யுபிஐ மூலம் கட்டுக்கடங்காமல் செலவு செய்வதாக தோன்றுகிறா? தடுப்பதற்கு 4 வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அஜித் கட்வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் வசதி கிடைத்ததிலிருந்து, ரூ.10 - 15 மதிப்புள்ள தேநீர் முதல், குழந்தைகளின் பள்ளி கட்டணம் வரை அனைத்தும் மொபைல் ஃபோன் மூலமாக செலுத்தப்படுகின்றன.
மக்கள் இப்போது அடிக்கடி பணம் எடுக்க ஏடிஎம்களுக்குச் செல்வதில்லை, இதனால் ஏடிஎம்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
பணம் செலுத்தும் வசதியை யுபிஐ மிகவும் வேகமாகவும் எளிதாகவும் மாற்றியுள்ளது. ஆனால், ரொக்கத்திற்குப் பதிலாக யுபிஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தேவையற்ற செலவுகளை அதிகமாகச் செய்கிறீர்களா? நீங்கள் நிதி கசிவுக்கு பலியாகியுள்ளீர்களா? சிறிய தொகைக்கான செலவுகளில் உங்கள் கவனம் செல்லாமல், இறுதியில் ஒவ்வொரு மாதமும் பெரிய தொகையைச் செலவிடுகிறீர்களா?
யுபிஐ வசதி காரணமாக நுகர்வோர் தாராளமாக செலவு செய்யத் தொடங்கிவிட்டார்களா என்பதை அறிய பிபிசி நிதி ஆலோசகர்களுடன் பேசியது. அப்படியென்றால் செலவுகளைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதையும் அறிந்துகொள்ள முயற்சித்தது.

பட மூலாதாரம், Getty Images
ரொக்க நோட்டுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு
சான்றளிக்கப்பட்ட நிதி திட்டமிடுபவரான வினோத் ஃபோக்லா கூறுகையில், "யுபிஐ காரணமாக வாடிக்கையாளர்களின் நடத்தையில் நிச்சயமாக மாற்றம் காணப்படுகிறது. அவர்கள் தேவையற்ற செலவு செய்வதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம், ரொக்க நோட்டுடன் மக்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு (emotional connection) உள்ளது. எனவே, நீங்கள் ரொக்கமாகப் பணம் செலுத்தும்போது, அதன் மீது கவனம் செலுத்துகிறீர்கள், ஆனால் மொபைல் மூலம் பணம் செலுத்தும்போது அது நிகழ்வதில்லை."
"ஆன்லைனில் பணம் செலுத்தும்போது உங்கள் வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் வாலட்டில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது, எனவே அவ்வளவாகக் கவனம் செலுத்தப்படுவதில்லை."
நிதி இலக்குத் திட்டமிடுபவர் பிரியங்க் தாக்கரும் இதை ஒப்புக்கொள்கிறார். "ரூ.500 கரன்சி நோட்டைக் கொடுக்கும்போது நீங்கள் இரண்டு விநாடிகள் சிந்திக்கிறீர்கள். ஆனால் க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது யாரும் அவ்வளவு யோசிப்பதில்லை." என்கிறார் அவர்.
"டிஜிட்டல் பேமென்ட் செயலிகள் காரணமாகப் பணம் செலுத்துவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது டீ, பால் முதல் அதிக மதிப்பு உள்ள பொருட்கள் வரை பலவற்றைக்கு க்யூஆர் கோட் மூலமாக பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் இதன் காரணமாகத் திட்டமிடப்படாத செலவுகள் அதிகரித்துவிட்டன."
