You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: ஃப்ளோரிடாவை புரட்டிப்போடும் மில்டன் சூறாவளி, தொடரும் மீட்புப் பணிகள் - என்ன நடக்கிறது?
மில்டன் சூறாவளி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
ஃப்ளோரிடாவில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
செயின்ட் லூசி கவுன்ட்டியின் கிழக்கு கடற்கரையில் மில்டன் சூறாவளியால் 4 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு கடற்கரையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
அதே நேரத்தில் ஃப்ளோரிடாவில் வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.
"சில வாரங்களுக்கு முன்பு ஃப்ளோரிடாவை தாக்கிய ஹெலன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது ஏற்பட்டிருப்பது 'மோசமான சூழ்நிலை அல்ல', என்றும் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் சூறாவளி
மில்டன் சூறாவளி அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் ஐந்தாம் வகை (category 5) சூறாவளி ஆகும். இந்த சூறாவளி மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்தில் காற்றை வீசியது.
ஹெலன் சூறாவளி தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், புதன்கிழமை அன்று இரவு கடும் வேகத்தில் மில்டன் சூறாவளி ஃப்ளோரிடாவை தாக்கியது.
பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மக்களை வெளியேற்றும் பணியை அம்மாகாண அரசு மேற்கொண்டு வந்தபோது, 'இது வாழ்வா சாவா என்ற விஷயம்' எனக்கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஃப்ளோரிடா மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தார்.
பல்வேறு மக்கள் சூறாவளியில் இருந்து தப்பிக்க ஃப்ளோரிடாவை விட்டு வெளியேறியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையங்களும் மூடப்பட்டன.
ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்த பகுதியைத் தாக்கும் மிக மோசமான சூறாவளியாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
புயலுக்கு முன் 31 கவுன்டிகள், மக்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்ததால் 70,000க்கும் மேற்பட்ட ஃப்ளோரிடா மக்கள் அரசாங்க முகாம்களில் இருப்பதாக அமெரிக்க மத்திய அவசரகால மேலாண்மை ஆணையத்தின் தலைவர் டீன் கிறிஸ்வெல் பிபிசியின் ரேடியோ 4 டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
ஃப்ளோரிடாவில் பெரும்பாலான பகுதிகளைத் தவிர, ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலைனா பகுதிகளிலும் மில்டன் சூறாவளி பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரிடா முழுவதும் புதன்கிழமை அன்று குறைந்தது 116 சூறாவளி எச்சரிக்கைகள் விடப்பட்டன என்று அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார். மாகாணத்தில் இதுவரை 19 முறை சுழற்காற்று வீசியதாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
மீட்பு பணிக்காக மாகாண அதிகாரிகள் சுமார் 10,000 தேசிய காவல் படை உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர். 20 மில்லியன் உணவுப் பொட்டலங்கள் மற்றும் 40 மில்லியன் லிட்டர் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளது.
25 ஆண்டுகளில் தான் பார்த்த மிகவும் கடுமையான, சக்திவாய்ந்த புயல் என்று ஃப்ளோரிடாவில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகிறார்.
"மரங்கள் இவ்வளவு வளைந்ததை நான் பார்த்ததில்லை, இது உண்மையில் பயமாக இருந்தது", என்று பிபிசியிடம் ஒலாண்டோவில் வசிக்கும் ஃபில் பீச்சி கூறுகிறார்.
"இந்த புயலில் வலு குறைந்த பிறகுதான் இது ஏற்படுத்திய மோசமான பாதிப்பின் விளைவுகள் பற்றி தெரிய வரும்", என்றும் அவர் கூறினார்.
ஃப்ளோரிடாவில் உள்ள டாம்பா நகரத்தில் 35 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.
தற்போது மில்டன் சூறாவளியின் காற்றின் வேகம் மணிக்கு 129 கிலோமீட்டராகக் குறைந்துள்ளது.
ஃப்ளோரிடாவில் பாதிப்புகளை ஏற்படுத்திய பிறகு, அது அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கி நகர்ந்துள்ளது.
ஆனால் மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளி காற்றும் மழையும் தொடரும் என்று வானிலை கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)