சுதந்திர போராட்டத்தின் போது நேரு 3,259 நாட்களை (சுமார் 9 ஆண்டு) சிறையில் கழித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி இந்தி
கைத்தறி, ராட்டை, காந்தி தொப்பி மற்றும் பிரிட்டிஷ் அரசுடனான நேரடி மோதல் ஆகியவற்றின் ஆண்டாக 1921-ஆம் ஆண்டு இருந்தது.
நேருவால் அமைக்கப்பட்ட தன்னார்வல குழுக்கள் நவம்பர் மாதம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்தது.
1921-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி, தன்னார்வலர் படை (Volunteer Force) சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 6-ம் தேதி நேருவும் அவருடைய தந்தை மோதிலாலும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலான 'நேரு தி மேக்கிங் ஆஃப் இந்தியா' எனும் புத்தகத்தில் எம்ஜே அக்பர் எழுதுகையில், "ஆனந்த பவன் இல்லத்தில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தித்தாள்களை மோதிலால் நேரு படித்துக்கொண்டிருந்த போது, அவரிடம் வேலையாள் ஒருவர் வந்து ஆனந்த் பவனின் நுழைவுவாயில் வரை காவல் துறையினர் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். பின்னால் வந்த காவல்துறை அதிகாரி மோதிலாலிடம் பணிவாக வணக்கம் தெரிவித்து, இல்லத்தை சோதனையிடுவதற்கான வாரண்டை அவரிடம் காண்பித்தார்." என எழுதியுள்ளார்.
"தன்னுடைய இல்லத்தில் சோதனையிட அனுமதிக்க தான் தயாராக இருப்பதாகவும் ஆனால், சோதனையை நடத்திமுடிக்க குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என மோதிலால் பதிலளித்தார். மோதிலால் நேருவின் பகடியான கிண்டலான பதிலுக்கு என்ன சொல்வதென காவல்துறை அதிகாரிக்கு தெரியவில்லை. ஆனால், எப்படியோ சமாளித்துக்கொண்டு அவரையும் அவருடைய மகனையும் (நேரு) கைது செய்வதற்கு தங்களிடம் வாரண்ட் இருப்பதாக தெரிவித்தார்."
மூன்று மாதங்களில் அடுத்த கைது

பட மூலாதாரம், Getty Images
அதே நாள் இரவில் ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு லக்னௌ அழைத்துச் செல்லப்பட்டார்.
அதுதான் முதன்முறையாக நேரு கைது செய்யப்பட்ட சம்பவம். அதிலிருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் 3,259 நாட்களை நேரு சிறையில் கழித்தார்.
விசாரணை முடிந்தபிறகு, அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவில் நேரு மூன்று மாதங்களுக்குள்ளாகவே விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்ட உடனேயே, பேரணிகளை ஒருங்கிணைக்கத் தொடங்கினார், அரசுக்கு எதிரான சூழலை உருவாக்கினார்.
அதன் விளைவாக, மூன்று மாதங்களுக்குள் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
ஒத்துழையாமை அணுகுமுறையுடன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, எந்தவிதமான தற்காப்பு வாதத்தையும் செய்யாமல் இருந்தார்.
அந்த சமயத்தில் அவர், "எங்களுக்கு சிறை என்பது சொர்க்கம் போன்று உள்ளது. எங்களின் அன்புக்குரிய, புனிதமான தலைவர் (மகாத்மா காந்தி) சிறையில் அடைக்கப்பட்டதால், எங்களுக்கு சிறை ஒரு புனித இடமாக உள்ளது. நாட்டுக்காக சேவை செய்வதே மிகச்சிறந்த செயல் தான், ஆனால் மகாத்மா காந்தியின் தலைமையில் நாட்டுக்காக சேவையாற்றுவது அதைவிட சிறந்த செயலாகும்." என்றார்.
நூல் நூற்றல் மற்றும் புத்தகங்கள் வாசித்தல்

பட மூலாதாரம், Getty Images
இந்த முறை தனக்கு அதிக காலம் சிறைத் தண்டனை கிடைக்கும் என ஜவஹர்லால் நேரு நம்பியிருந்தார்.
கடந்த முறை முன்கூட்டியே தான் விடுதலை செய்யப்பட்டதை அவர் விரும்பாமல் இருந்திருக்கலாம், குறிப்பாக தன் தந்தை இன்னும் சிறையில் இருக்கும்போது தான் விடுதலை செய்யப்பட்டதை விரும்பவில்லை.
ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய சர்வப்பள்ளி கோபால் எழுதுகையில், "சிறைக்கு வெளியே தான் இருக்கும்போது தனிமையாக உணர்வதாக நேரு ஒருமுறை கூறினார். கூடுமானவரை விரைவிலேயே சிறைக்கு திரும்ப வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. இந்த முறை அவர் விரக்தியடையவில்லை. ஏனெனில், இம்முறை அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது." என குறிப்பிட்டுள்ளார்.
"லக்னௌ மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரை சிறையில் சென்று சந்தித்தவர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். எனவே, அவர் தன்னை வெளியிலிருந்து வந்து சந்திப்பவர்களை பார்ப்பதையே நிறுத்திவிட்டார். சிறையில் இருப்பது அவருடைய சுய மரியாதையை அதிகப்படுத்தியது. நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சியில் தன் நேரத்தை செலவிட்டார். நூல் நூற்றல் மற்றும் வாசிப்பில் தன் பெரும்பான்மை நேரத்தை செலவிட்டார். வரலாறு, பயண இலக்கியம் மற்றும் காதல் கவிதைகள் அவருடைய விருப்பமான புத்தகங்களாக இருந்தன."
கைவிலங்கிட்டு மூன்றாம் வகுப்பு பெட்டியில் அழைத்து வரப்பட்ட போது...

பட மூலாதாரம், Getty Images
1923-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி உத்தரப் பிரதேச அரசு அனைத்து அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கியதையடுத்து, இம்முறையும் நேரு முன்கூட்டியே விடுதலையானார்.
விரைவிலேயே மூன்றாவது முறையாக ஜவஹர்லால் சிறையில் அடைக்கப்பட்டார்.
பஞ்சாபின் தென்மேற்கே உள்ள நாபாவில் சீக்கிய குழுவுடன் செப்டம்பர் 21-ஆம் தேதி நேரு பஞ்சாபை அடைந்தார். அன்றைய தினம் மாலையிலேயே ரயில் மூலமாக டெல்லி செல்லவிருந்தார். நாபாவுக்குள் நுழையக் கூடாது என, அவருக்கு உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டது. அப்பகுதியின் அமைதியை அவர் குலைத்துவிடுவார் என நிர்வாகம் தெரிவித்தது.
உத்தரவு கிடைப்பதற்கு முன்பாகவே தான் நாபா எல்லையில் நுழைந்துவிட்டதாகவும் தற்போது காற்றில் மறைய முடியாது என்றும் நேரு பதிலளித்தார். அவருக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் நாபாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

தன்னுடைய சுயசரிதையில் இதுகுறித்து எழுதிய ஜவஹர்லால் நேரு, "என்னுடன் இருந்தவர்களுடன் என்னை கைது செய்து, கைவிலங்கிட்டு இரவு ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் அமர்த்தி அழைத்து வந்தனர்," என எழுதியுள்ளார்.
"24 மணிநேரத்துக்குப் பிறகு கைவிலங்கு அகற்றப்பட்டது. நாபா சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டோம். சிறை மிகவும் மோசமான சூழலில் இருந்தது. எங்களுக்கு படிப்பதற்கு புத்தகங்களோ அல்லது செய்தித்தாள்களோ கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு குளிப்பதற்கோ, ஆடைகளை மாற்றுவதற்கோ நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. நாபாவை விட்டு வெளியேறி, மீண்டும் அங்கு வரக்கூடாது என எங்களிடம் கூறினர். அன்றைய இரவே நாங்கள் நாபாவில் இருந்து வெளியேறினோம்."
அங்கிருந்து அலகாபாத் திரும்பியபோது, நேரு ஒரு நாயகனை போல வரவேற்கப்பட்டார்.
சிறையில் நூல் நூற்றல்

பட மூலாதாரம், Getty Images
1930ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் போது நேரு மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆபத்தான குற்றவாளிகளுடன் தனிமைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கிருந்த சிறையின் உயரம் 15 அடி. இதனால் பகல் பொழுதில் வானத்தையோ இரவு நேரத்தில் நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை.
சர்வப்பள்ளி கோபால் எழுதுகையில், "சிறையில் ஏற்பட்ட சலிப்பிலிருந்து தப்பிக்க, நேரு தனக்கென தினசரி பணிகளை கடுமையாக பின்பற்றினார். சிறைச்சாலை சுவர் நெடுக ஓட்டப்பயிற்சி மேற்கொள்வார், பின்னர் சிறிது தூரத்துக்கு வேகமாக நடப்பார்." என எழுதியுள்ளார்.
"மீதமுள்ள நேரத்தில் ராட்டையில் நூல் நூற்பார், புத்தகங்கள் வாசிப்பார். ஆரம்பத்தில் அவர் ராட்டை வைத்திருக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை, தன்னை எப்போதும் பிசியாக வைத்துக்கொள்ள அவர் நூல் நூற்பார், அதை பின்னாளிலும் தொடர்ந்தார்."
"ஒழுக்கமான காங்கிரஸ்காரராக, அவருடைய ஆர்வம் ராட்டை சுற்றுவதில் தான் இருந்தது. ஆறு மாத சிறை வாழ்க்கையில், அவர் ராட்டையில் 30,000 கெஜம் நூலை நூற்றார், நூற்புக்கதிர் (takli ) மூலம் 750 கெஜம் நூல் நூற்றார்."
மீண்டும் கைது

பட மூலாதாரம், Getty Images
அலகாபாத் அருகே உள்ள இரதாட்கஞ்ச் நிலையத்தில் 1931-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அச்சமயம், பம்பாய் (மும்பை) சென்று மகாத்மா காந்தியை சந்திக்க சென்றார். அலகாபாத் நகரை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மதிக்காததால் அவர் கைது செய்யப்பட்டார்.
நேரு தன்னுடைய சுயசரிதையில், "என்னுடைய ரயில் பெட்டியிலிருந்து ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது, ரயில்வே தடம் அருகே காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டேன். நானும் என்னுடன் பயணித்த தசாடுக் அகமது கான் ஷெர்வானியும் கைது செய்யப்பட்டோம். எங்களை நைனியில் உள்ள சிறைக்கு அழைத்துச் சென்றனர்." என குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச அவசரநிலை அதிகாரங்கள் அவசர சட்டத்தின் கீழ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஷெர்வானிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, நேருவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுகளிலும் மத ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என உத்தரவைக் கேட்டு ஷெர்வானி கேள்வியெழுப்பினார்.
மூத்த பத்திரிகையாளர் ஃபிராங்க் மோர்ஸ், ஜவஹர்லால் வாழ்க்கை வரலாற்று நூலில், "நேருவின் உணவுப் பழக்கம் சிறையில் மாறியது. அனைத்து காஷ்மீரி பிராமணர்கள் போலவே நேருவும் சிறுவயதிலிருந்தே அசைவ உணவுகளை சாப்பிடுவார். ஆனால், சிறையில் அவர் முழுவதும் சைவ உணவாளராக மாறினார். ஏற்கெனவே அவர் காந்திஜியின் அறிவுரையின் பேரில் புகைப் பிடிப்பதை நிறுத்திவிட்டார்." என குறிப்பிட்டுள்ளார்.
தாய் மற்றும் மனைவிக்கு ஏற்பட்ட அவமானத்தால் கோபமடைந்த நேரு

பட மூலாதாரம், Getty Images
முதன்முறையாக, சிறை வாழ்க்கையின் விளைவுகள் நேருவின் ஆரோக்கியத்தை பாதிக்க ஆரம்பித்தது.
அவருக்கு பற்களில் வலி எடுக்க ஆரம்பித்தது. முதலில் அவர் நைனி சிறையிலும் சில வாரங்கள் கழித்து பரேலி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
நாபா சிறைக்குப் பிறகு முதன்முறையாக பரேலியில் அவருடைய அறை இரவு நேரத்தில் அடைக்கப்பட்டது. குடும்பத்தினருடனான சந்திப்புகளும் கடினமானது. ஏனெனில், அந்த சந்திப்புகளின் போது சிறை அதிகாரியும் காவல்துறை அதிகாரியும் உடனிருந்தனர், அவர்கள் அப்போது பேசுவதை பதிவு செய்தனர்.
சர்வப்பள்ளி கோபால் எழுதுகையில், "நேருவின் தாய் ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தடியடியில் தாக்கப்பட்டு, மோசமாக காயமடைந்ததிலிருந்து நிலைமை மேலும் மோசமானது. சிறையில் அவருடைய தாயும் கமலாவும் நேருவை சந்திக்க வந்தபோது, அவர்கள் இருவரையும் சிறை அதிகாரி அவமானப்படுத்தினார். நேரு ஒரு மாதத்துக்கு யாரையும் சந்திக்கக் கூடாது என தடை விதித்தார்." என எழுதியுள்ளார்.
"இதனால் மிகவும் அதிருப்தியடைந்த நேரு, ஒரு மாதத்துக்கு தான் யாரையும் சந்திக்கப் போவதில்லை என அறிவித்தார். ஏனெனில், தன் தாய் மற்றும் மனைவியை மீண்டும் அவமதிக்க சிறை அதிகாரிக்கு தான் இன்னுமொரு வாய்ப்பு வழங்க நேரு விரும்பவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு, காந்தியின் அறிவுரையின்படி மற்றவர்களை சந்திக்க ஆரம்பித்தார் நேரு."
அணில்கள் மற்றும் நாய்கள் மீதான அன்பு
சிரசாசனம் தான் சிறையில் நேருவுக்கு பிடித்தமான யோகா நிலையாகும். அவருக்கு உடல் ரீதியான ஆற்றலை மட்டுமல்லாமல், மனரீதியான உத்வேகத்தையும் சிரசாசனம் அளித்தது.
ஃபிராங்க் மோர்ஸ் எழுதுகையில், "அணில்களின் குறும்புகளை பார்ப்பதுதான் நேருவுக்கு சிறையில் முதன்மை பொழுதுபோக்காக இருந்தது. டேஹ்ராடூன் சிறையில் நேரு இரண்டு நாய்களை தத்தெடுத்தார். பின்னர், அந்த நாய்கள் குட்டிகளையும் ஈன்றது. அவற்றையும் நேரு கவனித்துக்கொண்டார். பாம்புகள், தேள்கள் மற்றும் பூரான்கள் ஆகியவையும் சிறை அறையில் வந்தும் போய்க்கொண்டும் இருந்தன." என குறிப்பிட்டுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட பிர்லாவின் உதவி

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் மாதம், கமலா நேருவின் உடல்நிலை மிகவும் மோசமான போது நேருவை சில நாட்கள் உத்தரப் பிரதேச அரசு விடுவித்தது.
11 நாட்கள் கழித்து கமலாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டபோது நேரு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1934-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறையிலிருந்தபடியே தன் சுயசரிதையை எழுத ஆரம்பித்து, 1935-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அதை முடித்தார்.
கமலாவை சிகிச்சைக்காக ஐரோப்பா அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முதன்முறையாக, நேரு பணம் குறித்து கவலைப்பட்டார். அவருக்கென எந்த வருமானமும் இல்லை. தன் புத்தகங்கள் மீதான ராயல்டி (உரிமத் தொகை) மூலமாக சிறிது பணம் வந்தது. அந்த பணம் மூலம், அவர் தன் ஆனந்த பவன் இல்லத்தின் ஒட்டுமொத்த செலவுகளையும் நிர்வகித்து வந்தார்.
சர்வப்பள்ளி கோபால் எழுதுகையில், "அந்த நாட்களில் நேருவின் பொருளாதார சிக்கல்களை அறிந்து, பிர்லா குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அவருக்கு மாதம் ஒரு தொகையை வழங்க முன்வந்தார். அச்சமயத்தில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பலருக்கும் பிர்லா குடும்பம் இத்தகைய பண உதவியை செய்துவந்தது." என குறிப்பிட்டுள்ளார்.
"இதுகுறித்து நேருவுக்கு தெரியவந்தபோது, அதை அவர் விரும்பவில்லை. தனக்கு அப்பணம் வேண்டாம் என மறுத்தார். தன்னுடைய சிறிய சேமிப்புகள் மூலம், கமலா, இந்திரா மற்றும் அவருடைய மருத்துவர் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார்."
பொதுவெளியில் அழ விரும்பாத நேரு

பட மூலாதாரம், Getty Images
அலிபோர் சிறையில் நேரு அடைக்கப்பட்டபோது, அவருடைய உறவினர் பிகே நேரு, ஹங்கேரியாவை சேர்ந்த ஃபோரி என்ற பெண்ணை மணந்தார்.
நேரு குடும்பத்தின் தலைவர் என்பதால், கொல்கத்தாவில் உள்ள அலிகஞ்ச் சிறைக்கு அவரை காண ஃபோரியை அழைத்துச் சென்றனர். அந்த சந்திப்பு முடிந்து, சிறைக் கதவு அடைக்கப்பட்ட பின், ஃபோரியால் தன் அழுகையை அடக்க முடியவில்லை.
பிகே நேரு தன் சுயசரிதையான 'நைஸ் கைஸ் ஃபினிஷ் செகண்ட்' எனும் புத்தகத்தில், "இதை ஜவஹர்லால் நேருவின் கண்களிலிருந்து மறைக்க முடியவில்லை. மறுநாள் அவர் ஃபோரிக்கு கடிதம் எழுதினார். அதில், 'நேரு குடும்பத்தின் ஓர் அங்கமாக ஆகவிருக்கிறாய், குடும்பத்தின் விதிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் முதல் விஷயமே, எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும், நேரு யார் முன்பும் எப்போதும் அழ மாட்டார் என்பதுதான்.' என எழுதினார்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
அகமதுநகர் சிறையில் நீண்ட காலம் கழித்தபோது
கடைசி முறையாக நேரு அகமதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பு எந்த சிறையிலும் இவ்வளவு காலத்தை அவர் கழித்ததில்லை.
1942, ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 1945, ஜூன் 15 வரை மொத்தமாக 1040 நாட்கள் அந்த சிறையில் கழித்தார்.
முதலில் அவர் புனேவுக்கு ரயில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். புனே ரயில் நிலையத்தில் மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்.
மிரா பென் தன் 'தி ஸ்பிரிட்'ஸ் பில்கிரிமேஜ்' எனும் புத்தகத்தில், "ஜவஹர்லால் நேருவை நோக்கி மக்கள் ஓடியபோது, போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். ஜவஹர்லால் உடனடியாக நடைமேடையில் இறங்கினார். நான்கு போலீஸார் மிகவும் சிரமப்பட்டு அவரை அடக்கி, மீண்டும் ரயிலுக்குள் அழைத்து சென்றனர். அகமதுநகரை அடைந்தபோது நடந்தவற்றுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் நேருவிடம் மன்னிப்பு கேட்டார். தான் உத்தரவுகளை மட்டுமே பின்பற்றியதாக அவர் விளக்கம் அளித்தார்," என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையில் பேட்மிண்டன் விளையாட்டு மற்றும் தோட்டக்கலை

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் செயற்குழுவைச் சேர்ந்த அனைவரும் அகமதுநகரில் அடைக்கப்பட்டனர். வெளியுலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது. செய்தித்தாள்கள், சந்திப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதோடு கடிதங்கள் எழுதக்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் எங்கு அடைக்கப்பட்டனர் என்பது கூட வெளியுலகத்துக்கு தெரியவில்லை.
சர்வப்பள்ளி கோபால் எழுதுகையில், "பின்னாளில் நேரு செய்தித்தாள்கள் படிக்கவும் தன் குடும்பத்துக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு கடிதங்கள் அனுப்பவும் அனுமதிக்கப்பட்டார். இதனால் நேருவுக்கு பலன் ஏதுமில்லை. ஏனெனில், அவருடைய மகள் மற்றும் சகோதரி ஆகியோர் உத்தரப் பிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்குள்ள அரசாங்கம், கடிதம் எழுதவோ அல்லது கடிதங்களை பெறவோ அனுமதிக்கவில்லை. பின்னர், நேரு சில புத்தகங்களை வெளியிலிருந்து வாங்க அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவை நேருவிடம் வழங்கப்படுவதற்கு முன்பாக, முழுவதும் சோதிக்கப்பட்டன." என எழுதியுள்ளார்.
"இரண்டு ஆண்டுகள் கழித்து அகமதுநகரில் உள்ள நேரு உட்பட அனைத்து அரசியல் கைதிகளும் வெளியிலிருந்து பார்க்க வருபவர்களை சந்திக்க அனுமதித்தனர். ஆனால், அந்த வசதியை நேரு மறுத்தார். இத்தனை ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், சில நிமிடங்கள் மட்டும் பார்க்க அனுமதிப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பது அவருடைய வாதமாக இருந்தது."
அகமதுநகர் சிறையில் நீண்ட காலம் இருந்ததால், காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் தினந்தோறும் சூடான விவாதங்கள் நடைபெறும்.
அதன் விளைவாக, தலைவர்கள் சிலர் தங்களுக்குள் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். இந்த பதற்றத்தை தவிர்க்க நேரு கடுமையாக பணியாற்றினார். அவர் உணவு சமைத்தார், உடல்நலமின்றி இருந்தவர்களை கவனித்துக்கொண்டார், பேட்மிண்டன் மற்றும் கைப்பந்து விளையாடினார். தோட்டத்தையும் பராமரித்தார்.
1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, நிறைவு பெறாத தன் புத்தகத்தையும் எழுதத் தொடங்கினார். 1944, செப்டம்பர் 7-ஆம் தேதி அந்த புத்தகத்தையும் எழுதி முடித்தார்.
அந்த புத்தகத்தின் பெயர் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'.
1921 டிசம்பர் மாதம் முதல் 1945 ஜூன் 15-ஆம் தேதி வரை, நேரு தன் வாழ்க்கையில் 3,259 நாட்களை அல்லது கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை பிரிட்டிஷ் சிறைகளில் கழித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