அவர் மேலும், "உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நோட்டை யாருக்காவது கொடுத்தால், உங்கள் பணம் போய்விட்டது என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது. ஆனால் மொபைலில் ஸ்கேன் செய்யும்போது அப்படி ஒரு உணர்வு ஏற்படுவதில்லை. இதனால், ரூ.50 முதல் ரூ.100 வரையிலான சிறிய பரிவர்த்தனைகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை, மாத இறுதியில் செலவின் அளவு மொத்தமாக பெரியதாகிவிடுகிறது." என்கிறார்
"நீங்கள் டீக்கு ரூ.20 கொடுக்கிறீர்கள், கார் பார்க்கிங்கிற்கு ரூ.30 செலுத்துகிறீர்கள், ஆன்லைன் ஷாப்பிங்கில் சலுகை இருந்ததால் எதையோ வாங்கினீர்கள். இதன் காரணமாக நிதி கசிவு ஏற்படுகிறது, இது நீண்ட காலத்திற்கு உங்கள் சேமிப்பைக் குறைத்துவிடுகிறது. இந்த ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் உங்கள் பாக்கெட்டில் இருந்து ரொக்கப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால், நீங்கள் அநேகமாக இவ்வளவு செலவு செய்ய மாட்டீர்கள்," என்று அவர் சொல்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
வாடிக்கையாளரின் நடத்தையில் வெவ்வேறு விளைவு
நிதி நிபுணர்கள், ரொக்கப் பணம் செலுத்தும்போதும் ஆன்லைனில் பணம் செலுத்தும்போதும் வாடிக்கையாளரின் நடத்தை வெவ்வேறு விதமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
"ரொக்கமாகச் செலவு செய்யும்போது, வாடிக்கையாளருக்கு எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பது குறித்துத் தெரியும்'' என்கிறார் ஆமதாபாத்தைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் ஆத்மன் ஷா.
"உங்கள் பாக்கெட்டில் ரூ.100 இருக்கும்போது, அதில் ரூ.20 செலவழித்தால், உங்களிடம் இப்போது ரூ.80 மட்டுமே உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் கவனத்துடன் செயல்படுகிறீர்கள். ஆனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, அப்படி ஒரு யோசனை வராது. இதன் காரணமாகச் சிறிய செலவுகள் அதிகரிக்கின்றன."
"சில ஆய்வுகளின்படி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள், ரொக்கமாகப் பணம் செலுத்துபவர்களை விட சுமார் 40 முதல் 45 சதவீதம் அதிகமாகச் செலவு செய்கிறார்கள். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது, தங்கள் பணம் குறைந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வு குறைவாக இருக்கும்," என ஆத்மன் ஷா கூறுகிறார்.
"எனவே, அதிகச் செலவு செய்ய எந்தவிதமான மனத் தடையும் ஏற்படுவதில்லை. இது தவிர ஆட்டோ பேமெண்ட் மற்றும் சந்தாக்கள் போன்ற வசதிகள் நீண்ட கால செலவுப் போக்கை மேலும் வலுப்படுத்துகின்றன. கேஷ்பேக் மற்றும் லாயல்டி வெகுமதிகள் போன்ற வசதிகள் மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தூண்டுகின்றன."

ஒவ்வொரு செலவையும் தொடர்ந்து கண்காணியுங்கள்
யுபிஐ காரணமாக அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
"செலவைக் கண்காணிக்க, முதலில் ஒவ்வொரு வாரமும் உங்கள் வங்கி கணக்கு அறிக்கை மற்றும் மொபைல் வாலட் அறிக்கைகளைச் சரிபார்க்கவும். உங்கள் செலவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கவும் - அத்தியாவசியச் செலவு, வாழ்க்கை முறைச் செலவு மற்றும் தற்செயலான செலவு. வாழ்க்கை நடத்தத் தேவையான அனைத்து செலவுகளும் 'அத்தியாவசிய செலவுகள்' எனக் கருதப்படுகின்றன" என நிதி இலக்குத் திட்டமிடுபவரான பிரியங்க் தாக்கர் கூறுகிறார்.
"அதன் பிறகு, சில வசதிகளுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் வாழ்க்கை முறைப் பிரிவிலும், உணர்ச்சிவசப்பட்டு மட்டும் செய்யப்பட்ட செலவுகள் தற்செயல் பிரிவிலும் வைக்கப்படுகின்றன. மாத இறுதியில், நீங்கள் எந்தச் செலவைத் தவிர்த்திருக்க முடியும் என்று பாருங்கள்."
"நீங்கள் ஒருவருக்கு ரூ.500 கடன் கொடுத்திருந்தாலும் அதைப் பதிவு செய்யுங்கள். நீங்கள் தினமும் எவ்வளவு செலவு செய்தாலும் அது ரூ.5-ரூ.10 ஆக இருந்தாலும் அதை எல்லாம் பதிவு செய்து வையுங்கள், ஏனெனில் மொபைல் மூலம் யுபிஐ பேமென்ட் செய்யும்போது, சிறிய தொகையிலான பரிவர்த்தனைகள் குவியலாகி, மொத்தத் தொகை பெரியதாகிவிடும்," என சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவரான வினோத் ஃபோக்லா கூறுகிறார்.
இது தவிர, "மொபைல் பேமென்ட் காரணமாக மனதில் வந்தவுடன் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த, '24 முதல் 48 மணி நேர விதியை' உருவாக்குங்கள். மிக அவசியமில்லாத ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றினால், வாங்குவதற்கு முன் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் காத்திருங்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகும் நீங்கள் அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது மட்டும் வாங்குங்கள்," என வினோத் ஃபோக்லா சொல்கிறார்.
"வரும் நாட்களில் யுபிஐயின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகும். ஏனென்றால், ரொக்கப் பணம் எடுக்க அடிக்கடி ஏடிஎம் செல்ல வேண்டும், ரொக்கத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், சில்லறைகளைப் பெற வேண்டும் போன்ற சிக்கல்கள் உள்ளன. ஆனால் யுபிஐ-யில் அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை," என அவர் சொல்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆன்லைன் பேமென்ட்டில் முன்னணியில் இந்தியா
ஆன்லைனில் வேகமாகப் பணம் செலுத்துவதில் இந்தியா உலகிலேயே முன்னணியில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறுகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 85 சதவீத டிஜிட்டல் பேமென்ட்கள் யுபிஐ மூலம் செய்யப்படுகின்றன, அதேசமயம் உலகளவில் 50 சதவீத டிஜிட்டல் பேமென்ட்கள் யுபிஐ மூலம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் தினசரி சராசரியாக 64 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேசன் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய தரவுகளின்படி, அக்டோபர் 2025 இல் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 20.7 பில்லியனை எட்டியது. இதில் ரூ.27.28 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும்.
செப்டம்பர் 2025 உடன் ஒப்பிடும்போது இது 9.5 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
கட்டுக்கடங்காமல் செலவு செய்யும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
யுபிஐ மூலம் கட்டுக்கடங்காமல் செலவு செய்யும் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டதாக தோன்றினால், சில நடவடிக்கைகளை எடுத்துச் செலவைக் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக:
- சிறிதளவு ரொக்கப் பணத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்திருங்கள். உங்கள் பணம் மற்றவர்களின் கைகளுக்குச் செல்லும்போது, செலவைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருப்பீர்கள்.
- உடனடியாகப் பொருள்களை வாங்காதீர்கள். சிறிய விஷயங்களை வாங்க வேண்டும் என்று தோன்றினால், ஒரு நிமிடம் காத்திருங்கள்.
- விலை உயர்ந்த பொருள்களை வாங்கத் தோன்றினால், 24 முதல் 48 மணி நேரம் காத்திருங்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகும் நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது நீங்கள் வாங்கலாம்.
- உங்கள் சிறியது முதல் பெரியது வரை ஒவ்வொரு செலவையும் ஒரு டைரியில் எழுதுங்கள். அதை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்து, எந்தத் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்திருக்க முடியும் என்று பாருங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












