வெறும் ரூ.5,500 ஊதியத்தில் வனவிலங்குகளின் ஆபத்தை தாண்டி பழங்குடிகளுக்கு மருத்துவ சேவை புரியும் இவர்கள் யார்?
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் தொதவர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் மற்றும் பணியர் என்று 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பலர் அடர்ந்த காடுகளின் நடுவே வசித்து வருகின்றனர். போதுமான சாலை வசதிகள் இல்லாத சூழலிலும் அங்குள்ள மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் பொறுப்பில் ஆஷா மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள மரங்களுக்கு இடையில் காய்ந்த சருகுகளின் மீது கவிதாவும், தேன்மொழியும் ஒருவருக்கொருவர் துணையாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிருவரும் ஆஷா ஊழியர்கள் என்றழைக்கப்படும் சமூக சுகாதாரப் பணியாளர்கள்.
மலைமாவட்டமான நீலகிரியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலும், உயரமான மலையுச்சிகளிலும், ஆழமான பள்ளத்தாக்குகளிலும் அமைந்துள்ள பல்வேறு பழங்குடியின கிராமங்களுக்கு தினமும் சென்று சுகாதாரப் பணியை மேற்கொள்ளும் ஆஷா ஊழியர்கள் 403 பேர் இருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 10 வீடுகள், 20 நோயாளிகளைச் சந்திக்க வேண்டும்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை பழங்குடியின மக்கள் வாழ்ந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, அந்த கிராம மக்களில் பெரும்பாலானவர்களுக்கு, சர்க்கரை, இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும், பலருக்கு இரத்த சோகை இருப்பதும் இவர்கள் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாகச் சொல்கிறார்கள் ஆஷா ஊழியர்கள்.
வெயில், மழை, பனி, ஆற்று வெள்ளம், விலங்கு தாக்குதல் ஆகியவற்றுக்கு மத்தியில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா ஊழியர்களுக்கு, மாதாந்திர ஊக்க ஊதியம் வெறும் 5500 ரூபாய் மட்டுமே. சமவெளிகளிலும், போக்குவரத்து வசதிகளும் உள்ள பிற கிராமங்களிலும் பணியாற்றுவோருக்கும் பழங்குடியின கிராம மக்களுக்கு பல்வேறு ஆபத்துகளைக் கடந்து மருத்துவ சேவை செய்யும் இவர்களுக்கும் ஒரே மாதிரியான ஊக்க ஊதியம் என்ற பாகுபாடு கூட இவர்களுக்குத் தெரியவில்லை என்பது இவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஆஷா மருத்துவப் பணியாளர்கள் காடு, காட்டு விலங்குகள், காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றைக் கடந்து பழங்குடி மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவது எப்படி?
முழு விவரமும் இந்த வீடியோவில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



