You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரீம் 11 செயலியில் 1.5 கோடி ரூபாய் வென்ற காவலர் இடைநீக்கம்: நடந்தது என்ன?
- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்தி
ஆன்லைன் விளையாட்டு தளமான 'டிரீம் 11' மூலம் ரூ.1.5 கோடியை வென்ற போலீஸ் அதிகாரியை மகாராஷ்டிர அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
சோம்நாத் ஜெண்டே, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். காவல் துறையின் நடத்தை விதிகளை சோம்நாத் ஜெண்டே மீறியதாகவும், அதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சோம்நாத் ஜெண்டே மறுத்துள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் அவர் துறை ரீதியான விசாரணையை சந்திக்க வேண்டும்.
புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள சோம்நாத், அனுமதியின்றி ஆன்லைன் கேம்களை விளையாடியதற்காகவும், சீருடையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்ததற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
என்ன நடந்தது?
தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று சோம்நாத் ஜெண்டே கூறுகிறார்.
கடந்த மாதம் தான் ட்ரீம் 11-இல் விளையாட தொடங்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி ஒரு போட்டியில் வென்ற பிறகு அவர் ரூ.1.5 கோடி பரிசு தொகையை வென்றிருக்கிறார்.
திறமை சார்ந்த விளையாட்டு என்று டிரீம் 11 தன்னை பற்றி குறிப்பிடுகிறது.
உச்ச நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு, அந்நிறுவனத்தின் இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதன்படி, 'டிரீம் 11' தளம் நாட்டின் சூதாட்டம் தொடர்பான சட்டங்களின் வரம்பிற்குள் வராது.
பல பிரபலங்களும் டிரீம் 11-ஐ விளம்பரப்படுத்தியுள்ளனர்
சூதாட்டத்தில் ஈடுபடுவது இந்தியாவில் சட்டவிரோதமானது. ஆனால் ஆன்லைன் கேமிங் துறையில் தொடர்புடைய சிலர் தங்கள் தளங்களில் விளையாடும் விளையாட்டுகள் சூதாட்டத்திலிருந்து வேறுபட்டவை என்று வாதிடுகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் திறமை முக்கிய பாத்திரத்தை வகிக்கும் அதேசமயம் சூதாட்டத்தில் அதிர்ஷ்டத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் ஆமிர்கான் ஆகியோர் ஆன்லைன் கேமிங் தளமான 'ட்ரீம் 11' விளம்பரங்களில் தோன்றி அதனை விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இந்த தளம் 11 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு ரசிகர்கள் ஆன்லைனில் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டு தொடர்பான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
பயனர்கள் நிஜ வீரர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மெய்நிகர் அணிகளை உருவாக்குகிறார்கள்.
போட்டிகளில் வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனரோ அதன் அடிப்படையில் பயனர்கள் புள்ளிகளைப் பெறுகின்றனர்.
வங்கதேசம் Vs இங்கிலாந்து ஆட்டத்தில் பணத்தை வென்றார்
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடந்து கொண்டிருந்த போது, அதே போட்டியில் சோம்நாத் ஜெண்டே இந்த பரிசுத் தொகையை வென்றார்.
தகவல்களின்படி, ஆன்லைன் விளையாட்டில் வெற்றி பெற்ற பிறகு, சோம்நாத் ஜெண்டே போலீஸ் சீருடையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெண்டே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமோல்ட் தோரட் என்ற பிரமுகர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பணியின் போது ஜெண்டே விளையாட்டில் ஈடுபட்டதாகவும் பணியின்போது அவர் கவனக்குறைவாக இருந்துள்ளதாகவும் தோரட் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், போலீஸ் சீருடையில் இருக்கும் ஜெண்டேயின் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, இது மாநிலத்தின் காவல் துறையைப் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பணியின் போது தான் விளையாடவில்லை என்று ஜெண்டே பிபிசி மராத்தியிடம் தெரிவித்துள்ளார். மேலும், தான் மட்டும் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பல காவலர்களும் விளையாடுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.
"பலர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். இது ஒரு விளையாட்டு. அவர்கள் மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள். இது சூதாட்டம் அல்ல. இருந்தாலும் நான் தண்டிக்கப்பட்டிருக்கிறேன்" என்று குறிப்பிடும் அவர், இந்த விளையாட்டின் மூலம் தனது வீட்டுக் கடனை அடைக்கவும், குழந்தைகளின் பெயரில் வைப்பு தொகையை வங்கியில் செலுத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பான துறை ரீதியான விசாரணையின் போது ஜெண்டே தனது தரப்பு வாதங்களை வைக்க வாய்ப்பு கிடைக்கும்.
விசாரணைக் குழுவின் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை முடிவு செய்யும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)