'ஐ லவ் முஹமது' பதாகை சர்ச்சை - பல இந்திய நகரங்களில் எஃப்ஐஆர், போராட்டம் ஏன்?

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் மீலாதுன் நபியை முன்னிட்டு, 'ஐ லவ் முஹமது' (I Love Mohammad) என்ற பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

இதுதொடர்பாக எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவானதைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பல்வேறு நகரங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் காஷிபூரில் 'ஐ லவ் முஹமது' என்ற பேனரை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றபோது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் ஊர்வலம் நடந்ததையடுத்து அங்கும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்களின் மத சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்காக முஸ்லிம்களை காவல்துறை குறிவைப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், 'ஐ லவ் முஹமது' பேனரை வைத்ததற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என கூறியுள்ள கான்பூர் காவல்துறை, அதற்கென அமைந்துள்ள இடத்தில் அல்லாமல், வேறொரு இடத்தில் கூடாரம் அமைத்ததற்காகவே பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

'(மத) நம்பிக்கைக்காக யாரும் குறிவைக்கப்படவில்லை' என, உத்தர பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.

கான்பூரில் நடந்தது என்ன?

கான்பூர் மேற்கு துணை காவல் ஆணையர் தினேஷ் திரிபாதி தன் அறிக்கையில், "மீலாதுன் நபியை (Barawafaat) முன்னிட்டு, ரவாத்பூர் காவல்நிலைய பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஊர்வலம் நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட இடத்தில் அல்லாமல் அதிலிருந்து தொலைவில் 'ஐ லவ் முஹமது' என்ற பேனர் மற்றும் ஓர் கூடாரத்தை அப்பகுதி மக்கள் அமைத்திருந்தனர். இதற்கு ஒருதரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இருதரப்பின் பரஸ்பர சம்மதத்துடன் அந்த பேனர் வழக்கமான இடத்தில் அமைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஐ லவ் முஹமது' என்ற வார்த்தைக்காகவோ அல்லது பேனருக்காகவோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள தினேஷ் திரிபாதி, வழக்கமாக அமைக்கும் இடத்தில் அதை அமைக்காமல் இருந்ததற்காகவும் ஊர்வலத்தின் போது ஒரு தரப்பின் போஸ்டரை கிழித்ததற்காகவும்தான் பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

அந்த எஃப்ஐஆரில் முஸ்லிம் சமூகத்தினர் "ஐ லவ் முஹமது" என்ற பேனரை வைக்கும் புதிய வழக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், இதற்கு "மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த ஊர்வலத்தின்போது பணியில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினரே இந்த எஃப்ஐஆரை பதிவு செய்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் போது மற்ற மதங்களை சேர்ந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் உள்ள ராவத்பூர் காவல் நிலையத்தில் பதிவான எஃப்ஐஆரில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 மற்றும் 299ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது இரு தரப்பினரிடையே பகையுணர்வை தூண்டுதல் மற்றும் வெறுப்பை பரப்புதல் ஆகியவற்றை குறிக்கின்றன.

இந்த ஊர்வலத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரின் பெயர்கள் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் பத்திரிகையாளர் அபிஷேக் சர்மா, செப்டம்பர் 4 அன்று பேனர் வைக்கப்படுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாளான மீலாதுன் நபி அன்று ஊர்வலம் நடந்ததாகவும் கூறுகிறார், ஆனால் எஃப்ஐஆர் செப்டம்பர் 10-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

கான்பூரில் 'ஐ லவ் முஹமது' பேனர் தொடர்பான சர்ச்சை மற்றும் எஃப்ஐஆர் தொடர்பாக, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, செப். 15 அன்று கான்பூர் காவல்துறையை டேக் செய்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஐ லவ் முஹமது. இது குற்றம் அல்ல. இது குற்றமென்றால் நான் எந்த தண்டனையாக இருந்தாலும் ஏற்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

ஓவைசி தன் பதிவில், "நபியே, உங்களுக்காக மில்லியன் கணக்கான உயிர்களையும் தியாகம் செய்வேன்," என தெரிவித்துள்ளார்.

லக்னோவில் போராட்டங்கள், கைது செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள்

லக்னோவில் பல பெண்கள் கையில் 'ஐ லவ் முஹமது' பதாகையை ஏந்தி சட்டமன்றத்தின் நான்காம் எண் நுழைவாயிலுக்கு எதிரே போராட்டம் நடத்தினர்.

இந்த பெண்களின் போராட்டத்தை சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், கவிஞருமான மறைந்த முனவ்வார் ராணாவின் மகளுமான சுமையா ராணா வழிநடத்தினார்.

பிபிசி-யிடம் பேசிய சுமையா ராணா, பல இளைஞர்களும் இந்த போராட்டத்தில் சேர விரும்பியதாகவும், ஆனால் காவல்துறை அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார்.

"பெண்களான நாங்கள் காரில் சென்று சட்டமன்றத்தை அடைந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தோம். காவல்துறையினர் எங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்" என்று சுமையா பிபிசி-யிடம் கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்ற பல இளைஞர்களைக் காவல்துறை சில மணிநேரம் காவலில் வைத்திருந்ததாகச் சுமையா குற்றம் சாட்டினார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து லக்னோ காவல்துறை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

சுமையா மேலும், "முஸ்லிம்களுக்கு எதிராக உணர்வுகளை தூண்டும் பேச்சுகள் பேசப்படும்போது வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. முஸ்லிம்கள் தங்கள் அரசியலமைப்பு உரிமைகளின் கீழ் மத உணர்வுகளை வெளிப்படுத்தும்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. இது முஸ்லிம்களின் மத உணர்வுகளையும், உரிமைகளையும் அடக்குவதற்கான முயற்சி. இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

மறுபுறம், மத்திய லக்னோ காவல் துணை ஆணையர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, "சட்டமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டம் குறித்து எந்த எஃப்ஐஆர்-உம் பதிவு செய்யப்படவில்லை. போராட்டம் நடத்துவதற்கு சுற்றுச்சூழல் பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

உன்னாவ் நகரில் போராட்டம், பலர் கைது

கான்பூரில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்-க்கு எதிராக உன்னாவ் நகரில் ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து ஐந்து பேரைக் கைது செய்துள்ளது.

இந்த ஊர்வலத்தின்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் பரவும் பல காணொளிகளில், உன்னாவ்வின் கங்காகாட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல சிறார்களும் பெண்களும் 'ஐ லவ் முஹமது' பதாகைகளை ஏந்தி முழக்கமிடுவது தெரிகிறது.

உன்னாவ் நகரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) அகிலேஷ் சிங், "உன்னாவ்வில் பிரிவு 163 அமலில் உள்ளது. இதன் கீழ் அனுமதி இல்லாமல் ஊர்வலம் அல்லது போராட்டம் நடத்த முடியாது. கங்காகாட் பகுதியில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. காவல்துறை அங்குச் சென்றபோது, சில பெண்களும் குழந்தைகளும் அரசுப் பணியைத் தடுக்க முயன்றனர். இது தொடர்பாக ஐந்து பேர் காவலில் எடுக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

அகிலேஷ் சிங்கின் கூற்றுப்படி, தற்போது நிலைமை சீராக உள்ளது. மேலும், காவல்துறை ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர் தர்மபால் சிங், "சட்டத்துடன் யாரும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். தகவல் கிடைத்தவுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்குப் பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்

காசிபூரிலும் வன்முறை மற்றும் எஃப்ஐஆர் பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் காசிபூர் நகரில், ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் முஸ்லிம்கள் 'ஐ லவ் முஹமது' பதாகையை ஏந்தி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தின்போது காவல்துறையினருடன் மோதலும் ஏற்பட்டது.

