ஃபெஞ்சல் புயல்: வட தமிழகம், புதுச்சேரியில் சிவப்பு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

வங்கக்கடலில் உருவானது ஃபெஞ்சல் புயல். வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவானது.

ஃபெஞ்சல் புயல் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலவுகிறது. இதனால் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி 13 கி.மீ வேகத்தில் கடந்த 6 மணிநேரமாக நகர்ந்ததால் நவம்பர் 29 அன்று 2:30 மணிக்குப் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் சென்னையிலிருந்து 300 கி.மீ தூரத்திலும், கிழக்கு மற்றும் தென் கிழக்கு புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ தூரத்திலும், திரிகோண மலையிலிருந்து வடக்கு மற்றும் வடகிழக்கே 310 கி.மீ தூரத்திலும், நாகப்பட்டினத்தில் இருந்து 260 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே குறிப்பாக காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்.

புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நவம்பர் 30 அன்று 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு வடக்கு உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 2 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கை கடற்கரையை ஒட்டி வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம். அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை கடக்கும், அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28 மாலை முதல் 29 நவம்பர் காலை வரை தென்மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் (இடையிடையே 85 கிமீ) காற்று வீசக்கூடும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

முன்பு கூறப்பட்டது என்ன?

முன்னதாக, இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல் அப்படியே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை மதியம் வெளியிட்ட அறிவிப்பில், "தென்மேற்கு வங்கப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக-புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கக் கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)