You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை - பிகாரில் நள்ளிரவில் பயங்கரம்
பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள டெட்காமா கிராமத்தில் ஒரே குடும்பத்தை ஐந்து பேர் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூர்னியா காவல்துறையின் கூற்றின்படி, உயிரிழந்தவர்களில் பாபுலால் ஓரான் அவரது மனைவி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஜூலை 6ஆம் தேதி ஞாயிறன்று நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூர்னியா மாவட்ட ஆட்சியர் அன்சுல் குமார் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பூர்னியாவை சேர்ந்த சுயேட்சை எம்பி பப்பு யாதவ் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரோடு எரிக்கப்பட்டுள்ளனர்." என எழுதியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பூர்னியா மாவட்ட ஆட்சியர் அன்சுல் குமார் தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இரவு சுமார் 2 மணியளவில் ஐந்து பேர் தாக்கப்பட்டனர். அடித்து உதைத்தபின்னர் அவர்கள் எரிக்கப்பட்டதாக தெரிகிறது. திங்கட்கிழமை காவல்துறையும், நிர்வாகமும் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியது" என அவர் தெரிவித்தார்.
"முதல் தகவல் அறிக்கையில் 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 150 முதல் 200 அடையாளம் காணப்படாதவர்கள் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஒரு சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்."
கிராமத்தில் தற்போதைய நிலை குறித்த தகவலையும் அன்சுல் குமார் தெரிவித்தார். "டெட்காமாவை சேர்ந்த பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய காவல்துறை தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது," என அவர் தெரிவித்தார்.
காவல்துறை சொன்னது என்ன?
மறுபுறம். இந்த வழக்கில் இதுவரை முக்கிய குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பூர்னியா டிஐஜி பிரமோத் குமார் மண்டல் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரமோத் மண்டல். "21ஆம் நூற்றாண்டில் இது நடக்கக்கூடும் என யாரும் நம்ப மாட்டார்கள் ராம்தேவ் மஹாடோவின் குடும்பத்தில் ஒரு குழந்தை உடல்நலமில்லாமல் இருந்தது. அவரை குணப்படுத்தும்படி உயிரிழந்தவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதும்," எனத் தெரிவித்தார்.
"குழந்தை குணமடையாததால், குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர்களில் இருவரை தவிர ஒரு டிராக்டர் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் 40 முதல் 50 பேர் இருந்தனர்," என அவர் கூறினார்.
எஞ்சிய குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி ரெய்டுகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இந்த கொலைகள் மந்திரம், பில்லி சூனியத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. உயிரிழந்த குடும்பத்தினர் பில்லிசூனியம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது" என பூர்னியா எஸ்டிபிஒ பங்கஜ் குமார் ஷர்மா தெரிவித்தார்.
"சூனியம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தனது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தாக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டதாக அந்த குடும்பத்தை சேர்ந்த சிறார் ஒருவர் தெரிவித்துள்ளார்," என அவர் கூறியுள்ளார்.
"இது மிக தீவிரமான ஒரு சம்பவம், எந்த குற்றவாளியும் தப்பமுடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என எஸ்டிபிஒ தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன
பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நடந்த மற்றொரு சம்பவத்தை சுட்டிகாட்டி அவர் பூர்னியாவில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.
சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், "பூர்னியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்," என தெரிவித்தார்.
மற்றொரு பதிவில், "குற்றவாளிகள் விழிப்புடன் இருக்கின்றனர், முதல்வர் மயக்கநிலையில் இருக்கிறார்," என தெரிவித்துள்ளார்.
பூர்னியா எம்.பி. பப்பு யாதவ் இந்த சம்பவம் அவமானகரமானது என விமர்சித்தார்.
சமூக ஊடக தளமான எக்ஸில், "பூர்னியாவில் ஒரு பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவமானகரமானது," என அவர் பதிவிட்டார்.
"உலகம் செவ்வாய் கிரகத்தை எட்டிவிட்டது, ஆனால் நம் மக்கள் சூனியக்காரர்களின் பெயரால் இனப்படுகொலை செய்துகொண்டிருக்கின்றனர்,"என அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு