பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

பட மூலாதாரம், @rashtrapatibhvn
'பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை' விருதை ஏற்பாடு செய்த பிபிசி குழுவினரை இந்தியக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பாராட்டியுள்ளார்.
2024ஆம் ஆண்டின், பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை யார் என்பது டெல்லியில் இன்று இரவு (திங்கட்கிழமை, பிப்ரவரி 17) அறிவிக்கப்படும்.
இரண்டு வாரங்களாக பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு வாக்களித்தனர்.
ஐந்தாவது முறையாக வழங்கப்படும் 'பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை' விருதுக்கு, கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர், அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்த்து
இது தொடர்பாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "'பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை' என்ற நிகழ்வை முன்னெடுத்ததற்காக பிபிசியின் குழுவைச் சேர்ந்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
"2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற விருதை வழங்குகிறது. இதன் மூலம் விளையாட்டுகளில் பெண்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி தனது அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்."
"இந்த முயற்சியின் மூலம் அங்கீகரிக்கப்படும் அசாதாரண விளையாட்டு வீரர்கள், தங்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், இளம் பெண்கள் தங்கள் கனவுகளை அச்சமின்றித் தொடரவும் ஊக்கமளித்துள்ளனர்." எனவும் அவர் கூறியுள்ளார்.

நமது பெண்கள் விளையாட்டு விருதுகளை வெல்லும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.
"இந்திய பெண்கள் விளையாட்டு வீரர்களாக உலக அரங்கில் தங்கள் முத்திரையைப் பதிப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். சர்வதேச போட்டிகளில் அவர்கள் பதக்கங்களை வெல்லும்போதும், தேசிய கீதத்தின் இசைக்கு ஏற்ப மூவர்ணக் கொடி உயரப் பறக்கும்போதும், ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகின்றனர்." என்று அவர் கூறியுள்ளார்.
பாலின கற்பிதங்கள் மற்றும் முன்முடிவுகளுக்கு எதிராக விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என கூறியுள்ள முர்மு, சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்திய பெண்கள் தடைகளைத் தாண்டி புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

"காமன்வெல்த், ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அவர்களின் செயல்திறன், அவர்கள் மேற்கொண்ட பெரிய முன்னேற்றங்களையும் இந்திய அரசாங்கத்தால் காட்டப்பட்ட உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது." என கூறியுள்ளார் முர்மு.
சிறந்த விளையாட்டு வீராங்கணைகளின் ஊக்கமளிக்கும் கதைகளை முடிந்தவரை பரவலாகப் பரப்புவது மிகவும் முக்கியம் என வலியுறுத்தியுள்ள அவர், இது விளையாட்டு வீராங்கனைகளின் தரத்தை உயர்த்தவும் இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வாழ்த்துச் செய்தியில், "பெண்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்குமாறு பெற்றோர்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இது வெறும் வெற்றி பெறுவதைப் பற்றியது அல்ல; இது நம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றியது." என்று கூறியுள்ளார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் உள்ள விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளைக் கௌரவிப்பதற்கும், விளையாட்டு வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை முன்னிலைப்படுத்துவதற்கும் பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இன்றிரவு நடைபெறும் விழாவில், ஒரு இளம் தடகள வீரரின் சாதனைகளை அங்கீகரிக்கும் பிபிசி வளரும் வீராங்கனை விருது, விளையாட்டுத் துறையில் இணையற்ற பங்களிப்பு செய்ததற்காக ஒரு விளையாட்டு வீரரை கௌரவிக்கும் பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பாரா விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களை முன்னிலைப்படுத்தும் விதமாக, பிபிசி பாரா ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் தி இயர் விருது ஆகிய பிரிவுகளில் நடுவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற மூன்று விளையாட்டு வீராங்கனைகளையும் பிபிசி கௌரவிக்கும்.
இந்த விருது வழங்கும் விழா பிபிசியின் இந்திய மொழித் தளங்கள் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க விழாவில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
அந்த ஆண்டுக்கான வெற்றியாளராக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அறிவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராக உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பி அறிவிக்கப்பட்டார்.
கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்றார்.
வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் பெற்றுள்ளனர்.
தடகள வீராங்கனைகளான பி.டி.உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ், பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை ப்ரீதம் சிவாச் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












