'முஸ்லிம் ஆண் - இந்துப் பெண் திருமணம் செல்லாது' என்ற நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

    • எழுதியவர், உமாங் போட்டார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இஸ்லாமிய சட்டப்படியோ அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின் படியோ முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மே 27 அன்று தீர்ப்பளித்தது.

சிலைகளை வணங்கும் அல்லது நெருப்பை வழிபடும் இந்துப் பெண்ணை இஸ்லாமிய ஆண் திருமணம் செய்ய இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது என்றும், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் கூட அத்தகைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த முடிவு சிறப்பு திருமணச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கங்களுக்கு எதிரானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகும் தத்தமது மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண் மற்றும் இந்துப் பெண்ணின் திருமணம் செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

என்ன வழக்கு?

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆணும் இந்துப் பெண்ணும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடினர். திருமணத்திற்குப் பிறகு யாரும் மதம் மாறக் கூடாது என்றும், அந்தந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் இருவரும் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு முன்னதாக திருமண பதிவு அதிகாரியிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது திருமணத்தைப் பதிவு செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டம் இயற்றப்பட்டது. இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய திருமணத்தை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.

இந்த சட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகள், இதுதொடர்பாக திருமண பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கின்றனர்.

விண்ணப்பித்த பிறகு திருமண பதிவு அதிகாரி 30 நாட்களுக்கான ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். இந்த காலகட்டத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று எந்தவொரு நபரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் திருமணம் பதிவு செய்யப்படாது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண், வீட்டிலிருந்து நகைகளுடன் வெளியேறியதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த திருமணத்தை நடத்த அனுமதித்தால், ஒட்டுமொத்த குடும்பமும் சமூகப் புறக்கணிப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அப்பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் ஆட்சேபனையில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் என்ன சொன்னது?

இந்த திருமணம் செல்லுபடியாகுமா இல்லையா என்பதை முதலில் நீதிமன்றம் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் இத்தகைய திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் கூறியது. இதற்குப் பிறகு, தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாத திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டம் கூட சட்டப்பூர்வமாக்காது என்றும் நீதிமன்றம் கூறியது.

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நெருப்பு அல்லது சிலைகளை வழிபடும் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் முஸ்லிம் ஆண் செய்துகொள்ளும் திருமணம் செல்லாது என்று கூறியுள்ளது.

இருப்பினும், ஒரு முஸ்லிம் ஆண் யூத அல்லது கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். இந்த மூன்று மதங்களில் ஏதேனும் ஒன்றை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டால், அத்தகைய திருமணம் செல்லுபடியாகும் என்று கருதலாம்.

இருப்பினும், சிறப்பு திருமணச் சட்டத்தை விட தனிநபர் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றும், தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தம்பதியினர் வாதிட்டனர். ஆனால் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் இதற்கு உடன்படவில்லை. திருமணத்திற்கு தடை இருந்தால் இந்த சட்டத்தால் அதை செல்லுபடியாக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், போலீஸ் பாதுகாப்பு தொடர்பான அவர்களது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இந்த முடிவு சரியா?

குடும்ப விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட பல சட்ட வல்லுநர்கள் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உடன்படவில்லை. சிறப்புத் திருமணச் சட்டம் அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ், அந்தந்த மதத்தைத் தொடர விரும்பும் இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையேயான திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த முடிவில் சிறப்பு திருமணச் சட்டத்தை அமல்படுத்துவதன் நோக்கங்கள் நிராகரிக்கப்பட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் நோக்கங்கள், "திருமணம் செய்து கொள்பவர்களுள் எந்தவொரு தரப்பினரின் மதம் அல்லது நம்பிக்கையை பொருட்படுத்தாமல்” சிறப்பு திருமணச் சட்டம் அனைத்து இந்தியர்களின் திருமணத்தையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்துகொள்பவர்கள் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் நிபந்தனைகளுக்கு இணங்கினால், அவர்கள் "திருமணத்திற்காக எந்த பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்ளலாம்" என்று அது கூறுகிறது.

இந்த முடிவு குறித்து வழக்கறிஞரும் குடும்ப சட்ட நிபுணருமான மாளவிகா ராஜ்கோடியா கூறுகையில், “இது சட்டப்படி சரியான முடிவு அல்ல. இது உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும். இந்த முடிவு சிறப்பு திருமணச் சட்டத்தின் உணர்வை பிரதிபலிக்கவில்லை. இச்சட்டம், இருவேறு மதங்களுக்கு இடையேயான திருமணங்களை எளிதாக்கும் நோக்கம் கொண்டது" என்றார்.

இது குறித்து பெண் உரிமை வழக்கறிஞர் வீனா கவுடா கூறுகையில், “இது நீதிமன்றத்தின் அவதானிப்பாக இருந்தாலும் இது மிகவும் தவறானது. இஸ்லாமிய சட்டத்தில் கவனம் செலுத்தும் அதேவேளையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் நோக்கம் (இது வெவ்வேறு மதத்தவருக்கு இடையிலான திருமணங்களை எளிதாக்குகிறது) மற்றும் காரணங்களையும் நீதிபதி பரிசீலித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் குடும்பச் சட்டப் பேராசிரியரான சரசு எஸ்தர் தாமஸும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அவர், “இந்த முடிவு சரியானது அல்ல. இதில், சிறப்பு திருமணச் சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இஸ்லாமிய சட்டம் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், சிறப்பு திருமணச் சட்டம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது” என்றார்.

மேலும், “தனிநபர் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடத்த முடியாது என்று இந்தத் தீர்ப்பு தவறாகக் கூறுகிறது. எவ்வாறாயினும், இந்தச் சட்டத்தின் கீழ் ரத்த உறவினர்களுக்கிடையிலோ அல்லது வயது வரம்புகளை பூர்த்தி செய்யாத நபர்களுக்கு இடையிலோ திருமணம் செய்து வைக்க முடியாது என, இச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது” என்றார்.

நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இதனால் திருமணங்கள் பாதிக்கப்படுமா?

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணங்களை பாதிக்குமா? அவ்வாஅவ்வாறு நடக்கக் கூடாது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், இது வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணத்திற்கான உற்சாகத்தை குறைக்கிறது என்று அவர் நம்புகிறார்.

வீணா கவுடா கூறுகையில், “இது போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவில் நீதிமன்றத்தின் அவதானிப்பு மட்டுமே. எனவே, இது ஒரு உறுதியான முடிவு அல்ல. திருமணத்தின் செல்லுபடியை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை” என்றார்.

அதேசமயம் மாளவிகா ராஜ்கோட்டியா, “திருமணத்தை நிறுத்த எந்த உத்தரவும் இல்லை. இந்த முடிவின் அடிப்படையில் பதிவாளர் என்ன செய்கிறார் என்பதை இப்போது நாம் பார்க்க வேண்டும்? பதிவாளர்கள் இன்னும் இரு மதத்தவருக்கு இடையிலான திருமணங்களை பதிவு செய்யலாம். திருமணம் செல்லுபடியாகுமா என்பதை நீதிமன்றம் பின்னர் முடிவு செய்யலாம்” என்றார்.

பேராசிரியை சரசு எஸ்தர் தாமஸ் கூறுகையில், இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், "சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மிகவும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால், வெவ்வேறு மதங்களை சேர்ந்த தம்பதிகளின் திருமணம் செல்லுபடியாகாது என்பதால், அவர்களின் சட்டப்பூர்வ குழந்தைகள் முறைகேடாக கருதப்படுவதற்கு வழிவகுக்கும். இது இஸ்லாமிய சட்டத்திற்கு மட்டும் பொருந்துவது அல்ல" என்றார்.

பேராசிரியர் தாமஸ் கூறுகையில், “ எந்தவொரு தனிநபர் சட்டத்தின் கீழும் தடை செய்யப்பட்ட திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். இது தனிநபர் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட மற்ற திருமணங்களை பாதிக்கும். உதாரணமாக, பார்சி சட்டம் வேறு மதத்தவரை திருமணம் செய்வதை தடை செய்கிறது. எனவே திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் தங்கள் திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறார்கள். இந்த முடிவு அதற்கு முட்டுக்கட்டை போடும்” என்றார்.

பேராசிரியர் தாமஸின் கூற்றுப்படி, இது வெவ்வேறு மதங்களைச் சார்ந்த தம்பதிகளுக்கு நல்லதல்ல. பேராசிரியர் தாமஸ் கூறுகையில், “இந்த முடிவு எதிர்காலத்தில் நடைபெறும் இத்தகைய திருமணங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் பாதுகாப்பு கோரி நீதிமன்றம் வந்தனர். நீங்கள் (நீதிமன்றம்) பாதுகாப்பு வழங்காவிட்டால் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் கதி என்ன? இதுபோன்ற திருமணங்களை எதிர்க்க உறவினர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது" என்றார்.

மாளவிகா ராஜ்கோடியா கூறுகையில், “இந்த முடிவின் சாராம்சம் என்னவென்றால், வெவ்வேறு மதத்தவருக்கு இடையேயான திருமணங்களை ஊக்கம் இழக்கச் செய்கிறது. இதுவே மிகவும் கவலையளிக்கிறது" என்றார்.

உத்தர பிரதேசத்தில் இருவேறு மதங்களைச் சேர்ந்த லிவ் இன் உறவில் இருந்த 12 ஜோடிகளுக்கு பாதுகாப்பு வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.

சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த திருமணமான தம்பதிகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. லிவ்-இன் உறவு (திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்) சட்டவிரோதமானது அல்ல என்பதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)