You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான்: சிறையில் இருந்த படியே தேர்தலில் சாதித்த இம்ரான் கான் - ராணுவம் என்ன செய்யப் போகிறது?
- எழுதியவர், கரோலின் டேவிஸ்
- பதவி, பிபிசி நிருபர், லாகூரில் இருந்து
பாகிஸ்தானின் தேர்தல் நிலவரம் ஒருபுறம் தெளிவாகவும் மறுபுறம் சிக்கலானதாகவும் உள்ளது.
சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களை வென்றுள்ளனர். அவர்களில் பலர் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்) கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள். ஆனால் பிடிஐயின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதால், அவர்கள் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.
இருப்பினும், தேர்தலில் வலுவான போட்டியாளராகக் கருதப்பட்ட நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சி (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) தாங்கள் தான் பெரும்பான்மை கொண்ட மிகப்பெரிய கட்சி என்று உரிமை கோரியுள்ளது.
இந்த தேர்தலின் மூலம் இம்ரான் கானின் கட்சியான பிடிஐ, தங்களுக்கு கிடைத்திருக்கும் புகழும் வெற்றியும் வெறும் சமூக ஊடக பிம்பத்தால் வந்ததல்ல, உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆதரவாளர்களைக் கொண்டுள்ளதால் கிடைத்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
பிடிஐ நிறுவனர் இம்ரான் கான் இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் (ஏற்கனவே ஊழலுக்காக மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார், சமீபத்தில் மேலும் சில வழக்குகளில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது) அவரது கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னமும் தேர்தல் வாக்குச்சீட்டில் இருந்து நீக்கப்பட்டது. கல்வியறிவு குறைவாக உள்ள ஒரு நாட்டில், இது பெரும் தேர்தல் அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது.
'தாங்களே வெற்றி' என்று கூறும் இம்ரான், நவாஸ் தரப்புகள்
266 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 72 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் (Bilawal Bhutto Zardari) பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் முழுமையாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதேவேளையில், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்கள் தனது கூட்டணியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சாதகமற்ற தேர்தல் நிலைமைகள்
2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்தத் தேர்தலில், அவரது பிடிஐ கட்சி தடை செய்யப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர்களால் பெரிய பேரணிகளை நடத்த முடியவில்லை, சிலர் சிறையில் இருந்தனர், சிலர் ரகசியமாகப் போட்டியிட்டனர்.
தங்களதுஆதரவாளர்கள் தேர்தல் பரப்புரை செய்ய முயன்றபோது, அவர்களை போலீசார் மிரட்டி அழைத்துச் சென்றதாக பிடிஐ கூறுகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் மீறி, பிடிஐயுடன் தொடர்புடைய வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டு மற்ற கட்சிகளை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
பல அரசியல் விமர்சகர்களால், நாட்டின் பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆதரவு கொண்ட கட்சியாக பார்க்கப்படும் பிஎம்எல்-என், இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) மூன்றாவது இடத்தில் உள்ளது.
விடை காண வேண்டிய கேள்விகள்
அடுத்து என்ன நடக்கும் என்பது இந்த நேரத்தில் மிகவும் சிக்கலான கேள்வி. பாகிஸ்தானில் அனைத்து சுயேச்சை தேர்தல் வெற்றியாளர்களும் ஒரு அரசியல் கட்சியில் சேர வேண்டும் அல்லது முழுமையான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை அவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். இதற்கு இம்ரான் கான் கட்சி விரைவில் தீர்வு காண வேண்டும்.
மற்ற அரசியல் கட்சிகளும் இந்த வேட்பாளர்களை கண்காணித்து, ஒவ்வொருவராக தங்கள் பக்கம் கொண்டு வந்து வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இதற்கிடையில், பிஎம்எல்-நவாஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிக்க வேண்டும். தற்போது இம்ரான் கானின் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், கட்சியை யார் வழிநடத்துவது என்பதையும் பிடிஐ முடிவு செய்ய வேண்டும்.
ராணுவம் என்ன செய்யப் போகிறது?
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் இருந்து ஒரு பெரிய அரசியல் கேள்வியும் எழுந்துள்ளது.
மூன்று முறை பிரதமராக இருந்த பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீஃபுக்கு ராணுவத்தின் ஆதரவு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முன்பு அவர் ராணுவத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில் இருந்தார். இந்நிலையில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த இராணுவத்துடனான அவரது உறவுகளைப் பற்றி இது என்ன சொல்கிறது? திரைக்குப் பின்னால் நடக்கும் மறைமுகமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட பாகிஸ்தானின் அரசியல் சிக்கலானது என்று அடிக்கடி கூறப்படுகிறது.
மொத்தத்தில், கருத்துக் கணிப்புகளின் படியே தேர்தல் முடிவுகள் இருக்கும் என பலரும் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவு இருக்கிறது என்பதே தற்போதைய உண்மை நிலை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)