உள்ளூர் செய்தியாளர் அபு பக்கரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காவல்துறை வழக்குப் பதிவு செய்து, காவல் படைகளை நிறுத்தியது. பலர் இரவுக்குள் கைது செய்யப்பட்டனர்.

உள்ளூர் செய்தியாளர் அபு பக்கரின் கூற்றுப்படி, காசிபூரின் அல்லீகான் பகுதியில் ஊர்வலம் நடைபெற்றபோது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு காவலருக்குக் காயம் ஏற்பட்டது.

காசிபூரிலும் மக்கள் கைகளில் 'ஐ லவ் முஹமது' பதாகைகளையும், பலகைகளையும் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

அபு பக்கரின் கூற்றுப்படி, "ஊர்வலம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்ற சில இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையின் வாகனத்தின் கண்ணாடிகளும் உடைந்தன."

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடுதல் காவல் படை வரவழைக்கப்பட்டு, தடியடி நடத்திக் கூட்டம் கலைக்கப்பட்டது.

உதம்சிங் நகரின் எஸ்எஸ்பி மணிகாந்த் மிஸ்ரா, "காசிபூரில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 400 பேர் பங்கேற்றனர். போலீசார் வாகனத்தின் மீதும் கூட்டம் தாக்குதல் நடத்தியது. நதீம் அக்தர் மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர்" என்றார்.

"இந்த மத உணர்வைத் தூண்டியதில் வேறு யார் எல்லாம் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிந்துகொள்ள நதீமிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என எஸ்எஸ்பி மேலும் தெரிவித்தார்.

காசிபூரில், மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் மின்சாரத் துறை குழுக்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. ஏதாவது சட்டவிரோதச் செயல்கள் நடக்கிறதா எனஅவர்கள் கண்காணிப்பதாக எஸ்எஸ்பி கூறினார்.

பிபிசி உள்ளூர் தலைவர்களையும், போராட்டத்தில் பங்கேற்றவர்களையும் தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் அவர்கள் பேச மறுத்துவிட்டனர்.

கோத்ரா மற்றும் மும்பையிலும் போராட்டம், கைதுகள்

'ஐ லவ் முஹமது' விவகாரத்திற்குப் பிறகு, குஜராத்தின் கோத்ரா மற்றும் மகாராஷ்டிராவின் மும்பையிலும் போராட்டம், எஃப்ஐஆர் பதிவு மற்றும் கைதுகள் நடந்துள்ளன.

பிபிசி செய்தியாளர் தக்ஷேஷ் ஷாவின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமை கோத்ராவில் ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறைக்குப் பிறகு 87 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்ஷேஷ் ஷாவின் கூற்றுப்படி, சமூக ஊடகங்களில் ஆர்வமாக இயங்கும் உள்ளூர் இளைஞர் ஜாகிர் ஜபா 'ஐ லவ் முஹமது' விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து அவரை காவல்துறை விசாரணைக்கு அழைத்தது.

காவல்துறையின் கூற்றுப்படி, அந்த இளைஞர் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால், காவல் நிலையத்திலிருந்து சென்ற பிறகு, அவர் காவல்துறை தன்னைத் துன்புறுத்தியதாகவும், தவறாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டி மற்றொரு காணொளியைப் பகிர்ந்தார். இது உள்ளூர் மக்களின் கோபத்தைத் தூண்டியது.

பஞ்ச்மஹால் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஹரேஷ் துதாத், "நான்காம் எண் சோதனைச் சாவடியை ஒரு கும்பல் சேதப்படுத்தியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை தடியடி நடத்த வேண்டியிருந்தது" என்றார்.

"இந்த இளைஞர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். நவராத்திரிப் பண்டிகையை முன்னிட்டு, நாங்கள் அவரை அழைத்து, ஆட்சேபனைக்குரிய தகவல்களைப் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் இது காவல்துறை ஜாகிரைத் தாக்கியது என்ற தவறான புரிதலை ஏற்படுத்தியது. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது," என்று காவல் கண்காணிப்பாளர் மேலும் கூறினார்.

