ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்ததற்கு பின்னுள்ள சர்ச்சை

பட மூலாதாரம், Chennai Super Kings
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
சி.எஸ்.கே அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இன்று அறிவித்திருக்கிறார். இதனை எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில் அஸ்வினுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட சில கருத்து பரிமாற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு அஸ்வின் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் அஸ்வினுக்கும் இடைவெளி அதிகரித்து வந்ததாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்வின் தனது எக்ஸ் பதிவில் சிஎஸ்கே அணியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
அந்தப் பதிவில், "சிறப்பான நாள், அதனால் சிறப்பானதொரு தொடக்கம். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய தொடக்கம் இருக்கும் எனக் கூறப்படுவதைப் போல, ஐபிஎல் கிரிக்கெட்டராக என்னுடைய நேரம் முடிவுக்கு வருகிறது. ஆனால், வெவ்வேறு தொடர்களில் (லீக்) ஆராயும் எனது நேரம் இப்போது தொடங்கியிருக்கிறது.
பல ஆண்டுகளாக அற்புதமான நினைவுகளுக்கு அனைத்து அணிகளையும் குறிப்பாக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ நிர்வாகத்துக்கு அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்துக்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு முன் எஞ்சி இருப்பதை அனுபவித்து, அதனை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் கிங்ஸாக தொடங்கிய பயணம், சூப்பர் கிங்ஸாகவே முடிகிறது என, அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு பற்றி சிஎஸ்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், "சிஎஸ்கேவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி சேப்பாக்கத்தை கோட்டையாக மாற்றியவர் அஸ்வின்" எனத் தெரிவித்துள்ளது.
சிஎஸ்கேவில் தொடங்கி சிஎஸ்கேவில் முடிந்த பயணம்

பட மூலாதாரம், Getty Images
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.
2008 ஆம் ஆண்டிலிருந்தே அணியிலிருந்தாலும் முதல் இரண்டு தொடர்களில் நிலையாக இடம்பெறவில்லை. 2010 ஆம் ஆண்டிலிருந்து அஸ்வின் சிஎஸ்கே அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார்.
2010, 2011 ஆண்டுகளில் இரண்டு முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார் அஸ்வின்.
2010 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு அஸ்வின் முக்கியப் பங்காற்றினார். அந்த தொடரில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
ஐபிஎல் தொடரில் இடது கை பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் அஸ்வின்.
2011 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் பந்துவீச்சில் முதல் ஓவரை அஸ்வினுக்கு கொடுத்தார் தோனி. பவர் பிளேயில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவது வழக்கத்தில் இல்லாத காலகட்டம் அது. அஸ்வினின் திறமை மீது தோனி அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.
பெங்களூருவுக்கு எதிராக முதல் ஓவரிலேயே அதிரடி பேட்டரான கிறிஸ் கெயிலின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார் அஸ்வின். அவரின் கேட்சைப் பிடித்த தோனி பந்தை தூக்கி வீசிவிட்டு துள்ளிக் குதித்த காட்சி மிகவும் பிரபலமானது. சிஎஸ்கேவுக்கு இரண்டாவது ஐபிஎல் கோப்பையை உறுதி செய்த தருணம் அது.

பட மூலாதாரம், Getty Images
இதுவரை 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் அஸ்வின்.
சென்னையைத் தவிர டெல்லி, புனே, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு விளையாடியுள்ளார் அஸ்வின். பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.
தன்னுடைய பயணத்தில் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனியின் பங்கு பற்றி பல்வேறு தருணங்களில் பதிவு செய்துள்ளார் அஸ்வின்.
2015 வரை சென்னை அணிக்கு ஆடிய அஸ்வின் அதன் பின் வெவ்வேறு அணிகளில் விளையாடினார். 2025 ஆம் ஆண்டில் மீண்டும் அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி.
ஆனால் 2025 ஐபிஎல் அஸ்வினுக்கும் சென்னை அணிக்கும் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தொடரை முடித்தது.
அஸ்வின் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இந்த போட்டிகளில் ஏழு விக்கெட்டுகள் மற்றும் 33 ரன்கள் மட்டுமே அவரால் சேர்க்க முடிந்தது. எகானமி ரேட்டும் 9க்கு மேல் இருந்தது.
வெளிப்படையாக பேசக்கூடியவர்
கிரிக்கெட் களத்தைத் தாண்டி அஸ்வின் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பவராக அறியப்பட்டார். அவரின் யூடியூப் பக்கத்தில் ஆட்டங்களையும் தாண்டி கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு விஷயங்களை விவாதிப்பார்.
ஐபிஎல் அணியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானபோது அது பற்றி விளக்கமும் அளித்துள்ளார்.
"நான் இந்தத் தொடரில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். இவ்வாறு நடப்பது இது தான் முதல் முறை. நான் இதுவரை விளையாடிய அனைத்து அணிகளில் அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளேன். அதனால் தான் அணி நிர்வாகத்திடம் என் தரப்பிலிருந்து தெளிவுபடுத்த கேட்டேன். ஆனால், அதை ஐபிஎல் தொடரின்போதே கேட்டேன்" என தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார்
டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images
2025 ஐபிஎல் தொடருக்கு நடுவே சிஎஸ்கே அணி குர்ஜப்னீத் சிங்குக்கு பதில் மாற்று வீரராக தென் ஆப்ரிக்க பேட்டரான டெலாவ்ட் பிரெவிஸை அணியில் சேர்ந்தது.
சிஎஸ்கே அணிக்கு விளையாடிய சில போட்டிகளிலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரெவிஸ்.
இந்த நிலையில், பிரெவிஸ் தொடர்பாக தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அஸ்வின், "வேறு சில அணிகளும் பிரெவிஸை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டின. ஆனால் அவர்களால் கூடுதல் பணம் தர முடியவில்லை என்பதால் பின்வாங்கின" எனத் தெரிவித்தார்.
அஸ்வினின் இந்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. ஐபிஎல் விதிகளின்படி ஒரு வீரர் யாருக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்படுகிறாரோ அவர் பெற்று வந்த ஊதியத்தை மட்டுமே பெற முடியும். இதனால் அஸ்வின் தெரிவித்த கருத்து இணையத்தில் மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளானது.
இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்தது. அதில், "மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை சேர்த்தபோது ஐபிஎல்லின் அனைத்து விதிகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன." எனத் தெரிவித்துள்ளது.
அஸ்வினின் கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்த சர்ச்சைகளுக்கான எதிர்வினையாகவே இது பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், R Mohan
அஸ்வின் சிஎஸ்கே அணியுடன் தொடர்வது கேள்விக்குறியான ஒன்றாகவே இருந்தது என்கிறார் மூத்த விளையாட்டு செய்தியாளரான ஆர்.மோகன்.
"டெவால்ட் பிரெவிஸ் தொடர்பான சர்ச்சை என்பது மட்டுமே இதற்கு காரணம் அல்ல. அஸ்வினுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்குமான புரிதல் சரியானதாக இல்லை. அவர் எதிர்பார்த்து வந்த இடம் சிஎஸ்கேவில் அவருக்கு கிடைக்கவில்லை. அதுபோக அடுத்த தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணி அஸ்வினை டிரேட் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அது அவரின் மனதை புண்படுத்தியிருக்கலாம்" என்றார்.
அஸ்வின் தனது எண்ணங்களை மிகத் தெளிவாக வெளிப்படுத்தக்கூடியவர் எனக் கூறும் ஆர். மோகன், அவருக்கு பயிற்சியாளராகவும் எண்ணம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்.
"சிஎஸ்கே அணிக்கு விளையாடுவது மட்டுமல்ல, அணியின் நிர்வாகத்தில் தனது எதிர்காலத்தையும் யோசித்திருப்பார் அஸ்வின். ஆனால், சமீபத்திய சர்ச்சைகளுக்குப் பிறகு சிஎஸ்கே உடன் தொடர்வது சாத்தியமில்லை. சிஎஸ்கே அணியின் இளம் ரத்தத்தை அணிக்குள் கொண்டு வரும் முடிவில் இல்லை. அதில் அஸ்வினுக்கு பங்கு இருக்க வாய்ப்பில்லை" என்றார்.
பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் எந்த வீரரும் வெளிநாட்டு தொடர்களில் விளையாட முடியாது என்கிறார் ஆர்.மோகன், "அஸ்வின் தன்னால் இன்னும் 2 ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என நம்புகிறார். டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை இருக்காது. தினேஷ் கார்த்திக்கைப் போல பயிற்சியாளராக இருந்துகொண்டு வெளிநாட்டு டி20 தொடர்களிலும் அஸ்வின் விளையாடலாம்." என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












