மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் பங்கேற்கும் பெண் மீது 'வெட்கம் கெட்டவர்' என்று விமர்சனம்

    • எழுதியவர், சாஹர் பலோச்
    • பதவி, பிபிசி நியூஸ்

பாகிஸ்தானின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் செனட்டர் முஷ்டாக் அகமது இது "வெட்கக்கேடானது" என்று கூறினார். நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் உல்-ஹக் காக்கர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். பாகிஸ்தானிய ஆண்களின் ஆன்லைன் விவாதம் தீவிரமாக உள்ளது.

இப்படியொரு பரபரப்புக்குக் காரணமானவர் யார்?

24 வயது பெண்.

கராச்சி நகரைச் சேர்ந்த எரிகா ராபின் என்ற கிறிஸ்தவப் பெண். மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் முதன்முதலாக பாகிஸ்தானை அவர் தான் பிரதிநிதித்துவப்படுத்தப்போகிறார்.

மாலத்தீவில் நடைபெற்ற போட்டியில் இறுதிப் போட்டியாளர்களில் ஐந்து பேரில் இருந்து பாகிஸ்தானின் பிரபஞ்ச அழகியாக ராபின் தேர்வு செய்யப்பட்டார்.

பிரபஞ்ச பஹ்ரைன் அழகி மற்றும் பிரபஞ்ச எகிப்து அழகி ஆகிய போட்டிகளை நடத்தும் உரிமையை வைத்துள்ள துபாயை தலைமையிடமாகக் கொண்ட யுஜென் குழுமம் அதற்கான விழாக்களை ஏற்பாடு செய்துள்ளது. பிரபஞ்ச பாகிஸ்தான் அழகி போட்டிக்கு "ஏராளமான" விண்ணப்பங்கள் வந்திருப்பதாக யுஜென் குழுமம் கூறியுள்ளது.

பிரபஞ்ச அழகியைத் தேர்வு செய்யும் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் எல் சால்வடாரில் நடைபெறவுள்ளது.

"பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இதற்கு எங்கிருந்து எதிர்ப்பு வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆண்கள் நிறைந்த அறையில் நீச்சல் உடையில் நடந்து செல்வேன் என்று அவர்கள் கருதுவதாக நினைக்கிறேன்," என்று ராபின் பிபிசியிடம் கூறினார்.

இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பதை விமர்சிப்பவர்கள், அவர் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பாத ஒரு நாட்டின் பெயரில் பங்கேற்பதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாகிஸ்தானில் அழகிப் போட்டிகள் அரிதாகவே நடக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானிய வம்சாவளி பெண்களுக்கான உலக பாகிஸ்தான் அழகி போட்டி மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கிவருகிறது. இப்போட்டி முதன்முதலில் 2002 இல் டொராண்டோவில் நடத்தப்பட்டது, ஆனால் 2020 இல் லாகூருக்கு மாற்றப்பட்டது. இந்த போட்டி பிரபஞ்ச பாகிஸ்தான் அழகி, பிரபஞ்ச பாகிஸ்தான் திருமதி மற்றும் பாகிஸ்தான் முழுவதுக்குமான அழகி போன்ற போட்டிகளையும் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

இது போன்ற போட்டியின் 72 ஆண்டு கால வரலாற்றில், பிரபஞ்ச அழகி போட்டிக்கு ஒரு பிரதிநிதியைக் கூட பாகிஸ்தான் பரிந்துரைக்கவில்லை.

ஜூம் செயலி மூலம் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது தேர்வுச் சுற்றில், தனது நாட்டிற்காகச் செய்ய விரும்பும் ஒரு செயலைக் குறிப்பிடும்படி கேட்டுக் கொண்டதை ராபின் நினைவு கூர்ந்தார். "நான் என்ன பதிலளித்தேன் என்றால், பாகிஸ்தான் ஒரு பின்தங்கிய நாடு என்ற இந்த மனநிலையை மாற்ற விரும்புகிறேன்."

இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பதற்கு எதிராக சில விரோதமான விமர்சனங்கள் எழுந்தால், அவர் ஒரு கடினமான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆயினும்கூட, பிரபல மாடல்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் ராபினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் மரியானா பாபர் தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில் அவரது "அழகு மற்றும் அறிவுத்திறனைப்" என்று பாராட்டியுள்ளார்.