அதே சமயம், மும்பையின் பைகுலா பகுதியிலும் முஸ்லிம்களின் போராட்டத்திற்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்தியாளர் அல்பேஷ் கர்கரேயின் கூற்றுப்படி, ''செப்டம்பர் 21-ஆம் தேதி மும்பையின் பைகுலா பகுதியில் சில ஆண்களும் பெண்களும் பேரணி நடத்தினர். பைகுலா காவல்துறையின் கூற்றுப்படி, அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.''

இந்த எஃப்ஐஆர் 'ஐ லவ் முஹமது' பிரச்சாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டின.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தொண்டர்கள் உட்பட முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்கள் பைகுலா காவல் நிலையத்திற்கு வெளியே கூடினர்.

காவலில் வைக்கப்பட்ட நபருக்கு நோட்டீஸ் கொடுத்துக் காவல்துறை அவரை விடுவித்தது.

பஹ்ரைச்சில் மனு அளித்தவர்கள் மீது வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தின் கைசர்கஞ்ச் வட்டாரத்தில் மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்கள் குழு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஃபைசுல் ஹசன் பிபிசி-யிடம், "நாங்கள் அமைதியான ஊர்வலம் நடத்தினோம். 'ஐ லவ் முஹமது' பதாகை வைக்கப்பட்டதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தோம். நாங்கள் எந்த முழக்கத்தையும் எழுப்பவில்லை, எந்த சட்டத்தையும் மீறவில்லை. ஆனால், பிறகு எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என அறிந்தோம்" என்றார்.

இந்த எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ஃபைசுல் ஹசன் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஃபைசுல், "முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை நேசிக்கிறார்கள். எங்கள் நபியின் மீதான அன்பை வெளிப்படுத்தும்போது நாங்கள் குறிவைக்கப்படுகிறோம்" என்றார்.

'முஸ்லிம்களுக்கு எதிராக குறிவைக்கப்பட்ட நடவடிக்கை' - சமூக ஆர்வலர்

சிறிய சம்பவங்கள் பெரிதாக்கப்பட்டு, முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதாகவும், அவர்களின் மத உணர்வுகளைத் தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

'யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட்' அமைப்பைச் சேர்ந்த நதீம் கான் பிபிசி-யிடம், "பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை எடுத்தது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் எத்தனை எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டன அல்லது எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற உறுதியான தகவலை நாங்கள் இன்னும் சேகரிக்கவில்லை" என்றார்.

நதீம் கான், "கான்பூரில் நடந்த சம்பவம் முஸ்லிம்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது முதல் சம்பவம் அல்ல. நிலைமை படிப்படியாக இந்த நிலையை அடைந்துள்ளது. ரமலான் மாதத்தில் மொராதாபாத்தில் வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிறகு மொட்டை மாடியில் தொழுகை நடத்தத் தடை விதிக்கப்பட்டது. இப்போது நபிகள் நாயகத்தின் பதாகைக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதற்கும், அவர்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது" என்றார்.

கான்பூர் சம்பவம் குறித்து நதீம் கான், "'ஐ லவ் முஹமது' பதாகை கிழிக்கப்பட்டது. அதை குறித்து முஸ்லிம்கள் புகார் அளித்த போதிலும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்கு எதிராகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எங்கள் குழு கான்பூர் காவல் ஆணையரைச் சந்திக்க உள்ளது. பதாகையைக் கிழித்ததற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாவிட்டால், எங்கள் அரசியலமைப்பு உரிமைகளின் கீழ் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் பதிவு செய்வோம்" என்றார்.

நதீம் கானின் குற்றச்சாட்டுகளுக்கு கான்பூர் காவல்துறை பதிலளிக்கவில்லை.

30 கோடி முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? - இம்ரான் பிரதாப்கடி

நபிகள் நாயகத்தின் மீது அன்பை வெளிப்படுத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படுமானால், ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகத்தை தங்கள் உயிரைவிட அதிகமாக நேசிக்கிறார்கள் என்பதால் இந்தியாவின் 30 கோடி முஸ்லிம்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுமா என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் பிரதாப்கடி கேள்வி எழுப்புகிறார்.

அனுமதி இல்லாமல் முஸ்லிம் இளைஞர்கள் ஊர்வலம் செல்லக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் சட்டச் சிக்கலில் சிக்கிக்கொள்ளக்கூடும் என்றும் இம்ரான் பிரதாப்கடி கூறுகிறார்.

இம்ரான் பிரதாப்கடி, "நீங்கள் போராட்டம் அல்லது தர்ணா நடத்த விரும்பினால், அதற்கு அனுமதி பெறுங்கள். அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் அமைதியான வழியில் போராட்டம் நடத்த சில இடங்கள் உள்ளன. அங்கு அமர்ந்து கூட எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். சமூக ஊடகங்கள் மூலமாகவும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வழிகள் உள்ளன" என்றார்.

பல எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்படுவது குறித்து, "நிர்வாகம் முஸ்லிம்களைக் குறிவைக்கத் தயாராக உள்ளது. எனவே, மக்கள் தங்கள் உணர்வுகளை எச்சரிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும்" என்று இம்ரான் தெரிவித்தார்.

'சூழலைக் கெடுக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்' - பாஜக

பாரபட்சம் காட்டுவதாக அரசு மற்றும் காவல்துறை மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, "சட்டத்தை மீறுபவர்கள் மீது மதத்தைப் பார்த்து அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

இந்தச் சம்பவத்தை வைத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் கெடுக்கவும் அரசியல் செய்யவும் முயற்சி நடப்பதாகவும் ராகேஷ் திரிபாதி கூறினார்.

பிபிசி-யிடம் பேசிய ராகேஷ் திரிபாதி, "யாரையும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் குறிவைக்க முடியாது. எந்த மத முழக்கத்திற்கும் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், எந்த முழக்கமும் அல்லது கோஷமும் சட்டத்தின் வரம்பை மீறினால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சுவரொட்டி, பதாகை அல்லது கோஷம் எங்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு இடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மீறப்பட்டு, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்ட ஒரு பிரசாரமாக முயற்சி நடக்கிறது. அது சரியல்ல" என்றார்.

முஸ்லிம்களின் இந்த எதிர்வினைக்கான காரணம் என்ன?

கான்பூர் சம்பவத்திற்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்திலும் போராட்டங்கள் நடந்துள்ளன. 'ஐ லவ் முஹமது' விவகாரத்தில் பல மாநிலங்களில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் முஸ்லிம்கள் 'ஐ லவ் முஹமது' படங்களை இடுகையிட்டுள்ளனர். இந்த சுவரொட்டியைப் பலர் தங்கள் சுயவிவரப் படமாக (புரொஃபைல் பிக்சர்) வைத்துள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விவேக் குமார், "மைய அளவில் ஏதேனும் ஒரு கொள்கையின் கீழ் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள் அல்லது இது ஒரு பிரசாரம் என்று கூற முடியாது. ஆனால், சிறிய சம்பவங்கள் மற்றும் அவற்றின் எதிர்வினைகள் மூலம் சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகி வருவது தெரிகிறது" என்றார்.

பேராசிரியர் விவேக் குமார், "ஒரு குழு தாங்கள் பலவீனமானவர்கள் அல்லது வித்தியாசமானவர்கள் என்று உணர வைக்கப்படுகிறார்கள்" என்றார்.

இருப்பினும், ஒரு குழு ஏன் எஃப்ஐஆர்-ஐ இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் பேராசிரியர் விவேக் குமார் வாதிடுகிறார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன், தங்கள் அரசியலமைப்பு உரிமைகள் தாக்கப்படுவதாக அவர்களுக்கு ஏன் தோன்றுகிறது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் என அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு