காணொளி: நாசா செல்ல தயாராகும் கிராமப்புற பள்ளி மாணவிகள்
தாவ்டி உள்ளாட்சி அமைப்பு நடத்தும் பள்ளியைச் சேர்ந்த மாணவி அதிதி, நாசா ஆய்வகத்தைப் பார்வையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது கிராமம், போர்(Bhor) என்ற இடத்தின் அருகே ரோஹிடா கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அவர் படிக்கும் பள்ளி, அவரது வீட்டில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஏழாம் வகுப்பு வரையுள்ள இந்தச் சிறிய பள்ளியில் மொத்தமாக 17 மாணவர்களே உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றாகவே படிக்கிறார்கள். இந்த எளிய சூழலில், அதிதி ஐந்தாவது, ஆறாவது வகுப்பில் இருந்தபோது இஸ்ரோவில் சேர வேண்டுமெனக் கனவு கண்டார்.
இஸ்ரோவும் நாசாவும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைத் தேர்வு செய்வதாகக் கேள்விப்பட்டபோது, அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று அவர் கருதினார். முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றார், இரண்டாவது தேர்வு கணினியில் நடக்கும். ஆனால் அவர் இதற்கு முன் கணினி பயன்படுத்தியதில்லை. அப்போதுதான் தனது கிராமத்தில் இருந்து போர் பகுதிக்கான அவரது பயணங்கள் தொடங்கின.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



