பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தொழிலதிபர்கள்

பாஜக, நன்கொடை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது.

இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது.

இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%.

இந்திய நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற எந்தவொரு நிறுவனமும் தேர்தல் அறக்கட்டளையை அமைக்க முடியும்.

இந்திய குடிமகன் எவரும் அல்லது இந்தியாவில் பதிவுபெற்ற எந்தவொரு நிறுவனமும் இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family - ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்களைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கிறது.) அல்லது இந்தியாவில் வசிக்கும் நபர்களின் குழு ஆகியோர் இந்த தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க முடியும்.

பின்னர், இந்த தேர்தல் அறக்கட்டளைகள் அந்தப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு வழங்கும்.

இதுதவிர, தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதற்கு பதிலாக எந்தவொரு குடிமகனும் தனிப்பட்ட முறையில் நேரடியாகவும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நன்கொடை அளிக்க முடியும்.

இந்த நன்கொடை ரூ. 20 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால், அரசியல் கட்சிகள் அந்த தகவலை ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்.

மற்றொருபுறம் , காங்கிரஸ் 2024-25 நிதியாண்டில் 517 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்றதாக ஒரு செய்தி கூறுகிறது.

அதில், 313 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக கிடைத்துள்ளன. மற்றொரு செய்தி காங்கிரசுக்கு ரூ. 522 கோடி கிடைத்துள்ளதாக கூறுகிறது. எனினும், இந்த தகவலை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அதே நிதியாண்டில் ரூ. 184.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது, இதில் 153.5 கோடி ரூபாய் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கிடைத்துள்ளது.

2024-25 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அதிகமான நன்கொடையை பாஜக பெற்றிருப்பதால், அக்கட்சிக்கு அதிகமாக நன்கொடையளித்த தனிநபர்கள் யார் என்பதை அறிவது சுவாரஸ்யமானது.

கையாண்ட அணுகுமுறை என்ன?

2024-25ஆம் நிதியாண்டில் பெற்ற நன்கொடை குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இது ஆராயப்பட்டது.

20,000 ரூபாய்க்கும் அதிகமாக அக்கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளது.

ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பலமுறை ஒரு கட்சிக்கு நன்கொடை அளித்திருந்தால், அந்த நிதியாண்டில் அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையை அறிவதற்காக, அவை ஒட்டுமொத்த தொகையாக சேர்க்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் நிதிப் பங்களிப்பு அறிக்கைகள் பி.டி.எஃப். வடிவத்தில் வெளியிடப்பட்டன.

அது நகலெடுக்கக் கூடியதாக இருந்தது, ஆனால் பெயர்களிலும் நன்கொடைத் தொகைகளிலும் பல பிழைகளும் முரண்பாடுகளும் இருந்தன.

இதன் காரணமாக, தானியங்கி கருவிகள் துல்லியமான முடிவுகளைத் தராமல் போகலாம். எனவே, அனைத்துத் தரவுகளும் மூல ஆவணத்தின் பக்கங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளன.

அதிகமாக நன்கொடை அளித்த தனிநபர்கள்

2024-25 நிதியாண்டில் பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்த தனிநபர்கள்

1. சுரேஷ் அம்ருதல் கோடக்

இவர் பாஜகவுக்கு மிக அதிகமாக நன்கொடை அளித்த தனிநபராக உள்ளார்.

2024-25 நிதியாண்டில் அவர் பாஜகவுக்கு ரூ. 30 கோடி நன்கொடை அளித்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 7.5 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் இந்திய பருத்தி துறையில் நன்கு அறியப்பட்ட நபராவார்.

"இந்தியாவின் பருத்தி மனிதர்" என அவர் அறியப்படுகிறார். இந்திய பருத்தி சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு கோடக்கின் தலைமையில் இந்திய பருத்தி கழகத்தை மத்திய அரசு அறிவித்தது.

2. அல்லா தாக்‌ஷாயனி

இவர் 2024-25 நிதியாண்டில் பாஜகவுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை செய்துள்ளார்.

இவர் ராம்கி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆவார்.

ராம்கி குழுவின் பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவு (CSR)தான் ராம்கி அறக்கட்டளை. இது 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, சமூக நலன் சார்ந்து முதன்மையாக செயல்படுகிறது.

ராம்கி குழுவின் இணையதளத்தின்படி (https://ramky.com), இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 4.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

சாலைகள், சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை சார்ந்த திட்டங்களிலும் இந்நிறுவனம் பணியாற்றுகிறது.

அரசு-தனியார் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் இந்நிறுவனம் செயல்படுகிறது.

இந்தியாவின் 55 நகரங்களில் இதற்கு அலுவலகங்கள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அலுவலகங்கள் உள்ளன.

அல்லா தாக்‌ஷாயனியின் கணவர் அல்லா அயோத்யா ராமி ரெட்டி. இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, மாநிலங்களவை உறுப்பினர்களுள் இரண்டாவது பணக்கார நபர் அயோத்யா ராமி ரெட்டி.

அந்த அறிக்கையின்படி, அச்சமயத்தில் அவருக்கு 2,577 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் இருந்தன.

தேசிய அளவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசின் சில மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளது, இது இரு கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை காட்டுகிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசியல் சூழல் சற்று வித்தியாசமானது. ஒய்எஸ்ஆர் கட்சியை எதிர்க்க பாஜக தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது.

இந்த கூட்டணி ஆந்திர பிரதேச தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதாவது, இரு கட்சிகளுக்கும் இடையே டெல்லியில் வியூக ரீதியிலான கூட்டணியும் ஆந்திராவில் கடுமையான போட்டியும் நிலவுகிறது.

நரேந்திர மோதி, அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

3. தினேஷ் சந்திர அகர்வால்

தினேஷ் சந்திர அகர்வால் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் 21 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

டிஆர்ஏ இன்ஃப்ராகான் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இவர். இந்நிறுவனம் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும்.

2024-25 நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் பாஜகவுக்கு 61.78 கோடி ரூபாயை நன்கொடை அளித்துள்ளது.

பத்திரிகை தகவல் பணியகம் (PIB) கடந்தாண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தினேஷ்சந்திர ஆர் அகர்வால் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 121 கிமீ நீளமுள்ள குவாஹாட்டி ரிங் ரோடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,729 கோடி.

4. ஹர்திக் அகர்வால்

ஹர்திக் அகர்வால் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் ரூ. 20 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

தினேஷ் சந்திர அகர்வாலின் மகனான ஹர்திக் அகர்வால் டிஆர்ஏ இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

5. ரமேஷ் குன்ஹிகன்னன்

இவர் பாஜகவுக்கு 2024-25 நிதியாண்டில் 17 கோடி ரூபாயை நன்கொடை அளித்துள்ளார்.

இவர் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் மற்றும் பணக்காரர். மைசூரை தளமாக கொண்டு செயல்படும் கென்ஸ் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனராவார்.

2024-25ஆம் நிதியாண்டில் மட்டும் கென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் பாஜகவுக்கு ரூ. 11 கோடி நன்கொடை அளித்துள்ளது.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி பிஐபி வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, குஜராத் மாநிலம் சனந்த் நகரத்தில் இந்நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தி அலகை அமைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இது கென்ஸ் டெக்னாலஜியின் துணை நிறுவனமாகும்.

PIB கூற்றின்படி, இந்த அலகு, 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 60 லட்சம் சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய திறனுடன் இந்த அலகு அமைக்கப்படுகிறது.

செய்திகளின்படி, இந்த அலகின் மொத்த மதிப்பு ரூ. 3,307 கோடி.

இதில், இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின்கீழ் மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு ரூ. 1,653.5 கோடி நிநதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் குஜராத் அரசு ரூ. 661.4 கோடி முதலீடு செய்துள்ளது.

கென்ஸ் நிறுவனம் இத்திட்டத்தில் ரூ. 992.1 கோடி முதலீடு செய்துள்ளது.

நன்கொடை அளித்துள்ள பாஜக தலைவர்கள்

2024-25ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ள தனிநபர்களுள் பாஜக தலைவர்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட நபர்களும் உள்ளனர்.

உத்தராகண்டை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பியும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திரிவேந்திர சிங் ராவத் அக்கட்சிக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 113 ரூபாயை நன்கொடை அளித்துள்ளார்.

ஒடிஷாவை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி பைஜெயந்த் ஜெய் பாண்டா ரூ. 6 லட்சத்தையும் மத்திய அமைச்சர் ஜுவால் ஒராம் ரூ. 5 லட்சத்தையும் நன்கொடையாக அளித்துள்ளனர்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாஜகவுக்கு ரூ.3 லட்சத்தை பலமுறை 25,000 ரூபாயாக பிரித்து நன்கொடையாக அளித்துள்ளார்.

அசாமை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி பரிமல் ஷுக்லா பைத்யா ரூ 3 லட்சத்தையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரூ 1 லட்சத்தையும் நன்கொடையாக அளித்துள்ளனர்.

ஒடிஷாவை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி நபா சரண் மஜ்ஹி ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மக்களவை பாஜக எம்.பி தபிர் கவோ 1,59,817 ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

அசாமை சேர்ந்த 9 எம்எல்ஏக்கள் மொத்தமாக ரூ. 27.25 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். இவர்களுள் ஏழு பேர் அசாம் அரசில் அமைச்சர்களாக உள்ளனர்.

ஒடிஷாவை சேர்ந்த பாஜக எம்.பிக்களான சம்பிட் பத்ரா மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி இருவரும் தலா ரூ. 2 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இதுதவிர, ஒடிஷாவை சேர்ந்த 49 எம்எல்ஏக்கள் மொத்தமாக சுமார் 55 லட்ச ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு