பாலத்தீனம்: இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு நாளுக்கு நாள் கடுமையாவது ஏன்?
காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரிய ஐநா தீர்மானத்தை வீட்டோ செய்ய அமெரிக்கா மறுத்துவிட்டது. இதன் மூலம் காஸா போர் நிறுத்த தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாட்டால் இஸ்ரேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் சூழலில் முதல்முறையாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐ.நா.வில் எடுத்துள்ளது. அமெரிக்கா தனது முந்தைய கொள்கைகளை கைவிட்டுவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தையும் இஸ்ரேல் ரத்து செய்துள்ளது. சர்வதேச அளவில் இந்த விஷயம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
என்ன நடந்தது?
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா 3 முறை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த தீர்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி செயழிக்கச் செய்திருக்கிறது. ரஷ்யாவும் சீனாவும் இரு முறை தீர்மானத்துக்கு முட்டுக்கட்டை போட்டன.
வீட்டோ என்பது ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே இருக்கும் அதிகாரமாகும். வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள், பெரும்பான்மை குறித்த எந்தக் கவலையும் இன்றி எந்தவொரு தீர்மானத்தையும் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று திங்கட்கிழமை, ரமலான் மாதத்தையொட்டி காஸாவில் உடனடியாக போர் நிறுத்ததை அமல்படுத்துவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.அதாவது ரமலானில் மீதமுள்ள இரு வாரங்களுக்கும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்காவை தவிர்த்து, பிரிட்டன் உள்ளிட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 14 நாடுகளும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா வாக்களிப்பதை தவிர்த்து. இதன் மூலம் காஸாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஸா தீர்மானத்தின் மீது அமெரிக்கா வாக்களிக்காமல் புறக்கணித்தது ஏன் என்பது குறித்து ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபில்ட் பேசினார். நாங்கள் இந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து அம்சங்களோடும் ஒத்துப்போகவில்லை. அதனாலேயே வாக்களிக்கவில்லை என்றார்.
‘ஹமாஸின் படுகொலைகள்தான் இந்த போரை தொடங்கி வைத்தது. ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் இதுவரை குழந்தைகளை கொலை செய்யும் ரேபிஸ்டுகளை’ (ஐ.நா கவுன்சில் கண்டிக்கவில்லை என ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதர் க்லாட் எர்டன் அதிருப்தியுடன் கூறினார்.

பட மூலாதாரம், EPA
ஐ.நாவுக்கான பாலத்தீன தூதர் ரியாத் மன்சூர் பேசுகையில், இந்த தீர்மானம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். களத்தில் பல உயிர்களை பாதுகாக்க இது உதவும். இது எங்கள் மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை தடுக்கும் என்றார்.
உடனடி போர் நிறுத்தத்தையும் பணயக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கவும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்மானத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தோல்வியில் முடிவதை மன்னிக்கவே முடியாது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பணயக் கைதிகளை விடுவிக்காமல், இஸ்ரேலை போர் நிறுத்தம் செய்ய சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் இந்த தீர்மானம் ஹமாஸுக்குதான் சாதகமாக உள்ளது என்றும் இதனால் போர் முயற்சியும் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியும் தடைபடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வினையாற்றியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறைமுகமாக சாடிய அவர், இந்த வாரத்தில் வாஷிங்டன் செல்ல இருந்த இஸ்ரேலிய பிரதிநிதிகளின் பயணத்தையும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு நாளுக்கு நாள் கடுமையாவது ஏன்?
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரஃபாவில் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் தொடர்பாக விவாதிக்க இருந்தனர். ஆனால் ரஃபாவில் தரை வழித் தாக்குதலை தீவிரப்படுத்தும் நடவடிக்கை ஹமாஸை வீழ்த்துவதற்கான வழி இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆண்டனி பிளிங்கன் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலிய அதிகாரிகளின் பயணம் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஃபாவில் தீவிர தாக்குதலை தொடுப்பது பெரும் தவறு என அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் கூறியுள்ளார்.
முன்னதாக, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க முடியாது என அமெரிக்கா கூறி வந்தது. ஆனால் கடந்த வாரம், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தனது சொந்த வரைவு அறிக்கை ஒன்றை முதல்முறையாக அமெரிக்கா முன்வைத்தது. இது இஸ்ரேல் மீதான அதன் நிலைப்பாடு கடுமையாகியுள்ளதை குறிப்பதாக அமைந்தது.
காஸாவில் உள்ள மக்கள் அனைவரும் உணவின்றி தவிப்பதாக கூறி வரும் அமெரிக்கா, அவர்களுக்கு கூடுதல் மனிதநேய உதவிகளை செய்யுமாறு இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை தொடுத்தது. பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 130 பேர் ஹமாஸ் வசம் சிக்கியிருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. இதில் 33 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறுகிறது, ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் இதுவரை 32,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



