனால் 2006 இல் வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்குப் பிறகு சீனாவுடனான அதன் உறவில் பதற்றம் ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முன்மொழிவுக்கு சீனா ஒப்புதல் அளித்தது.

பதற்றம் அதிகரித்தது. கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துமாறு 2017 ஆம் ஆண்டில் சீனாவின் அப்போதைய வெளியுறவு அமைச்சரான வாங் யி, வட கொரியாவை கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் வாங் யி வட கொரியாவை மட்டும் வசைபாடவில்லை. அமெரிக்காவிலிருந்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை நிறுவியதன் மூலம் தென் கொரியா தவறு செய்வதாகவும் அவர் கூறினார்.

தென் கொரியாவிலிருந்து சில அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதையும் சீனா நிறுத்திவிட்டது.

வியாபாரம் நிற்கவில்லை

ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில் வடகொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை.

சீனாவுடனான வட கொரியாவின் வர்த்தகம் 2000 வது ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்று ஸ்டாடிஸ்டா தரவுகள் தெரிவிக்கின்றன.

2000 வது ஆண்டில் 24.4 சதவிகிதமாக இருந்த சீனாவுடனான வடகொரியாவின் வெளிநாட்டு வர்த்தகம் 2018 இல் 95.8 சதவிகிதம் என்ற உச்சத்தை தொட்டது.

கோவிட் தொற்றுநோய் காலகட்டத்தில் வட கொரியா தனது எல்லைகளை முற்றிலுமாக சீல் வைத்தது. எனவே 2020 இல் வர்த்தகத்தில் சிறிது சரிவு ஏற்பட்டது. ஆயினும் அப்போதும் அது 88.2 சதவிகிதமாக இருந்தது.

2023 இல் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே 2.295 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்று இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வட கொரியா சீனாவிற்கு என்னவெல்லாம் விற்கிறது?

”2017 க்கு முன்பு வட கொரியா சீனாவுக்கு கடிகாரத்தில் பொருத்தப்படும் மெஷின்களை விற்கவில்லை. ஆனால் 2018 இல் அதன் ஏற்றுமதியில் பெரும்பகுதி கடிகார தயாரிப்பு மெஷின்கள்,” என்று கொரியா எகனாமிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்காவில் உறுப்பினரான டிராய் ஸ்டாங்ரூன், தி டிப்ளோமேட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எழுதியுள்ளார்.

இது தவிர அதன் ஏற்றுமதியில் மாலிப்டேனம், ஃபெரோசிலிகான், உடைகள் மற்றும் போலி விக் மற்றும் போலி கண் இமைகள் போன்றவையும் அடங்கும். ஆனால் 2019 முதல், கடிகார மெஷின்களின் ஏற்றுமதி குறையத் தொடங்கியது. ஆனால் எலிமெண்ட்ஸின் ஏற்றுமதி தொடர்கிறது.

2021 ஆம் ஆண்டில் சீனா உலகின் மிகப்பெரிய அழகு சாதனப் பொருட்களின் இறக்குமதியாளராக இருந்தது (13.2 பில்லியன் டாலர்). ஏற்றுமதியைப் பொறுத்தவரை அது உலகின் 7 வது பெரிய ஏற்றுமதியாளராக (2.87 பில்லியன் டாலர்) இருந்தது.

வட கொரியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் (ஒரு வருடத்திற்கு முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது) அழகு சாதனப் பொருட்களில் 404 சதவிகிதம் அதிகரிப்பு காணப்படுகிறது என்று 2023 நவம்பரில் OEC வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஏற்றுமதி வரைபடத்தைப் பார்த்தால், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகபட்ச அழகு சாதனப் பொருட்களை அது ஏற்றுமதி செய்துள்ளது என்று 2023 நவம்பர் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வட கொரியா மீது பொருளாதார தடைகள்

கிம் ஜாங் உன்னின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்குத் தேவையான நிதி கிடைப்பதைத்தடுக்க அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, வட கொரியா மீது பல தடைகளை விதித்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அந்தந்த மட்டங்களில் சட்டங்களை இயற்றுவதன் மூலம் தடைகளை அமல்படுத்த வேண்டும்.

இதில் பொருளாதார தடைகள், சொத்து முடக்கம் ஆகியவற்றுடன் கூடவே வட கொரியா எண்ணெய், எண்ணெய் பொருட்கள், நிலக்கரி போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும், உலோகங்கள், நிலக்கரி, இரும்பு போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் தேவைகள் மற்றும் முயற்சிகள்

2000 வது ஆண்டிற்கு பிறகான தசாப்தத்தில், தென் கொரியாவில் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவை இரண்டும் அதிகரித்தபோது, ​​கிம் ஜாங்-உன் வட கொரியாவில் அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து நாட்டில் பல நிறுவனங்களை நிறுவினார்.

2018 ஆம் ஆண்டில் முதன்முறையாக வட கொரியா தன் அழகுசாதன தொழில்துறையை பார்க்க வருமாறு சீனாவின் அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸை அழைத்தது. வெளிநாட்டு ஊடகங்களுக்கு தனது இந்த தொழில்துறையை வடகொரியா அறிமுகப்படுத்தியது இதுவே முதல் முறை.

பியாங்யாங் காஸ்மெட்டிக்ஸ் ஃபேக்டரி என்ற இந்த நிறுவனத்தை உலகின் கண்முன்னே கொண்டு வந்ததன் நோக்கம், வடகொரியா தனது பொருளாதார வளர்ச்சியில் இதற்கு முக்கிய இடமளித்ததுதான் என்று வடகொரியாவை கவனித்து வந்தவர்கள் தெரிவித்தனர். கிம் ஜாங்-உன் 2015 மற்றும் 2017 இல் இந்த நிறுவனத்திற்குச் சென்று அதன் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

இந்த நிறுவனம் சர்வதேச பிராண்டுகளுடன் போட்டியிடக்கூடிய உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் அழகு சாதனப் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

அன்னிய செலாவணி வரத்தை தொடரவும், வேலையின்மை விகிதத்தை குறைக்கவும், உடைகள் மற்றும் பிற பொருட்களுக்கு பதிலாக போலி கண் இமைகள் மற்றும் விக் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதைத் தவிர வட கொரியாவுக்கு வேறு வழியில்லாமல் இருந்திருக்கலாம் என்று நைகாட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிமுரா மிட்சுஹிரோ கூறியதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளுக்கு உட்படாதவை என்பதால் செயற்கை கண் இமைகள் மற்றும் விக் போன்ற பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இதே போன்ற ஒரு அறிக்கை 2019 இல் சீனாவின் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில் வெளியிடப்பட்டது. தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியா பல பொருட்களை (ரசாயனங்களை) இறக்குமதி செய்ய முடியாது. எனவே ரசாயனங்கள் பயன்பாடு இல்லாத அழகுசாதன பொருட்களின் தயாரிப்பை அது அதிகரித்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)