You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும் தெரியுமா? எளிய விளக்கம்
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.
கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும்.
கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரும். இந்தப் பகுதிக்குள் வந்த பிறகு, இந்தக் காற்றும் வெப்பமடைந்து மேல் எழும்பும்.
இப்படித் தொடர்ந்து வெப்பக்காற்று மேலெழும்பும் போது அது மேகங்களாக மாறும். மேகங்களும் காற்றும் சுழலத் தொடங்கும். கடலிலிருந்து மேல் எழும்பும் வெப்பக் காற்று அந்தச் சுழற்சிக்குத் தொடர் உந்துதலாக இருக்கும். இதுவே புயல் எனப்படுகிறது.
தொடர்ந்து வெப்பக் காற்று கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும். எனவே தான் புயல் நிலத்தை அடைந்த பிறகு, அது முற்றிலும் ஓய்ந்து விடுகிறது.
புயல் வெவ்வேறு கடல் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் 'டைஃபூன்' எனவும், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் 'ஹரிக்கேன்' எனவும், தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் 'டோர்னடோ' எனவும், வட மேற்கு ஆஸ்திரேலியாவில் 'வில்லி-வில்லிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது.
புயலின் வகைகள்
புயல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெப்ப மண்டலப் (tropical) புயல்கள் மற்றும் வெப்ப மண்டலச் சேய்மை (extra tropical) எனப்படும்.
வெப்ப மண்டலப் புயல் என்பது கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு (tropic of Capricorn) இடையில் உருவாகக்கூடியது ஆகும். காற்றின் வேகம் மணிக்கு 63கி.மீ வேகத்தை விட அதிகம் கொண்டதாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் இந்த வகையைச் சார்ந்ததாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்குகிறது.
வெப்ப மண்டலச் சேய்மைப் புயல்கள் மிதமான வெப்பம் இருக்கும் மண்டலங்களில் உருவாகும்.
புயலின் தீவிரம்
இந்தியாவில், காற்றின் வலிமை, மழைப்பொழிவு, புயலின் எழுச்சி ஆகியவற்றைக் கொண்டு புயல் எவ்வளவு வீரியமானது என வகைப்படுத்தப்படுகிறது.
காற்றின் வேகம் மணிக்கு 31கி.மீ-க்கு கீழ் இருந்தால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப்படும்.
காற்றின் வேகம் 31கி.மீ முதல் 49கி.மீ வரை இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று வகைக்கப்படுத்தப்படுகிறது.
மணிக்கு 49 கி.மீ முதல் 61 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தால் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது என்று அர்த்தம்
அடுத்த நிலை, அதாவது மணிக்கு 61கி.மீ முதல் 88கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்போது அது புயல் என்றழைக்கப்படும்.
அதை விடவும் காற்றின் வேகம் அதிகமாக, மணிக்கு 88கி.மீ முதல் 117கி.மீ வரை இருந்தால், தீவிர புயல் என்றழைக்கப்படும்.
அந்த வேகத்தையும் விட அதிகமாக இருக்கும் புயல்கள் சூப்பர் புயல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
புயல் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்து ஒன்று முதல் ஐந்து வரை இந்தியாவில் வகைப்படுத்தப்படுகின்றன.
- ஒன்று – குறைந்த சேதம்
- இரண்டு – மிதமான சேதம்
- மூன்று – பரவலான சேதம்
- நான்கு – தீவிர சேதம்
- ஐந்து – மிக மோசமான சேதம்
புயலின் பாகங்கள்
புயலுக்கு மூன்று பாகங்கள் உள்ளன.
நடுப்பகுதி - மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். இது தான் புயலின் 'கண்' பகுதி எனப்படும். இது வட்டமாக, நீள்வட்டமாக, அல்லது ஒரே மையத்தைக் கொண்ட அடுத்தடுத்து அடுக்குகளாக இருக்கும். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அடுத்தடுத்த அடுக்குகள் கொண்டதாக இருக்கும்.
இதைச் சுற்றியுள்ள பகுதி ‘eye wall’ எனப்படும் பகுதி அதிவேகக் காற்றைக் கொண்டதாகும். இதுவே புயலின் மிகவும் முக்கிய மற்றும் ஆபத்தான பகுதி. இந்தப் பகுதி கரையை கடக்கும் போது தான் அதிகனமழை, சூறைக்காற்று உருவாகும்.
இதற்கும் வெளியே இருக்கும் பகுதி மேகக்கூட்டங்களால் ஆனது. இவற்றால் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம்.
தென்னிந்தியாவில் புயல்கள்
தென்னிந்தியாவில் புயல்கள் வங்கக் கடல் அல்லது அரபிக் கடலில் பருவமழை மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை பொருத்து உருவாகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கக் கடலில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் அதிகரித்துள்ளன. போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஒரு தசாப்தத்தில் 50.5% புயல்கள் உருவாகின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 49.8% புயல்களும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 28.9% புயல்களும் உருவாகின என்றும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
2001-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரபிக் கடலில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகத் துவங்கியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அரபிக் கடலில் உருவாகி வந்த நிலையில், 20 ஆண்டுகளில், புயல்கள் அதிகமாகியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் இரண்டு பகுதி அரபிக் கடலில் உருவாகிறது. அதே நேரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள புயல் பாதிக்கும் இடங்கள் குறித்த வரைபடக் குறிப்பில், இந்தியாவில் கிழக்குக் கடற்கரையோரத்தில் புயலால் பாதிப்படையக்கூடிய நான்கு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தைக் குறிப்பிடுகிறது. 1891 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்குத் தமிழகத்தின் பூகோள அமைப்பு ஒரு காரணமாகும். வங்கக் கடலில் உருவாகும் புயல்கள், தமிழகத்துக்குத் தென்கிழக்கே அமைந்திருக்கும் இலங்கையின் காரணமாக வடக்கு நோக்கி திருப்பப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)