தந்தை மரணத்திற்கு பழிக்குப்பழி: மாமியார் குடும்பத்தையே சிதைத்த மருமகள் - என்ன செய்தார் தெரியுமா?

    • எழுதியவர், நிதேஷ் ராவத்
    • பதவி, பிபிசி மராத்திக்காக

மகாராஷ்டிர மாநிலம் கட்ச்சிரோலி மாவட்டத்தில் நடந்த படுகொலையின் மர்மத்துக்கு கடைசியில் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மஹாகானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவு மற்றும் தண்ணீரில் விஷம் கலந்து கொல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மருமகள் மற்றும் அத்தை என்பதை அறியும் போது ஆச்சரியமாக உள்ளது.

ஒரு மாதத்திற்குள், அதாவது 20 நாட்களில், இந்த கொலையை மருமகள் மற்றும் மாமியார் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

கட்ச்சிரோலியில் உள்ள அஹேரி போலீசார், இந்த கொலைகள் தொடர்பாக சங்கமித்ரா கும்பரே (மருமகள்) என்ற பெண்ணையும், ரோசா ராம்தேகே (மாமியார்) என்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, ​​அவர்களை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சங்கமித்ராவும் ரோசாவும் ரோஷன் கும்பரே, சங்கர் கும்பரே, விஜயா கும்பரே, கோமல் தஹகோன்கர் மற்றும் ஆனந்த உராடே ஆகிய ஐந்து பேரைக் கொலை செய்துள்ளனர்.

ரோஷன் கும்பரே சங்கமித்ராவின் கணவர். ரோஷன் கும்பரேவின் தந்தை சங்கர் கும்பரே (வயது 52) மற்றும் தாயார் விஜயா கும்பரே. கோமல் தஹகோன்கர் மற்றும் ஆனந்த உரடே ஆகியோர் ரோஷன் கும்பரேவின் சகோதரிகள்.

அஹேரி தாலுகாவில் உள்ள மஹாகானில் 20 நாட்களில் கணவன், கணவரின் தந்தை, தாய், கணவரின் திருமணமான சகோதரிகள் என 5 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களின் இறுதியில், முழு உண்மையைக் கண்டறிவதில் போலீசார் வெற்றி பெற்றுள்ளனர். இதன் பின்னணியில் ஒரு உறைய வைக்கும் கொலைச் சதி பின்னப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளளனர்.

5 பேரை திட்டமிட்டு கொன்றது யார்?

இந்த கொலையை மருமகள் மற்றும் கணவரின் தாய்வழி அத்தை என்ற கிரிமினல் இரட்டையர்கள் எவ்வாறு நடத்தினர் என்பது குறித்து கட்ச்சிரோலி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் யதீஷ் தேஷ்முக் பேசிய போது, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

“கடந்த 20 நாட்களுக்கு முன்பு மஹாகானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தது குறித்து அஹேரி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு உடனடியாக விசாரணையைத் தொடங்கினோம்.

இந்த 20 நாட்களில் வரை வெவ்வேறு நாட்களில் குடும்பத்தினர் 5 பேரும் விஷத்தால் உயிரிழந்தது தெரியவந்தது. அவர்கள் 5 பேரும் உடல் நிலை பாதிக்கப்பட்டவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக உயிரிழந்தனர். சந்திராபூரில் உள்ள மருத்துவமனையில் இருவர் இறந்தனர், மூன்று பேர் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தனர்.”

உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் ஓட்டுநர் ராகேஷ் மாதவி, விஜயா கும்பரேவின் மூத்த மகன் சாகர் மற்றும் அவரது சகோதரியின் மகன் பண்டி ஆகியோர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தன. உதாரணமாக, வாந்தி, உடல் வலி, வயிற்று வலி மற்றும் முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டன.

எனவே, இந்த நபர்களின் உயிரிழப்புக்கான சரியான காரணம் தொடக்கத்தில் மருத்துவர்களுக்கு கூட தெரியவில்லை. இருப்பினும், நான்காவது மற்றும் ஐந்தாவது நபரின் உயிரிழப்புக்குப் பின், ஐவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது ஒரே மாதிரியான நச்சுத்தன்மையைக் குறிக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.

"சங்கர் கும்பரே குடும்பத்தினரின் மருமகளான சங்கமித்ரா கும்பரேயின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, சங்கமித்ராவின் பதில் சந்தேகத்திற்குரியதாக இருந்ததை போலீசார் கவனித்தனர். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த சங்கமித்ராவுக்கு மட்டும் எந்த உடல்நலப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதால் அவரிடம் விசாரிக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்தினர்.

விசாரணையில், சங்மித்ராவும், அவரது கணவரான ரோஷன் கும்பாரேவின் தாய்வழி அத்தை ரோசா ராம்தேகே இருவரும் வெவ்வேறு நாட்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவின் மூலம் விஷம் கொடுத்துள்ளது தெரியவந்தது. இதன் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர் என்பதுடன் மூன்று பேர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்."

தந்தை மரணத்திற்கு பழிக்குப்பழி

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சங்மித்ரா தனது கணவரின் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், பல வகைகளில் அவர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார்களை தெரிவித்தார்.

சங்கமித்ரா தனது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக ஒரு வருடத்திற்கு முன்பு ரோஷன் கும்பரேவை திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக பின்னர் சங்கமித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். சங்கமித்ரா தனது தந்தையின் மரணம் மற்றும் கணவரின் குடும்பத்தினரின் துன்புறுத்தலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலைச் செயல்களை அரங்கேற்றியுள்ளார்.

சங்கமித்ராவுடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டவர் ரோசா ராம்தேகே. ரோசா ராம்தேகே, ரோஷன் கும்பரேயின் தாய்வழி அத்தை. ரோசாவுக்கும், கும்பரே குடும்பத்துக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கும்பரேவின் குடும்பம் ஒழிக்கப்பட்டால் அந்த நிலத்தில் அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற காரணத்தின் அடிப்படையில் சங்கமித்ராவுடன் இணைந்து ரோசா ராம்தேகே இந்த கொலைகளில் பங்கேற்றுள்ளார்.

சங்கமித்ரா மற்றும் ரோசா ஆகிய இருவரும் கொலை செய்ய சதி செய்துள்ளனர். அதற்கான வழிகளை இணையத்தில் தேடிய சங்கமித்ரா, மகாராஷ்டிராவுக்கு வெளியில் இருந்து, சுவை, மணம் மற்றும் நிறற்ற விஷத்தை வாங்கிவந்து வந்து குடும்ப உறுப்பினர்களுக்கு வெவ்வேறு நாட்களில் கொடுத்துள்ளார். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தற்போது சங்கமித்ராவும், ரோசாவும் சிறையில் இருக்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)