ராபினை மாடலிங் செய்ய முதலில் ஊக்குவித்த பாகிஸ்தான் மாடல் வனீசா அகமது, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உருதுவிடம் பேசுகையில், "இந்த ஆண்கள் மட்டும் பாகிஸ்தான் அழகன் போட்டி அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் போது ​​​​ஒரு பெண்ணின் சாதனையை மட்டும் அவர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?" என்று கேள்வி எழுப்பினார்.

ராக் அண்ட் ரோலில் தொடங்கி இஸ்லாமிய குடியரசு வரை

"நாங்கள் பல முரண்பாடுகள் மற்றும் பெண்களைக் கொண்ட நாடாக விளங்குகிறோம் என்பதுடன் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொள்கிறோம்" என்று கராச்சியை தலைமையிடமாகக் கொண்ட எழுத்தாளரும், வர்ணனையாளருமான ரஃபே மெஹ்மூத் பிபிசியிடம் கூறினார்.

"பாகிஸ்தான் ஒரு பெரிய சர்வாதிகார அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதுடன், அது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நடைமுறைப்படுத்தும் கடுமையான ஆணாதிக்க விழுமியங்களில் பிரதிபலிக்கிறது. எரிகா ராபினிடம் காவல் துறை மேற்கொண்ட விசாரணை என்பது அந்த ஆணாதிக்கத்தின் தொடர்ச்சி தான்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் ஒரு காலத்தில் மிகவும் தாராளவாத நாடாக பாகிஸ்தான் விளங்கியது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1950 களில் இருந்து 1970 களின் பிற்பகுதி வரை 'டான்' செய்தித்தாளின் நகல்களில், கராச்சி நகரத்தின் முன்னாள் எல்பின்ஸ்டோன் தெருவுக்கு அருகிலுள்ள ஒரு கிளப்பில் காபரே மற்றும் வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் விளம்பரங்கள் உள்ளன. இந்த இரவு விடுதிகளுக்கு ஆர்வலர்கள், ராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், விமானப் பணிப்பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடிக்கடி வந்தனர்.

கராச்சியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மெட்ரோபோல் ஹோட்டல் பாடல் மற்றும் ஜாஸ் நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்திய இடமாகவும் இருந்தது.

ஆனால் 1973 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பை உருவாக்கியது, அது நாட்டை இஸ்லாமிய குடியரசாக அறிவித்தது என்பதுடன் இஸ்லாத்தை அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக அறிவித்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இராணுவத் தலைவர் ஜெனரல் ஜியா உல்-ஹக், பிரதமர் ஷுல்பிகர் அலி பூட்டோவின் அரசைக் கவிழ்த்தார். அதைத் தொடர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் இஸ்லாமிய சட்டம் கடுமையாக அமலாக்கப்பட்டது என்பதுடன், பாகிஸ்தானிய சமூகம் கடுமையாக மாற்றப்பட்டது. பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் அந்த காலம் "கடுமையான கால கட்டம்" என்று அழைக்கப்படுகிறது.

1980 களின் நடுப்பகுதியில், ஜெனரல் ஜியா இஸ்லாமிய சட்டத்தின் மீதான தனது உறுதிப்பாட்டைக் காட்டுவதற்காக பொது இடங்களில் கசையடி கொடுப்பதை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

இன்று, இரவு விடுதிகள் மற்றும் மதுக்கடைகள் என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மெட்ரோபோல் ஹோட்டல் தற்போது சாலையின் கீழே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது போல் தெரிகிறது. ஆரம்பத்தில் சூதாட்ட விடுதியாக இருந்த கட்டடம் தற்போது ஒரு எலும்புக்கூடாகக் கைவிடப்பட்டுள்ளது.

ஆனால், சுதந்திரமான, அதிக சகிப்புத்தன்மை கொண்ட பாகிஸ்தானுக்கான ஏக்கம் பொதுமக்களிடையே இன்னும் நீங்கவில்லை. மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது எது, ஏற்றுக் கொள்ளமுடியாதது எது என்ற எல்லைகளைப் புறந்தள்ளுபவர்களில் ஒருவராக ராபின் இருந்துவருகிறார். செயின்ட் பேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் படித்து அரசு வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.

"உலகளாவிய ஒரு பொது மேடையில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் நான் எந்த சட்டத்தையும் மீறவில்லை. இது போன்ற முயற்சிகளை எதிர்ப்பவர்களை அடக்கும் முயற்சியில் நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்," என்று அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)