You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா மாநிலத்தில் தெரு நாய்களை கொலை செய்யும் நபர்
தென் இந்திய மாநிலமான கேரளாவில் நாய்கள் கடித்ததாக சுமார் 700க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சிலர் தெரு நாய்களைக் கொலை செய்யும் ஒரு நடவடிக்கையை ஊக்குவித்து வருகிறார்கள். இது விலங்கு உரிமைகள் ஆர்வலர்களை கோபப்படுத்தி உள்ளது. அஷ்ரஃப் படானா அப்படியான நாய்களை கொலை செய்யும் ஒருவரை சந்தித்துள்ளார்.
கேரளாவில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பதாக அமைச்சர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, நாய்க்கடி தொடர்பான புகார்கள் அடிக்கடி பதிவாகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம், வயதான பெண்மணி ஒருவர் நாய்களால் தாக்கப்பட்டு பலியானார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சீற்றத்தை உண்டாக்கியது.
இந்தியாவில் நாய்களை கொலை செய்வது என்பது சர்ச்சையையும், உணர்ச்சிகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு விஷயம்
நாய்களை அகற்றும் குழு ஒன்றை நடத்திவரும் ஜோஸ் மாவேலி, நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், அவருடைய வழிமுறைகள் மிகவும் சர்ச்சைக்குரியவை.
நான் எங்கு சென்றாலும், தெரு நாய்களிடம் என்னை காப்பாற்றி கொள்ள என்னுடன் 'ஏர்கன்' எனப்படும் காற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கியை எடுத்து செல்வது வழக்கம் என்கிறார் ஜோஸ்.
''சமீபத்தில் நிகழ்ந்துள்ள நிறைய நாய் தாக்குதல் சம்பவங்களால் என்னை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கியை எடுத்து செல்கிறேன். இது நாய்களுக்கு பயத்தை வரவழைக்கும்'' என்கிறார் அவர்.
விலங்குகளை கொடுமைப்படுத்தியதாக அவர் மீது ஏழு வழக்குகள் உள்ளன. தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். தெரு நாய்களை கொல்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் பணமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார் ஜோஸ்.
''இதுவரை சுமார் 50 பேருக்கு இதுபோன்று பணம் வழங்கி இருக்கிறேன்.''
இதுமட்டுமின்றி, ஒரு விலங்குகள் உரிமை பெண் ஆர்வலரை மிரட்டியதற்காகவும், நாய்களைக் கொலை செய்ய பொதுமக்களைத் தூண்டியதற்காகவும் மற்றும் நாய்களின் இறந்த உடல்களை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்தை நோக்கி நடந்த பேரணிக்கு தலைமை தாங்கியதற்காகவும் மாவேலி மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அவருடைய பிரசாரமானது, குறிப்பாக எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் நாய்களை கொலை செய்ய பலரையும் சட்டத்தை மீற தூண்டியுள்ளது.
கடந்த மாதம், கேரள காங்கிரஸில் உள்ள இளைஞர் அணி, டஜன்கணக்கான தெரு நாய்களை கொன்று, அவைகளின் இனப்பெருக்கத்தை அரசு அதிகாரிகள் கட்டுப்படுத்தத் தவறியதை சுட்டிக்காட்டும் விதமாக, அவைகளின் உடல்களை கோட்டயம் நகராட்சி அலுவலகங்களில் தொங்கவிட்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில், கல்லாடி கிராமத்தை சேர்ந்த அனைத்து 17 உறுப்பினர்களும் சேர்ந்து 30 நாய்களை கொன்றனர்.
கோரமான புகைப்படங்கள்
சமீப தினங்களில், நாளிதழ்களிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் தினந்தோறும் பொதுமக்கள் நாய்களைக் கொல்லும் கோரமான படங்களை பார்க்க முடிகிறது.
''பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என்று தொடர்ந்து நாய்கள் தாக்கும் வரை பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் தான் எடுப்பார்கள்'' என்று ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை நடத்தி வருபவருமான மாவேலி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், விலங்கு உரிமைகள் ஆர்வலர்கள் மாவேலியின் பிரசாரத்தை எதிர்க்கின்றனர்.
தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அரசாங்கம் ஏ.பி.சி எனப்படும் விலங்குகளுக்கான கருத்தடை திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று விலங்கு உரிமைகள் ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளனர்.
இந்த முயற்சியை தனது அரசாங்கம் செய்து வருவதாகவும், ஆனால் நாய்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்வதால் இந்த பணி மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் கேரளா மாநிலத்தின் அமைச்சர் கே.டி ஜலீல் தெரிவித்துள்ளார்.
நாய்களை பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலே இருப்பது இந்த முயற்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
''1,500 பேர் தேவைப்படும் இடத்தில் தற்போது வெறும் 56 நாய் பிடிக்கும் பணியாளர்கள்தான் உள்ளனர். இன்னும் பலரை அரசு பணியமர்த்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது'' என்கிறார் ஜலீல்.
'கொலை செய்வது தீர்வல்ல'
கடந்த மாதம் கேரளா மாநில சட்டமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்ட போது, தெரு நாய்களை பொதுமக்களே கொல்ல அனுமதிக்கும்படி என்று சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், சுகாதரத்துறை அமைச்சர் கே கே ஷைலஜா இந்த கோரிக்கையை நிராகரித்தார்.
''நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்ய 51 கால்நடை மருத்துவமனைகள் இருக்கின்றன. வெகுவிரைவில் ஏ.பி.சியின் முதல்கட்டம் நிறைவு செய்யப்படும் என்றும், நாய்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்படும் என்றும்'' அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், விலங்குகள் உரிமைகள் ஆர்வலர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை.
கேரள மாநிலத்தின் விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினரான எம்.என்.ஜெயசந்திரன், கருத்தடை திட்டங்கள் மேலும் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
''இது ஒரு தீவிரமான பிரச்சினை, ஆனால் கொலை செய்வது ஒரு தீர்வாகாது'' என்று தெரிவித்துள்ளார்.
நாய்களை கொலை செய்வோருக்கு தகுந்த மனநல ஆலோசனையும், மதீப்பீடும் தேவை என்று பீட்டா அமைப்பை சேர்ந்த ஷாம்பவி திவாரி தெரிவித்துள்ளார்.
''அப்பட்டமான'' கொலைகள் என்று இதனை கண்டித்துள்ள ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல், கேரளாவில் சமீபத்தில் தெரு நாய்களை கொலை செய்யும் சம்பவங்கள் அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அப்பட்டமான விதிமீறல் என்று தெரிவித்துள்ளது.
''தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஏ.பி.சி எனப்படும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு என்பது ஒரே தீர்வாக இருக்கும், என்று அது கூறுகிறது''