வீராங்கனைக்கு முத்தம்: ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத் தலைவருக்கு சிக்கல்
ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பதவி விலக முடியாது என்று லூயிஸ் ருபியாலெஸ் கூறியுள்ளார். நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகள் விளையாடின.
இதில், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக மகளிர் உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்றது. ஆட்டம் முடிந்த பின்னர் ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
அப்போது ஜெனிபர் ஹெர்மோசாவை லூயிஸ் ருபியாலெஸ் கட்டிபிடித்து உதட்டில் முத்தமிட்டார். லூயிஸின் செயல் தனக்கு பிடிக்கவில்லை என்று ஜெனிபர் ஹெர்மோசா தனது சமூக ஊடக பக்கத்தில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து தனது செயலுக்கு லூயிஸ் வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர், லூயிஸ் ருபியாலெஸ் வருத்தம் கேட்டது மட்டுமே போதுமானது அல்ல என்று கூறியிருந்தார்.
கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியில் இருந்து லூயிஸ் விலக வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். எனினும், பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என லூயிஸ் ருபியாலெஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
லூயிஸ் தலைவர் பதவியில் தொடரும் வரை ஸ்பெயின் நாட்டுக்காக விளையாட மாட்டோம் என்று உலகக்கோப்பையை வென்ற மகளிர் அணி தெரிவித்துள்ளது.
ஜெனிபர் ஹெர்மோசா ஒப்புதலுடன்தான் முத்தம் கொடுத்ததாக லூயிஸ் ருபியாலெஸ் கூறியுள்ளார். இதை மறுத்த ஜெனிபர் ஹெர்மோசா தான் எவ்வித ஒப்புதலும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக லூயிஸ் ருபியாலெஸ் பொய் கூறவில்லை என்றும் ஜெனிபர் ஹெர்மோசா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



