You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி மிரட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
சேலம் மாவட்டத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின சமூக இளைஞரை திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டின் அரசு தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட ஐந்து பேருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், கோவில் கும்பாபிஷேகம் முடிந்து வேறு பூஜைகள் நடைபெற்று வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரவீன் என்பவர் கோவிலுக்குள் வழிபடச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தாங்கள் அந்தக் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்குள்ள ஆதிக்க சமூகத்தினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சேலம் மாவட்ட திமுக தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரான டி.மாணிக்கம், கடந்த 27ஆம் தேதி அந்தப் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் முன்னிலையில் எச்சரித்தார்.
இதையடுத்து, இளைஞர் பிரவீனை ஆபாசமாகத் திட்டி மாணிக்கம் மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொளி தொடர்பாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டி.மாணிக்கத்தை திமுக இடைநீக்கம் செய்தது. அதோடு, மாணிக்கம் கைதும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான காணொளியை அடிப்படையாக வைத்து இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 7 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை இயக்குநர், சேலம் மாவட்ட ஆணையர், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.
அறிக்கையை நேரிலோ அல்லது ஃபேக்ஸ், தபால், மின்னஞ்சல் மூலமாக சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தவறும்பட்சத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்