You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏமனில் சில நாட்களில் மரண தண்டனை: நிமிஷா பிரியாவை இந்தியா நேரடியாக தலையிட்டு மீட்க முடியுமா?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
ஏமனில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவை, தூதரக நடவடிக்கை மூலம் இந்திய அரசு மீட்க உத்தரவிடக் கோரி, 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' குழு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 10) மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜெய்மால்யா பாக்சி தலைமையிலான அமர்வு, ஜூலை 14-ஆம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.
அதே நேரம், ஜூலை 16ஆம் தேதி நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியிருப்பதால், வழக்கின் தன்மை மற்றும் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, மனுவின் நகலை இந்திய அட்டர்னி ஜெனரலிடம் சமர்பிக்குமாறு மனுதாரர்களை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அது குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கோரியுள்ளனர்.
நிமிஷா பிரியாவை மீட்க அல்லது அவரது தண்டனையைக் குறைக்கும் நோக்கில், இந்திய அரசு இந்த வழக்கில் நடவடிக்கைகள் எடுக்க முடியுமா?
மஹ்தி குடும்பத்தின் மன்னிப்பு
ஏமன் நாட்டு குடிமகனும் தனது தொழில்முறை பங்குதாரருமான தலால் அப்தோ மஹ்தி என்பவரை 2017இல் கொலை செய்ததாக நிமிஷா பிரியா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், மரண தண்டனை பெற்று ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா பிரியா.
ஏமனில் இருந்து அவரை மீட்பதற்கான அனைத்து சட்டப்பூர்வ வழிகளும் மூடப்பட்டுவிட்டன என்றே கூறலாம்.
காரணம் 2017இல் ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை துண்டாக்கி அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், 2020இல் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏமனின் உச்சநீதிமன்றம் நவம்பர் 2023-இல் தள்ளுபடி செய்து, மரண தண்டனையை உறுதி செய்தது.
பிறகு இந்த வருடத்தின் தொடக்கத்தில் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமனின் ஹூத்தி பிரிவு அதிபர் மெஹ்தி அல் மஷாத் ஒப்புதல் அளித்தார்.
ஆனால், ஏமனில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், 'ப்ளட் மணி' அல்லது 'தியா' எனப்படும் பணத்திற்கு ஈடாக பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு அளித்தால் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்ற வாய்ப்பு தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
ஜூலை 16, நிமிஷாவுக்கு ஏமனில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், மஹ்தி குடும்பத்திடம் இருந்து மன்னிப்பு பெறுவது மட்டுமே சாத்தியமான வழியாக உள்ளது.
'இந்திய அரசிடம் நிதியுதவி கேட்கவில்லை'
மஹ்தி குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்பதே 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' எனும் தன்னார்வலர் குழுவின் வேண்டுகோளாக உள்ளது.
நிமிஷாவை மீட்க வேண்டும் என்ற நோக்கில் 2020ஆம் தொடங்கப்பட்ட இக்குழுவின் சார்பாகவே மூத்த வழக்கறிஞர் ரகேந்த் பசந்த் மற்றும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன், "நாங்கள் நிமிஷாவை மீட்க பணம் கொடுங்கள் என இந்திய அரசைக் கோரவில்லை. பணத்தை 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' நன்கொடை மூலம் திரட்டிவிடும்.
எப்படியாவது மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்த, இந்திய அரசு அதிகாரபூர்வமாக உதவ வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அதை வலியுறுத்தியே மனு தாக்கல் செய்துள்ளோம்" என்கிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டதால் அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.
ஏமன் நாட்டில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போர்தான் உலகிலேயே மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடி என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியது. பல வருடங்களாக ஏமனில் அந்த உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது.
இதைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன், "அந்த உள்நாட்டுப் போர் இந்த வழக்கில் பெரும் தாக்கம் செலுத்தியது. 2017இல் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது நிமிஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு அங்கு முறையான சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால், அங்கு அப்போது முறையான அரசு நிர்வாகம் இல்லை." என்கிறார்.
ஏமனின் உள்ளூர் மொழியில் பல ஒப்புதல் வாக்குமூல ஆவணங்களில் கையெழுத்திட நிமிஷா கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும், அதுவே அவருக்கு மரண தண்டனை பெற வழிவகுத்தது என்றும் 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "இன்னுமும் மஹ்தி குடும்பத்துடன் நேரடி பேச்சுவார்த்தை என்பது சாத்தியப்படவில்லை. ஷரியா சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பும் போது மட்டுமே 'பிளட் மணி' பொருந்தும். இல்லையெனில் கிசாஸ் (Qisas- கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்ற ரீதியிலான தண்டனை) பொருந்தும்."
"அப்படியிருக்க, ஏமன் நீதித்துறை நிமிஷாவுக்கு மன்னிப்பு பெறுவதற்கான வாய்ப்பை தொடர்ந்து அளித்து வருகிறது. ஆனால், பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏமனில் உள்நாட்டுப் போர் தொடர்வதும், ஏமனுக்கு இந்தியர்கள் பயணிக்க தடை உள்ளதும் 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்' குழு இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதை மேலும் கடினமாக்குகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா- ஏமன் உறவுகள்
2015ஆம் ஆண்டு ஏமனில் உள்நாட்டுப் போர் வெடித்தவுடன், அங்கு இருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயரே 'ஆபரேஷன் ரஹாத்'. இந்திய கப்பற்படை மற்றும் விமானப்படையின் உதவியோடு இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆனால், அனைத்து இந்தியர்களும் வெளியேறவில்லை, நிமிஷா உள்பட சிலர் ஏமனில் இருக்க முடிவு செய்தனர்.
பிறகு, 2017 செப்டம்பரில் ஏமனில் நிலவும் உள்நாட்டுப் போர் சூழலையும், பாதுகாப்பு காரணங்களையும் சுட்டிக்காட்டி, இந்தியர்கள் ஏமனுக்கு செல்ல மத்திய அரசு தடை விதித்தது.
அதுமட்டுமல்லாது, உள்நாட்டுப் போர் காரணமாக ஏமன் தற்போது மூன்று பிரிவுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சனா உள்ளிட்ட ஏமனின் ஒரு பகுதி ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹூத்திக்களின் அரசியல் பிரிவு தலைவராக உள்ள மெஹ்தி அல் மஷாத், அந்த கிளர்ச்சிக்குழு அமைத்துள்ள ஏமன் குடியரசின்(சனா) அதிபராக செயல்படுகிறார்.
சௌதி அரேபியா ஆதரவுடன் செயல்படும், ஐ.நா. அங்கீகாரம் பெற்ற அரசு ஏமனின் மற்றொரு பகுதியை கட்டுப்படுத்துகிறது. இந்த அரசின் தலைவராக, அதிபர் ரஷாத் அல் அலிமி செயல்படுகிறார்.
மேற்கண்ட இரண்டும் அல்லாத, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற சதர்ன் டிரான்ஸிஷனல் கவுன்சில் (Southern Transitional Council) ஏடன் துறைமுகம் உள்ளிட்ட ஏமனின் பகுதிகளை கட்டுப்படுத்துகிறது.
இத்தகைய காரணங்களால் மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பல தடைகள் இருப்பதாகக் குறிப்பிடும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன், "எனவே அந்தக் குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அரசு உதவ வேண்டும். நேரடியாக ஹூத்திக்களுடன் அல்லது இந்தியாவின் நட்பு நாடுகளான இரான், ஓமன் மூலம் இதைச் செய்யலாம்" என்கிறார்.
