நபியை இழிவுபடுத்தியதாக இந்து ஆசிரியருக்கு ஆயுள் சிறை, குடும்பத்திற்கு கொலை மிரட்டல் - பாகிஸ்தானில் நடப்பது என்ன?

பாகிஸ்தான் இந்து ஆசிரியர்

பட மூலாதாரம், மஸ்கான் சச்தேவ்

“நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்கிறோம். ஆறு மாதங்களுக்கு மேல் எந்த வீட்டிலும் இருக்க முடியவில்லை. தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வருகின்றன. யாராவது எங்களுக்கு நீதி வழங்குங்கள்” இவ்வாறு முஸ்கன் சச்தேவ் தொலைபேசியில் கெஞ்சினார். அவருடைய தந்தை பேராசிரியர் நூதன் லால் கடவுளை அவமதித்தார் என்ற குற்றத்திற்காக நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளதால் அவர் சிறையில் இருக்கிறார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள், பேராசிரியர் நூதன் லாலின் விடுதலைக்காக சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தனர். இந்த பிரசாரத்தில் வெளிநாடுகளில் வாழும் சிந்தி சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

முஸ்கன் சச்தேவ் பிபிசியிடம் கூறுகையில், முப்பது வருடங்களாக அரசுப் பணியில் இருக்கும் தனது 60 வயது தந்தை கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

“எங்கள் குடும்பத்தினர் மீது இதுவரை வழக்கு போடப்படவில்லை. நாங்கள் மூன்று சகோதரிகள், எங்களுக்கு பத்து வயதில் ஒரு சகோதரனும் தாயும் உள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்துள்ளோம். எங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன, தொலைபேசி அழைப்புகள் வருகின்றன, எங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை. எங்கள் வீட்டு முகவரியை யாரிடமும் சொல்ல முடியாத சூழல் உள்ளது. எங்கள் தந்தையின் சம்பளமும் நிறுத்தப்பட்டுவிட்டது. எங்களுக்கு வேறு வருமானம் இல்லை” என முஸ்கன் தெரிவித்தார்.

இந்து ஆசிரியர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன?

2019ம் ஆண்டு வடக்கு சிந்துவின் கோட்கி மாவட்டத்தில் நூதன் லால் கைது செய்யப்பட்டார். கோட்கி பள்ளியில் ஆசிரியராக இருந்த நூதன் லால், ஒரு வகுப்பில் உருது கற்பிக்கும் போது அவர் பேசிய சில கருத்துகள்தான் இந்த பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என கோட்கி போலீசார் கூறுகின்றனர். வகுப்பு முடிந்ததும், அவருடைய மாணவர்களில் ஒருவர் தனது இஸ்லாமிய ஆசிரியரிடம் சென்று நூதன் லால் இஸ்லாத்தின் நபிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

ஆசிரியர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. நூதன் லாலும் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்று மன்னிப்பு கேட்டார்.

ஆனால் அந்த மாணவன் இந்த சம்பவத்தை தனது தந்தையிடம் குறிப்பிட்டு அதை ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டதால் மக்கள் மத்தியில் இது கோபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, உள்ளூர் சந்தையிலும் ஒரு வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. அப்போது ஒரு குழு நூதன் லாலின் பள்ளி கட்டிடத்தைத் தாக்கி அதை சேதப்படுத்தியது.

இது தவிர, மற்றொரு குழுவும் நூதனின் இல்லத்தை தாக்கியது. மேலும், அந்தப்பகுதியில் இருக்கும் சைன் சத்திரம் கோயிலும் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் துணை ராணுவத்தினரை வரவழைத்தது.

பாகிஸ்தான் இந்து ஆசிரியர்

பட மூலாதாரம், மஸ்கான் சச்தேவ்

இந்து ஆசிரியருக்கு எதிரான தீர்ப்பில் என்ன கூறப்படுள்ளது?

கோட்கியின் உள்ளூர் நீதிமன்றம் பேராசிரியர் நூதன் லாலுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது. சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடவுளை அவமதித்தற்காக தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ தீர்ப்பில், செப்டம்பர் 14, 2019 அன்று மனுதாரரான அப்துல் அஜீஸ் கான் கோட்கி ஒரு வழக்குத் தொடர்ந்தார். அரசுத் தரப்பு வாதத்தின்படி, அதில் தனது மகன் ஒரு பொதுப் பள்ளியில் படிக்கிறார். அவர் அவரிடம் (தனது தந்தை) பள்ளியின் ஆசிரியர் நூதன் லால் வகுப்புக்கு வந்து இறைத்தூதர் முகமது நபிக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பேசிவிட்டு சென்றார் எனக் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் வழக்கின்படி முகமது நவீத் மற்றும் வக்காஸ் அகமது ஆகிய இரு சாட்சிகள் முன்னிலையில் அவரது மகன் இவ்வாறு கூறினார்.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மும்தாஜ் சோலங்கி தனது தீர்ப்பில், அரசுத் தரப்பு சாட்சிகள் 'சுயாதீனமானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள்' என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தனிப்பட்ட விரோதம் அல்லது பகைமை எதுவும் இல்லாததால், அவர்களின் வாக்குமூலங்கள் நியாயமானவையே என்றும் எழுதினார். எனவே, அவர்களின் சாட்சியங்களை நம்பாமல் இருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை எனத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் படி, குற்றம் சாட்டப்பட்ட நூதன் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி பெற்றுள்ளதால், அவருக்கு ஆயுள் priwயும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் மேலும் 4 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அந்த முடிவின்படி, கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த சம்பவத்திற்கு நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை, ஆனால் செவிவழிக் கதைகள் மட்டுமே இருப்பதாக நூதனின் உறவினர் மகேஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார். சாட்சிகளாக மனுதாரரால் சேர்க்கப்பட்ட நபர்களும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரே என அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்து ஆசிரியர்

