விருதுநகர் அருகே 30 நாய்களை கொன்றதாக ஊராட்சித் தலைவி, கணவர் உள்பட 4 பேர் கைது

30 தெரு நாய்களை கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஊராட்சி மன்றத் தலைவி, அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் விலங்குகள் நல ஆர்வலர் கொடுத்த புகாரின்பேரில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் உள்பட நான்கு பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். பிறகு அவர்கள் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்களை சிலர் சுருக்கு கம்பி வைத்து பிடித்து அதனை தலையில் அடித்து கொடூரமாக கொன்று புதைத்து வருவதாகவும், அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ப்ளூ கிராஸ் அமைப்பை சேர்ந்த சுனிதா என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சுனிதா சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சங்கரலிங்கபுரத்தில், 30க்கும் மேற்பட்ட நாய்களைக் கொன்று, ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.

புதைக்கப்பட்ட நாய்களின் உடல்கள், பின்னர் காவல்துறை உதவியுடன் தோண்டி எடுக்கப்பட்டன.

அரசு கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு மேற்கொண்டபிறகு, அவை மீண்டும் புதைக்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் உட்பட 4 பேர் மீது விலங்குகளை துன்புறுத்தி கொலை செய்தல், மிருகவதை சட்டம் என இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து புகார் அளித்த ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "சங்கரலிங்கபுரம் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை அந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சில இளைஞர்களுடன் சேர்ந்து கம்பியால் நாயின் கழுத்தில் இறுக்கி தலையில் கம்பால் அடித்து கொலை செய்வதாக பொது மக்கள் சிலர் வீடியோ ஆதாரத்துடன் என்னிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் அனுப்பிய வீடியோவில் இளைஞர்கள் சிலர் சுருக்கு கம்பியால் நாய் கழுத்தை இருக்கி பிடித்து கம்பால் நாய் தலையில் அடித்துக் கொன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதை உறுதி செய்ய நான் சங்கரலிங்கபுரம் ஊராட்சிமன்ற தலைவியின் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'நான் வசிக்கும் பகுதியில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளது, நீங்கள் சங்கரலிங்கபுரம் பகுதியில் நாய்களை கொன்றதை போல் இங்கேயும் நாய்களை கொன்று விடுங்கள்' என கேட்டேன். அதற்கு அவர் இதுவரை சங்கரலிங்கபுரம் பகுதியில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உடலில் காயங்களுடன் மக்களுக்கு தொந்தரவாக சுற்றி திரிந்த 30க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடித்து கொன்று புதைத்திருப்பதாக பதில் அளித்தார்.

அவர் என்னிடம் பேசிய தொலைபேசி உரையாடலை பதிவு செய்து அந்த ஆடியோ மற்றும் வீடியோ அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலையத்தில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவி, அவரது கணவர் உள்பட 4 பேர் மீது புகார் மனு அளித்தேன்.

அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட கால்நடை துறையில் தகவல் அளித்தேன். அதன் அடிப்படையில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் நாய்கள் அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தோண்டி நாய்களின் உடல்களை எடுத்து கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்."

பிரேத பரிசோதனை முடிவில் இறந்த நாய்கள் அனைத்தும் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளதாக ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா தெரிவித்தார். 

"சங்கரலிங்கபுரத்தில், தெரு நாய்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக கூறி ஊராட்சித் தலைவியும், அவரது கணவரும் அவர்களாகவே தெரு நாய்களைப் பிடித்து, அடித்துக்கொன்று புதைத்துள்ளனர். தெருநாய்களை தொந்தரவு செய்வது குற்றமாகும். எனவே, இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார், பெயர் வெளியிடவிரும்பாத மாவட்ட உயரதிகாரி ஒருவர்.

விருதுநகர் மாவட்டத்தில் தெரு நாய் பிரச்னைகள் இருப்பதாக இந்நிகழ்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே நாய்கள் எண்ணிக்கை பெருகுவதை கட்டுப்படுத்த, கால்நடை மருத்துவர்கள் உதவியோடு, தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், நாய்கள் எண்ணிக்கை குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: