சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
(இது 2013ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்டீன் ஜீவன்ஸ்-க்கு அளித்த நேர்காணல் ஆகும்.)
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இதற்கு முன்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட இரண்டு பயணங்களில் மொத்தம் 322 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை இறக்குவது எப்படி என்பது குறித்த பிபிசி நியூசிஸின் செய்திகளின் ஒரு பகுதியாக, அவர் எப்படி அங்கு சமாளித்தார், செந்நிற கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதை வீரர்களால் தாங்க முடியுமா என்பது குறித்த தனது கருத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
"நீண்டகால திட்டமாக செல்வது குறித்து சிந்திக்கும்போது, நாம் நமது குடும்பத்தை விட்டுச் செல்கிறோம் என்பது நமது மனநிலையில் இருக்க வேண்டும். ஆனால், அது சரியான காரணங்களுக்காக, நல்ல காரணங்களுக்காக, மனிதகுலத்துக்கு உதவுவதற்காக என்பது நமது மனநிலையில் இருக்க வேண்டும்.
எனவே, அதை மனதில் நிலைநிறுத்தி நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாததால் செல்வதற்கு முன் உங்கள் வாழ்கையில் முடிக்க வேண்டியதை முடித்துக்கொள்வது என இதை நான் அழைக்கிறேன்.
செல்லும்போது அனைத்து விஷயங்கள் குறித்தும் மனம் திருப்தியாக இருப்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.
எனது முதல் திட்டப் பணி ஆறரை மாதங்கள் இருந்தது. அது எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது குறித்து எங்களுக்கு உறுதியாக தெரியாது, ஏனென்றால் புறப்பட்டு செல்வதற்கும் தரையிறங்குவதற்கும் வானிலையை சார்ந்திருந்த விண்கலத்தில் பயணம் மேற்கொண்டேன்.
எனவே, 'சென்று வருகிறேன்' என இரண்டு முறை சொல்ல வேண்டியிருக்கலாம் அல்லது வீடு திரும்பப் போகிறோம் என உற்சாகமடைந்த பின்னர் மீண்டும் காத்திருக்க நேரலாம்.
குறிப்பாக, அது எனது முதல் விண்வெளிப் பயணம் என்பதால் உணர்ச்சிகள் ஏற்ற இறக்கமாக இருந்தன.

நினைவாக எடுத்து சென்ற பொருட்கள்
விண்வெளியில் உங்களால் முடிந்தவரை நீங்கள் இயல்பாக இருக்க வேண்டும். விண்வெளி நிலையத்தில் நான் எனது தலைமுடியை தினமும் வாரிக்கொள்வேன்.
அது என் முடியை மேம்படுத்தியதா என தெரியவில்லை, ஆனால் பூமியில் இருக்கும்போது தினசரி செய்யும் விஷயங்களில் அதுவும் ஒன்று. எனவே, அது என்னை இயல்பாக வைத்துக்கொள்ள உதவும்.
வீட்டை நினைவுப்படுத்த உதவும் பொருட்களை நாங்கள் எடுத்துச் செல்வோம். எனது ஜேக் ரஸல் டெரியர் நாய்குட்டியின் புகைப்படத்திலிருந்து வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மைதான் எனக்கு மிகவும் பிடித்தமானது.
உணவு மிகவும் முக்கியமானது. எனது குழந்தை பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த பீநட் பட்டருடன் டார்டிலா மீது "ஃபிளஃபர்நட்டர்" சாண்ட்விச்களை தயாரிக்க மார்ஷ்மெலோ கிரீம் எனக்கு அனுப்பப்பட்டது.
- சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்?
- சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்த 286 நாட்களில் என்ன சாதித்தார்?
- பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?
- கடலில் இறங்கிய விண்கலத்தை சுற்றி துள்ளிக் குதித்த டால்பின்கள் - என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு
காயவைத்த கிரான்பெரிஸ், பதப்படுத்தப்பட்ட லாப்ஸ்டர், எனது குடும்பத்தில் தாயார் பக்கமிருந்து ஸ்லோவேனிய சாசேஜ்கள் மற்றும் எனது தந்தையின் பக்கம் இந்திய சமோசா உள்ளிட்ட எனக்கு பிடித்த பிற உணவுகள் எனக்கு வீட்டை நினைவுப்படுத்தின.
வழக்கமான நாளை போலவே இருக்க நாங்கள் முயன்றோம், ஏனென்றால் 24 மணிநேர சுழற்சியில் அரைமணி நேர மாற்றம் கூட பாதிக்கக்கூடும் என ஆய்வுகள் இருந்திருக்கின்றன.
தூங்குவதற்கு ஸ்லீப் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. கதவை மூடினால் இருட்டாகவும், அமைதியாகவும் இருக்கும். ஏதாவது மோசமாக நடந்துவிட்டால் எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடியும், ஆனால் பொதுவாக மிகவும் அமைதியாக இருந்தது.
எங்கு செல்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்காக கழிப்பிடங்களின் மேல் இரண்டு விளக்குகளை தவிர பிற விளக்குகளை அணைத்து விடுவோம்.
பெரும்பாலானவர்களால் வழக்கத்தை விட குறைவாகவே தூங்க முடிகிறது. வேறு ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதால் எப்போதும் ஒரு பதற்றமான உணர்வு இருக்கும். ஆழ்மனதில் எப்போதும் விழிப்புடனேயே இருந்தோம்.

பட மூலாதாரம், NASA
விண்வெளி நடைகள்
தொழில்நுட்ப கோணத்தில் பார்த்தால் ஒரு சிறிய இடத்தில் சிலருடன் மட்டும் நம்மால் வசிக்க முடியுமா என நமக்கு தெரிய வேண்டும்.
இதை செய்வதற்கு ஃபுளோரிடா கீய்ஸ் அக்வேரிஸ் யூனிட் உட்பட பூமியில் பல பயிற்சிகள் உள்ளன. அங்கு நான் 10 நாட்கள் நீருக்கடியில் இருந்தேன். ஒரு சிறிய, அடைக்கப்பட்ட இடத்தில் வாழ்வது உங்களுக்கு பிடிக்கிறதா என்பதை அறிந்துகொள்ள அது ஒரு நல்ல பரிசோதனை.
ஆனால் தலைமைத்துவம், பின்பற்றும் திறன், மற்றவர்களுடன் எப்படி பழகுகிறோம் குறிப்பாக பண்பாடு அல்லது எண்ணங்களில் வேறுபாடுகள் இருந்தால் எப்படி பழகுகிறோம் போன்றவற்றில் நம்மைப் பற்றி நமக்கே இருக்கும் விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
எனது இரண்டாவது பயணத்தின் போது நான் மூன்று பேர் கொண்ட குழுவில் ஒரு அங்கமாக இருந்தேன். அவர்களுடன் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வதற்காக ஒன்றரை வருடம் பயிற்சி மேற்கொண்டேன்.
அந்த அறிவு முக்கியம். நாங்கள் விண்வெளி மையத்தின் மேல் இருந்தபோது அகி ஹோஸ்ஹைட்டும் நானும் ஒரு விண்வெளி நடை மேற்கொண்ட போது ஒரு மின்சார பெட்டியில் சிறிது சிக்கலை சந்தித்தோம்.
சோயுஸ் குழுவுக்காக நாங்கள் உடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்ட யுரி மெலென்சென்கோ, மற்றொரு குழுவுடன் எங்களுக்கு பொதுவாக இருந்த ஜோ ஏகாபா ஆகியோர் எங்களுக்கு உதவ அங்கு தயாராக இருந்தனர்.
நாங்கள் எப்போது சோர்வடைகிறோம், எப்போது நாங்கள் சோர்வடையாமல் இருக்கிறோம், எப்போது ஊக்கமளிக்கும்படி பேச வேண்டும், எப்போது நகைச்சுவையாக பேச வேண்டும் , எப்போது தீவிரமாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
குழு ஒன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கடைசியாக நடந்த விண்வெளி நடையிலும் (லுகா பார்மிடானோவின் தலைக்கவசத்தில் திரவம் கசிந்தது) நீங்கள் அதை பார்த்திருப்பீர்கள். ஒன்றாக பயிற்சி மேற்கொள்கிறோம், பின்னர் நிலைமை சற்று கடினமாகும்போது அனைவரும் அனைவருக்கும் உதவ ஆர்வமாக இருந்தோம்.
ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வதன் இயல்பான முன்னேற்றம் இதுதான். உங்கள் வாழ்க்கையை காப்பாற்ற அந்த மாற்று நபரின் உதவியைத்தான் நீங்கள் சார்ந்திருக்க வேண்டும்.

பட மூலாதாரம், NASA
வீட்டு நினைவுகள்
விண்ணில் பறந்துகொண்டிருக்கும்போது, பூமியில் உள்ள சில விஷயங்கள் மிகவும் அற்பமானவையாக தோன்றும். அரசியல் போன்றவை மனதை விட்டுச் செல்லும். நான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபராக உணரவில்லை, நான் பூமியிலிருந்து ஒரு மனிதராக மிகவும் அதிர்ஷடமானவராக உணர்ந்தேன்.
எனக்கு (பெரும்பாலான) செய்திகள் முக்கியமானவையாக இல்லை, ஆனால் மக்கள் முக்கியம். எனவே, சூறாவளி, பெரும் தீ போன்ற இயற்கை பேரழிவுகள் குறித்து கேள்விப்படும்போது வீட்டை பற்றிய எண்ணம் தோன்றி, எல்லோரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்ற சிந்தனை மேலோங்கும்.
ஆனால், சில நேரங்களில் நான் பூமியை பார்த்து," அதி அழகான இடம், எல்லோரும் கடற்கரையில் நடை பழகுகின்றனர் அல்லது அதுபோல் ஏதோ செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்," என நினைப்பேன்.
ஒரு மோசமான நாளை எதிர்கொண்டால் கப்போலா ஜன்னலுக்கு (பூமியை பார்க்க உதவும் ஜன்னல்) சென்று பூமியின் ஒரு பகுதியை பார்க்க முடியும். அது உங்களை புன்னகைக்க செய்யும்.
அதேபோல், தொடர்பு கொள்ளும் திறன் இருக்கும்போது, வீட்டை அழைத்து, 'ஹாய்' சொல்லி மற்றொரு நட்பான குரலை கேட்க முடியும்.

பட மூலாதாரம், SUNI WILLIAMS
செவ்வாய் கிரகத்துக்கு பயணம்
செவ்வாய் கிரகத்துக்கு செல்லவிருக்கும் விண்கலம் சற்று சிறியதாக இருக்கும் என கற்பனை செய்ய முடிகிறது. அவர்கள் வழியில் அத்தனை பரிசோதனைகளை செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன்.
விண்கலத்தின் ஜன்னலுக்கு வெளியே பூமி மேலும் மேலும் சிறிதாகிக்கொண்டே செல்லச்செல்ல தொடர்புகளும் தாமதமாகும் நிலையில், குழுவின் நேரத்தை செலவிடுவதற்கான காரியங்களை திட்டமிட வேண்டும்.
மனரீதியாக அது மேலும் சவாலானதாக இருக்கும், ஆனால் கிடைக்கும் பரிசு மிகப்பெரியது. எனவே, குறிக்கோளை மனதில் வைத்துக்கொண்டால் இது செய்யக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். ஆனால், அது மனரீதியாக மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
கதிரியக்க அபாயம்
பூமியின் தாழ்வான சுற்றுப்பாதை, நம்மை கதிரியக்கத்திலிருந்து காக்கும் நமது கோளின் அருகே கொஞ்சமேனும் உள்ள சூழல் ஆகியவற்றிலிருந்து தொலைதூரத்தில், செவ்வாயை நோக்கிய பயணத்துக்கு யாரையேனும் அனுப்புவதற்கு முன் நாம் தீர்வு காண வேண்டிய மருத்துவ பிரச்னைகள் பல உள்ளன.
மக்கள் அங்கு சென்று வெற்றியடைய வேண்டும் என நாம் விரும்புகிறோம். ரோபோட்களை அங்கு அனுப்புவது சிறப்பானது, ஆனால் பிரச்னை மீது இரு கண்களை பொருத்தி அங்கிருப்பது என்ன என்பதை புரிந்துகொண்டு அதற்கான தீர்வு காண்பது அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.
அனைத்து பொறியியல் பிரச்னைகளையும் கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு கண்டுவிடுவோம் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை.
விண்வெளி பயண திட்டம் நீண்ட காலமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் நினைத்தாலும் அது தொடங்கி வெறும் 50-60 ஆண்டுகள்தான் ஆகியுள்ளது.
முதலில் ராக்கெட்டுகளை ஏவ முயற்சி செய்துகொண்டிருந்ததிலிருந்து தற்போது விண்வெளியில் தங்கி பணிபுரிவதுடன், வழக்கமாக விண்வெளி நடையை மேற்கொள்வது என முன்னேறியிருப்பது நம்பமுடியாத ஒரு படியாகும்.
"நாம் செவ்வாய்க்கு செல்கிறோம். அதைச் செய்வது எப்படி?" என குறிப்பாக ஒரு இலக்கு இருந்தால், ஏராளமானவர்கள் அதை மேற்கொள்ள முன்வருவார்கள் என நினைக்கிறேன். நிச்சயம் நானும் செல்வேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