பட மூலாதாரம், மஸ்கான் சச்தேவ்

“எந்த வழக்கறிஞரும் அவருக்காக ஆஜராகத் தயாராக இல்லை”

நூதன் லாலின் உறவினர் மகேஷ் குமார் பிபிசியிடம் கூறுகையில், வடக்கு சிந்துவில் எந்த வழக்கறிஞரும் அவருக்காக ஆஜராகத் தயாராக இல்லை என்று கூறினார். அதன் பிறகு அவர் ஹைதராபாத்தில் உள்ள முற்போக்கு வழக்கறிஞர் யூசுப் லகாரியை தொடர்பு கொண்டார். இந்த வழக்கில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் யூசுப் லகாரி 600 கிலோமீட்டர் பயணம் செய்கிறார். இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்

இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். நீதிமன்றம் குறைந்தபட்சம் நூதனின் வழக்கறிஞரின் வாதத்தை கேட்டு நுதன் லாலை விடுவித்து நீதி வழங்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் எழும் ஆதரவுக்குரல்

நான்கு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நூதன் லாலை விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தனர். பேராசிரியர் நுதன்லால் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

X இல் ஒரு பயனரான ஜெஸ்ஸி ஷர்மா, 'பேராசிரியர் #நூதன் லால் அவதூறாக குற்றம் சாட்டப்பட்டார். மேலும் அவர் சிறைக்குச்சென்று 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பேராசிரியர் நூதன் லால் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் எந்தக் குற்றமும் இன்றி தண்டிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுவிக்கக் கோருகிறோம்” எனத் தெரிவித்தார்.

சப்னா செவானி என்ற பயனர், “பேராசிரியர்.நூதன் லால் நியாயமற்ற முறையில் சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான தண்டனையை அனுபவித்து வருவதால், அவரை விடுவிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திடமும், பாகிஸ்தான் தலைமை நீதிபதியிடமும் முறையிடுகிறோம். நாம் ஒன்றிணைந்து அவரது சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.” எனத் குறிப்பிட்டிருந்தார்.

“பேராசிரியர் நூதன் லாலை விடுவித்து, பிற மதத்தினரின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்துங்கள்” என்று சுனில் தகுரியா எழுதியிருக்கிறார்.

நரேன் தாஸ் பீல் கூறுகையில், “பேராசிரியர் நூதன் லால், அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான தண்டனையை அனுபவித்து வருவதால், அவரை பாதுகாப்பாக விடுவிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திடமும், பாகிஸ்தான் தலைமை நீதிபதியிடமும் முறையிடுகிறோம். நாம் ஒன்றிணைந்து அவரது சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.” என அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் நூதன் லாலை விடுவிக்க பாகிஸ்தான் அரசுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு நாங்கள் கடுமையாக வேண்டுகோள் விடுக்கிறோம் என்று திலீப் ரதானி என்ற பயனர் கூறினார்.

சக முஸ்லீம் ஆர்வலர்கள் மற்றும் குடிமக்களும் சமூக ஊடகங்களில் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர் மற்றும் நூதன் லாலை விடுவிக்கக் கோரினர்.

மிர் சாரங் சூம்ரோ என்ற பயனர், “பாகிஸ்தான் தனது சமூகத்தை முன்னேற்றுவதற்கு அதன் கடவுள் சம்பந்தமான சட்டங்களைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அரசு கடுமையான வழியை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அப்துல் சத்தார் பாக்கார் என்பவர் தனது பதிவில், “இந்த நாட்டில் பிழைக்க வேண்டும் என்றால் கடவுளுக்கு பயந்தவராக இருப்பது முக்கியமில்லை. மத குருமார்களுக்கு பயந்தவராக இருக்க வேண்டும்” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

சீங்கர் அலி சாண்டியோ என்ற பயனர், “அப்பாவி குடிமக்களை பலிகடா ஆக்குவதற்காக கடவுள் மறுப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்” என்று எழுதினார்.

முபாரக் அலி பாட்டி என்பவர், “பேராசிரியர் நூதன்லால் மீது கடவுளை அவமதித்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. கடந்த 3 வருடங்களாக அவர் சிறையில் உள்ளார். நூதன் லால் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)