ஒடிஷா ரயில் விபத்து: பிணவறை முன்பு பதைபதைப்புடன் காத்திருக்கும் உறவினர்கள் - கள நிலவரம்

- எழுதியவர், அமிதாப் பட்டாசாலி
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஒடிஷாவின் பாலசோரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சனிக்கிழமையன்று நான் சென்றபோது, பிணவறை எங்கு உள்ளது என்று தேடினேன். அங்கிருந்தவர்களிடம் பிணவறை எங்கு உள்ளது என்று கேட்டேன்.
பிணவறையை நோக்கிச் சென்றபோது, தங்கள் பெயரைச் சொல்லி அழைப்பார்களா என்று கவலையோடு காத்திருந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்களின் முகத்தைப் பார்த்தேன். இவர்களில் ஒரு சிலர் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண வந்தவர்கள். சிலர் உயிரிழந்தவர்களின் உடலை பெற்றுச் செல்வதற்காக வந்திருந்தவர்கள்.
தாங்கள் கேட்க விரும்பாத, அதே நேரம் நிச்சயம் தவிர்க்க முடியாத அழைப்பைக் கேட்பதற்காக அவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
சந்தோஷ் குமார் சாஹுவுக்கு வெள்ளிக்கிழமையன்று எதிர்பாராத அழைப்பு ஒன்று அவரது உறவினர் வீட்டில் இருந்து வந்தது.
ஒடிஷா மாநிலம் பாலசோரில் சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளான ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸில் அவரது உறவினர்களும் பயணித்துள்ளனர்.
நாட்டின் மோசமான ரயில் விபத்துக்களில் ஒன்றாக இந்த விபத்து பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது.
தற்போது, இந்த எண்ணிக்கை தவறானது என்றும் 275 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது.
சாஹு நம்மிடம் பேசும்போது, “என் மனைவியின் சகோதரர் பாலசோரில் வேலை செய்கிறார். வார விடுமுறையில் ஜெய்பூரில் உள்ள தனது மனைவி, 2 மகன்கள் ஆகியோரைப் பார்க்க அவர் வந்து செல்வார். பல ஆண்டுகளாக இவ்வாறு அவர் வந்து செல்கிறார்,” என்றார்.
பாலசோரில் உள்ள மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை இரவே செல்வதற்காக அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அதற்கான போக்குவரத்து வசதிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், சனிக்கிழமை காலையில் கார் மூலம் பாலசோர் வந்தடைந்தார். தனது உறவினரின் உடலை பெற்றுச் செல்வதற்காக மருத்துவமனையில் உள்ள பிணவறை முன்பாக அவர் காத்திருக்கிறார்.
மருத்துவமனையின் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் ஆசிஷுக்கு மருத்துவமனையை வந்தடைவது சிரமமாக இருக்கவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கே அவர் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

சாஹுவை போலவே ஆசிஷுக்கும் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருந்தது. ஆனால், அவர் அழைக்கப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது. ஆசிஷ் மருத்துவ மாணவராக உள்ளார்.
ஆசிஷ் உட்பட 100க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாலையில் அழைக்கப்பட்டனர். எமர்ஜென்ஸி வார்டின் முன்னால் ஆசிஷிடம் நாம் பேசினோம்.
“24 மணி நேரத்தில் இந்த இடம் எப்படி மாறிவிட்டது என்பதை நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. காயம் அடைந்தவர்கள் பலர் வார்டில் கிடத்தப்பட்டிருப்பதால் எங்களால் அதன் உள்ளேகூட செல்ல முடியவில்லை.
காயமடைந்த ஒருவருக்கு நான் சிகிச்சை அளிக்கும்போது, உடனடியாக மற்றொரு நோயாளியிடமிருந்து அழைப்பு வரும். அனைத்து மாணவர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த மருத்துவர்களுக்கு உதவ நியமிக்கப்பட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.
முதுகலை பட்டம் படித்து வரும் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என யார் யார் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சிலரை சமூக ஊடகம் வழியாகத் தொடர்புகொண்டு அழைத்தனர்.
மாவட்ட மருத்துவமனை என்பதால் பாலசோர் மருத்துவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, இவ்வளவு நபர்களுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லை.
அடிப்படை வசதிகள் இல்லை என்பது கண்கூடாகவே தெரிந்தது. ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் தரைகளில் கிடத்தப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் சுயநினைவோடும் சிலர் சுயநினைவற்றும் இருந்தனர். சுய நினைவோடு இருந்தவர்கள் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்தேன்
மருத்துவமனையின் உள்ளே இருக்கும் வார்டை அடைந்ததும், ரித்விக் பத்ராவை சந்தித்தோம். ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு அவர் சென்றுகொண்டிருந்தார்.
படுக்கையில் படுத்திருந்த ரித்விக் நெற்றியில் ரத்தம் தோய்ந்த கட்டு, காலில் பிளாஸ்டர் போன்றவை போடப்பட்டிருந்தது. அவர் படுக்கையில் இருந்தாலும் காயமடைந்த மற்றவர்கள் தரையில் கிடத்தப்பட்டிருந்தனர்.
நம்மிடம் பேசிய பத்ரா, "ரயில்கள் பெரிய அளவில் மோதிக்கொண்டது என் நினைவில் இருக்கிறது. நான் சுய நினைவோடுதான் இருந்தேன். ஆனால், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்தேன். என்னைப் போலவே பலரும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்தனர்,” என்றார்.
ரித்விக் பத்ரா தென்னிந்தியாவிற்கு பயணம் செய்துகொண்டிருந்தார், மறுபுறம் பங்கஜ் பாஸ்வான் தென்னிந்தியாவில் இருந்து பீகாரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸில் பங்கஜ் பயணம் செய்தார். அவர் பேசும்போது, “என்ன நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை. இடிபாடுகளில் இருந்து நானே போராடி வெளியே வந்தேன். பின்னர் எங்கள் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதாகக் கேள்விப்பட்டேன்,” என்றார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் சிலவும் இருந்துள்ளன. அத்தகைய பெட்டிகளில் ஒன்றில் பங்கஜ் பயணம் செய்துள்ளார்.

உதவிக்கரம் நீட்டிய பொதுமக்கள்
பொதுவாக இவ்வாறு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் ரயில்வே ஆவணங்களில் இடம் பெறாது. உயிரிழந்தவர்களில் 160க்கும் மேற்பட்டோர் யார் என்றே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம்.
விபத்தின்போது நடந்த நிகழ்வுகள் எத்தகையதாக இருந்தாலும், பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் இவ்வளவு நோயாளிகளைக் கையாளும் உள்கட்டமைப்பு இல்லை என்று அனைவரும் உறுதியாக நம்பினர்.
எனவே காயமடைந்தவர்களை பெரிய மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
தன்னார்வலரான சமீர் ஜதானியா, ரயில் விபத்து நிகழ்ந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்.
நம்மிடம் அவர் பேசுகையில், “பலத்த காயமடைந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தது சிறந்த நடவடிக்கை. இந்த மருத்துவமனையில் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் கிடையாது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “விபத்து குறித்து கேள்விபட்டதுமே, உதவுவதற்காக சாமானிய மக்கள் முன்வரத் தொடங்கினர். தொடக்கத்தில் எங்கும் குழப்பம் நிலவியது. ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை ஒன்றன் பின் ஒன்றாக அழைத்துச் சென்றன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
சில மணிநேரங்களில், தன்னார்வலர்கள் உதவிக்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கத் தொடங்கினர்.
நாங்கள் மருந்துகளை விநியோகிக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தோம். சுமார் 300 பேர் ரத்த தானம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர்,” என்றார்.
சனிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கே நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி துவங்கியது.
காயமடைந்தவர்களை கட்டாக், புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு அனுப்ப திட்டமிட்டது நல்ல முடிவு என்று மருத்துவ மாணவர் ஆசிஷ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர் சமீர் ஜதானியா ஆகியோர் கூறினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












