இந்தியாவை எதிர்த்து, கனடாவை ஆதரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் - ஏன்?

கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியா இரண்டு வாரங்களுக்கு முன்பு கனடாவை அதன் தூதரக ஊழியர்களை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. அவர்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்கிவிடப் போவதாகவும் இந்தியா கூறியிருந்தது.

கனடா இதை "சர்வதேச சட்ட மீறல்" என்று கூறியது

ஜூன் 18 ஆம் தேதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உறவுகளில் பதற்றம் ஏற்பட்டது.

பல வாரங்களாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தில் இப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் நுழைந்துள்ளன.

இந்தியாவில் கனடாவின் தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தக் கூடாது என்று அமெரிக்காவும் பிரிட்டனும் கூறியுள்ளன.

கொந்தளித்த ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், "இந்த வாரம் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இந்தியாவில் உள்ள 41 கனேடிய தூதர்களின் ராஜாங்க சட்ட விலக்குகளை தன்னிச்சையாக ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்தது.

இது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது. கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விஷயத்தில் இந்தியா சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியதாக நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தச் செயல்களின் மூலம் இந்தியா ஒதுக்கி வைக்கிறது.

இந்திய அரச, இந்தியாவிலும், கனடாவிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்ப முடியாத அளவிற்கு இது கடினமாக்குகிறது,” எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா என்ன சொன்னது?

வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "இந்திய அரசு இந்தியாவில் கனடா நாட்டு தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவைக் கேட்டுக் கொண்டது, அந்த வேண்டுகோளின் பேரில் கனடா தூதர்களை திரும்ப அழைத்துள்ளது. கனடா தூதர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்," என்றார்.

இந்தியா மீது கனடா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரம் காட்டுவதாக அமெரிக்கா ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "பரஸ்பர கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க தூதரக உறவு பலமாக இருப்பது மிகவும் முக்கியம். கனடா தனது தூதர்கள் இந்தியாவில் இருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற பார்வை நீடிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கனடாவின் விசாரணைக்கு இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகிறது.

"இந்தியா 1961 ஆம் ஆண்டு தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கைக்கு உட்பட்டு, கனடா தூதரகப் பணிகளின் உறுப்பினர்களுக்குத் தகுதியான வசதிகள் மற்றும் தூதரக விலக்குகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கனடாவின் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என ஏற்கெனவே அமெரிக்காவும், பிரிட்டனும் கேட்டுக்கொண்டுள்ளன.

பிரிட்டன் என்ன சொன்னது?

இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சகத்தின் அறிக்கை அமெரிக்க அரசின் அறிக்கையுடன் ஓரளவு ஒத்துப்போகிறது.

பரஸ்பர கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க, இரு நாடுகளின் தலைநகரங்களில் தூதர்கள் இருப்பது அவசியம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

"பல கனடா நாட்டு தூதர்கள் இந்தியாவை விட்டு வெளியேற காரணமான இந்திய அரசின் முடிவில் நாங்கள் உடன்படவில்லை. 1961 வியன்னா தூதரக உறவுகள் உடன்படிக்கையின் கீழ் இரு தரப்பினரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். "ஒருதலைப்பட்சமாக தூதரக அலுவலர்களை நீக்கம் செய்வது, அவர்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கான தூதரக அதிகாரம் மற்றும் சலுகைகளை மறுப்பது வியன்னா மாநாட்டின் கொள்கைகள் அல்லது அதன் பயனுள்ள செயல்பாடுகளுக்கு முரணானது."

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கின் பாரபட்சமற்ற விசாரணையில் கனடாவுடன் தொடர்பில் இருக்க இந்தியாவை தொடர்ந்து ஊக்குவிப்போம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு விசா பெறுவதில் சிக்கல் ஏற்படுமா?

இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்தியாவில் உள்ள பல கனடா தூதரக அதிகாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் "21 தூதரக அதிகாரிகளைத் தவிர மற்ற அனைவருக்கும்" ராஜாங்க சட்ட விலக்கு"தன்னிச்சையாக அகற்றப்படும்" என்று இந்தியா கூறியதாக அவர் தெரிவித்தார்.

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பிபிசி கருத்து கேட்டிருக்கிறது.

மீதமுள்ள 21 தூதரக அதிகாரிகள் இன்னும் இந்தியாவில் இருப்பதாகவும், இருப்பினும் பணியாளர்கள் பற்றாக்குறையால் கனடா தனது சேவைகளை நாட்டில் குறைக்க வேண்டியிருக்கும் என்று ஜோலி கூறினார்.

பெங்களூர், மும்பை, சண்டிகரில் மக்கள் நேரில் வந்து பெறும் சேவைகளுக்கு தடையாக இருக்கும் என்று ஜோலி கூறினார். இந்தச் சேவைகள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு என்ன பாதிப்பு?

டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் எனவும், மூன்றாம் தரப்பு மூலம் மேற்கொள்ளப்படும் சேவைகளும் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணியாளர்களின் குறைப்பால் குடியேற்ற விண்ணப்பங்களுக்கான செயலாக்கத்தில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறினார்.

முக்கியமாக கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022 கணக்குப்படி கனடாவில் தற்காலிக, நிரந்தர குடியேற்றத்துக்கான விண்ணப்பதாரர்களில் இந்தியர்களே அதிகம்.

கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ளதை விட டெல்லியில் அதிகமான தூதரக அதிகாரிகள் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், இந்த எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியது.

ஆயினும், ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைப் பட்டியலிட்டுள்ள உலகளாவிய விவகார இணையதளம், இந்த எண்ணிக்கை சம அளவிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கனடா தூதரக அதிகாரிகளுக்கான ராஜாங்க சட்ட விலக்குகளை நீக்குவதாக இந்தியா கூறுவது "சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்" என்று ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பின் போது ஜோலி கூறினார்.

இருப்பினும் இதற்காக கனடா பதிலடி கொடுக்காது என்றும் அவர் கூறினார்.

"ராஜாங்க சட்ட விலக்கு விதிமுறைகளை மீற நாம் அனுமதித்தால், உலகத்தில் எங்கும் எந்தத் தூதரக அதிகாரியும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்" என்று ஜோலி கூறினார்.

கனடாவைச் சுற்றிப் பார்க்க அல்லது குடியேற விரும்பும் இந்தியர்களை கனடா இன்னும் வரவேற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)