ஆனால், இந்தியா இதுவரை ஹூத்தி கிளர்ச்சிக் குழுவை அங்கீகரிக்கவில்லை. அவர்களுடன் இந்தியாவுக்கு நேரடி தூதரக உறவுகளும் இல்லை. சௌதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் ரஷாத் அல் அலிமியின் அரசையே இந்தியா அங்கீகரித்துள்ளது. அதற்கான இந்தியத் தூதரகம் சௌதி அரேபியாவின் ரியாத்தில் செயல்படுகிறது.
"2015இல் இந்தியர்களை ஏமனில் இருந்து மீட்பதற்கு 'ஆபரேஷன் ரஹாத்' நடத்தப்பட்டபோது, ஹூத்திகள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் ஒத்துழைத்தனர். எனவே நிமிஷா விஷயத்திலும் இந்தியா தலையிட்டால் தீர்வு கிடைக்கும்" என்கிறார் சமூக ஆர்வலர் மற்றும் நிமிஷாவின் குடும்பத்தின் சார்பாக ஏமனில் நிமிஷாவின் வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம்.
இதுவரை நிமிஷா உயிர்பிழைத்திருப்பதே ஹூத்தி குழு இந்தியாவின் மீது நன்மதிப்பைக் கொண்டுள்ளதால் என்று கூறும் அவர், "இனி குறைவான அவகாசமே உள்ள நிலையில், இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்.
அதேபோல, நிமிஷா பிரியா வழக்கில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, அவரை மீட்க வேண்டுமென சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ் தனது எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு என்ன செய்ய முடியும்?
நிமிஷா பிரியாவை மீட்பது குறித்து பிபிசியிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள், ஏமனின் ஒரு பகுதியை ஆளும் ஹூத்திக்களுடன் இந்தியா எவ்வித தூதரக உறவுகளையும் கொண்டிருக்கவில்லை என்று கூறுகின்றன
''நிமிஷா பிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சனா, ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதி. இருப்பினும், இந்திய அரசாங்கம் வேறு தொடர்புகள் மூலம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் மிகப்பெரிய தடையாக இருப்பது கொல்லப்பட்டவரின் குடும்பம் ப்ளட் மணி எனப்படும் மன்னிப்பு வழங்குவதற்கான பணத்தை ஏற்க மறுப்பதுதான். எனவே வாய்ப்புகள் மிகக் குறைவு.'' என தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய சர்வதேச விவகாரங்களின் நிபுணரும், சென்னை லயோலா கல்லூரியின் சமூக பணித்துறை பேராசிரியருமான கிளாட்சன் சேவியர், "இந்த விஷயத்தில் இந்தியா, தூதரக உறவுகள் மூலம் அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதோ அல்லது நேரடியாக ஹூத்திகளுடன் பேசுவதோ கடினம். ஏமனின் உள்நாட்டு விவகாரம் இது. ஹூத்திகளின் அரசியல் என்பது தீவிர போக்கு கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார்.
இந்த விஷயத்தில் இந்தியாவால் ஆணையிட முடியாது, வேண்டுகோள்களையே வைக்க முடியும் என்று கூறுகிறார் கிளாட்சன்.
"குற்றம் நடந்துள்ளது, அதை மறுக்க முடியாது. எந்த நாடும் தனது குடிமகன் கொல்லப்பட்டால், அதை எளிதில் விட்டுவிடாது. இதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தரப்பையும் புரிந்துகொண்டு பிரச்னையை அணுக வேண்டும்." என்கிறார்.
மேலும், "இஸ்லாமிய ஷரியா சட்டம் பழிவாங்குவதை விட மன்னிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, ஏமன் பழங்குடி குழுக்களின் மதகுருமார்கள் மூலமாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அரசு உதவி செய்யலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மன்னிப்பைப் பெற முயற்சிப்பதே சிறந்த வழியாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
இரான் அல்லது ஓமன் போன்ற நட்பு நாடுகள் மூலமாக அணுகினாலும் கூட, அதுவே வழி என்கிறார் கிளாட்சன் சேவியர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு