சென்னையில் புகார்: தெருநாய்களுக்கு உணவு அளித்தால் என்ன தண்டனை? உச்ச நீதிமன்ற உத்தரவு விவரம்

தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் தெருநாய்களுக்கு உணவளித்தது தொடர்பாக 2 பேர் மீது செப்டம்பர் 8-ஆம் தேதி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு பல இடங்களில் மீறப்படுகிறது' என்கிறார், காவல்துறையில் புகார் அளித்த முரளிதரன்.

'அரசு இடத்தை ஒதுக்கும் வரை தெருநாய்களுக்கு உணவளிப்பதைத் தடுப்பது சிரமம்' என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர வேறு இடங்களில் தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

சென்னையில் என்ன நடந்தது?

சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி சமூக ஆர்வலர் முரளிதரன், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோட்டூர்புரத்தில் உள்ள லாக் நகரில் இரண்டு பேர் தெருநாய்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பதாகக் கூறியிருந்தார்.

'தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது சட்டவிரோதம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் உணவளித்து வருவதாக மனுவில் குறிப்பிட்டு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

"புகார் கொடுப்பதற்கு முதல் நாள், (செப்டம்பர் 7) கோட்டூர்புரம் காவல்நிலையத்துக்கு போன் செய்து, 'தெருநாய்களுக்கு சோறு போடுகிறார்கள். தடுத்து நிறுத்துங்கள்' எனக் கூறினேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனக் கூறுகிறார் முரளிதரன்.

கோட்டூர்புரத்தில் உள்ள லாக் நகரில் இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு பேர், வாளியில் கொண்டு வரப்பட்ட உணவை தெருநாய்களுக்கு கொடுக்கும் வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் முரளிதரன் வெளியிட்டிருந்தார்.

"அந்த வீடியோ வைரலானதால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு காவல்நிலையத்தில் இருந்து கேட்டனர். நானும், அவர்களை எச்சரிக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனது மனுவை ஏற்று சிஎஸ்ஆர் (Complaint Service Register) நகலை போலீஸார் கொடுத்தனர்" என பிபிசி தமிழிடம் முரளிதரன் குறிப்பிட்டார்.

தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

புகாரின்பேரின் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், உணவளித்த நபர்கள் மீது தற்போது வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. "நாய்களைப் பொறுத்தவரை ஓர் இடத்தில் உணவு கிடைக்கிறது என்றால் அது வேறு இடங்களுக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. இதனால் ஒரே இடத்தில் அவற்றின் எண்ணிக்கை பெருகும்" எனக் கூறுகிறார், முரளிதரன்.

தொடர்ந்து பேசிய அவர், "தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் உணவளிப்பதற்கான கூடங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அரசு சார்பில் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. ஆனாலும், தெருநாய்களுக்கு மற்ற இடங்களில் சிலர் உணவளித்து வருகின்றனர். இது நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது" எனவும் அவர் தெரிவித்தார்.

தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

பட மூலாதாரம், Muralidharan Sivalingam/Facebook

படக்குறிப்பு, தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறார் முரளிதரன்

தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளை சமூக ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்து வந்துள்ளார்.

விலங்குகளைக் கையாள்வதில் உள்ள அலட்சியம் தொடர்பாக பிஎன்எஸ் சட்டப்பிரிவு 291-ன் படி, தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ விலங்குகளின் மீது அலட்சியமாக இருப்பதற்கான தண்டனையை இந்தச் சட்டப் பிரிவு கூறுகிறது. இதன்படி ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் காசிநாத பாரதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொது இடங்களில் உணவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது" என்கிறார்.

உச்ச நீதிமன்ற உத்தரவில் என்ன உள்ளது?

தெருநாய்களுக்கு காப்பகங்களை உருவாக்கி அங்கு அவற்றைக் கொண்டு செல்லுமாறு ஆகஸ்ட்11-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், முந்தைய சில உத்தரவுகளுக்கு மாறாக இந்த உத்தரவு உள்ளதாகக் கூறி தலைமை நீதிபதி அமர்வில் சில வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெருநாய்களுக்கு காப்பகங்களை உருவாக்கி அங்கு அவற்றைக் கொண்டு செல்லுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

இதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி,

* மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் நாய்களுக்கு உணவு அளிக்கும் வகையில் பிரத்யேக கூடங்களை அமைக்க வேண்டும். அங்கு மட்டும் பொதுமக்கள் உணவளிக்கலாம்.

* எந்த சூழலிலும் பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கக் கூடாது. உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

*விதிமீறல் தொடர்பாக புகார் அளிப்பதற்கான உதவி எண்ணை உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்க வேண்டும்.

* தெருநாய்களை தத்தெடுத்து வளக்கும் நபர்கள், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பம் அளிக்கலாம். அவற்றை தத்தெடுத்த பிறகு வளர்க்கும் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது. மீண்டும் தெருவில் விடக் கூடாது.

* தெருநாய்களைப் பிடிப்பதற்காக வருகின்ற உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்களை விலங்குகள் நல ஆர்வலர்களோ, தன்னார்வ அமைப்பினரோ தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

வழக்கில், ' தெருநாய்களை எப்படி கையாள வேண்டும், எந்த மாதிரியான விதிகளை வகுக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கலாம்' எனக் கூறிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அளிக்குமாறு உத்தரவிட்டது.

'மாநகராட்சி ஆர்வம் செலுத்தவில்லை'

"உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று உணவளிக்கும் கூடங்களை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்குவதில் சென்னை மாநகராட்சி ஆர்வம் செலுத்தவில்லை" என்று குற்றம்சாட்டுகிறார், சமூக ஆர்வலர் முரளிதரன்.

தனி நபர்கள் சிலர் உணவளிப்பதன் மூலம் மாநகராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நாய்களின் பெருக்கம் அதிகரிப்பதாகக் கூறும் முரளிதரன், "மாறாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் உணவளிப்பதற்கான இடங்களை ஏற்படுத்தித் தருமாறு விலங்குகள் நல ஆர்வலர்கள் கேட்கலாம்" எனவும் தெரிவித்தார்.

இதே தகவலை கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்த மேயர் பிரியா ராஜன், " தெருநாய்களுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் உணவு வழங்குவதால் குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக வாழ்கின்றது. அரசு முடிந்த அளவு நாய்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது" எனக் கூறினார்.

மேயர் பிரியா ராஜன்

பட மூலாதாரம், PriyarajanDMK/X

படக்குறிப்பு, தெருநாய்களுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் உணவு வழங்குவதால் குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக வாழ்கின்றது என்கிறார் மேயர் பிரியா ராஜன்

'சோறு போடுவதில் என்ன தவறு?' - நடிகை வினோதினி

பரவலாக விவாதிக்கப்படும் தெருநாய் பிரச்னை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய நடிகை வினோதினி, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தெருநாய்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் உணவளிக்க வேண்டும். அதாவது, மாநகராட்சி ஒதுக்கித் தரும் இடத்தில் சோறு போட வேண்டும் எனக் கூறியுள்ளது. அவ்வாறு இடங்களை ஒதுக்காத வரையில் சிலர் சோறு போடுகின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

பட மூலாதாரம், Vinodhini Vaidynathan/Facebook

படக்குறிப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தெருநாய்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் உணவளிக்க வேண்டும் என்கிறார் வினோதினி

தெருநாய்களை, தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கூட்டிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்து மீண்டும் அதே இடத்துக்குக் கொண்டு வந்துவிட்டுவிடும் வேலைகளை தன்னார்வமாக சிலர் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நாய்க்கு அடிபட்டால் கூட மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. கருத்தடை செய்வது, காயத்துக்கு மருந்து வாங்குவது என சிலர் தன்னார்வத்துடன் உதவுகின்றனர்" என்று அவர் விமர்சிக்கிறார்.

'அரசு இடம் ஒதுக்கினால் தான் தீர்வு'

"விலங்குகளுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உள்ளது" எனக் கூறும் வினோதினி, "தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் மீது கோபத்தைக் காட்டுகிறவர்கள், வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்களைப் பற்றி பேசுவதில்லை. அவற்றில் ஆக்ரோஷமாக உள்ள வெளிநாட்டு இன நாய்களைப் பற்றியும் பேச வேண்டும்" என்கிறார்.

"தெருநாய்களுக்கு உணவளிப்பதை மனிதநேயத்துடன் அணுக வேண்டும். நாய்களின் எண்ணிக்கையில் சொற்பமான அளவு நாய்கள் மட்டுமே சோறு போடுகிறவர்களால் வாழ்கின்றன. அரசே இடத்தை ஒதுக்கி உணவளிக்கும் வேலைகளைச் செய்தால் சோறு போடும் நபர்கள் உருவாக வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை மாநகராட்சி விளக்கம் என்ன?

சென்னை மாநகராட்சியின் கால்நடைத் துறை தலைமை மருத்துவர் கமால் ஹூசைனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தெருநாய்களுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் உணவளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன" எனக் கூறுகிறார்.

ஆண்டுக்கு 20 ஆயிரம் தெருநாய்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கருத்தடை செய்து வருவதாகக் கூறிய அவர், "அதை 1 லட்சமாக உயர்த்தும் வகையில் புதிதாக பத்து மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பருக்குள் இவை செயல்பாட்டுக்குள் வந்துவிடும்" எனவும் கமால் ஹூசைன் தெரிவித்தார்.

"கருத்தடை மையங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் முதல் 1 லட்சம் நாய்களுக்கு கருத்தடைப் பணிகளை மேற்கொள்ள முடியும்" எனவும் அவர் கூறுகிறார்.

அதேநேரம், சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரேபிஸ் தடுப்பூசியை நாய்களுக்கு செலுத்தும் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய கமால் ஹூசைன், "சுமார் 48 ஆயிரம் நாய்களுக்கு மேல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளோம்" என்கிறார்.

நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறும் கமால் ஹூசைன், "இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது ஆகிய பணிகளுக்காக தொடர்ந்து சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம்" எனவும் குறிப்பிட்டார்.

தெருநாய்களுக்கு சிலர் உணவளிப்பது தொடர்பாக காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் குறித்துக் கேட்டபோது, "அதுகுறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை முடிவெடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு