திருப்பூர் மோதல் வீடியோ: வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது - மேலும் பலருக்கு வலைவீச்சு

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் - தமிழ் இளைஞர்கள் சண்டை தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகர் வேலம்பாளையம் அருகே திலகர் நகர் பகுதியில் வட மாநில - தமிழ் இளைஞர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிலை அதிகரித்து வருவது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்வினை புரிந்தனர்.
வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான கசப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் காவல்துறை உடனே முன்வந்து விளக்கம் அளித்தது.
"வட மாநிலத் தொழிலாளர்கள் - தமிழ் இளைஞர்கள் மோதல் நடந்தது ஜனவரி 14-ம் தேதி. டீக்கடையில் புகைப் பிடிக்கும் போது ஏற்பட்ட தகராறுதான் இருதரப்பு மோதலாக உருப்பெற்றுள்ளது. ஆனாலும், சிறு சலசலப்பைத் தவிர வேறெதுவும் இல்லை. யாருக்கும் காயம் இல்லை," என்று நிலைமையை தெளிவுபடுத்தியதோடு, இந்த வீடியோவை உள்நோக்கத்துடன் பரப்பக் கூடாது என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டது.
தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுக்கு, தொழில் போட்டி, வேலைவாய்ப்பு, முன்விரோதம் என எந்தத் தொடர்பும் இல்லை என்றும் திருப்பூர் காவல்துறை தெளிவுபடுத்தியது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, பிகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது ஐபிசி 147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148 (ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294 (பி) பொது இடத்தில் அவதூறாகப் பேசி பிரச்சனை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட மூலாதாரம், TIRUPUR POLICE
இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளிட்ட வேறு சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோதல் வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் யார் என்பது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது. தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் நிகழும் முன்னேற்றங்கள் உடனுக்குடன் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும்." என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












