You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம் : வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மயல் தாலுகாவில் உள்ள குண்டமலாவில் இந்திரயானி நதி மீது கட்டப்பட்ட பாலம் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் சிலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் தரவுகளின் படி மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் மீது எத்தனை பேர் இருந்தார்கள், விபத்து எப்போது நடந்தது, எவ்வளவு பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்பவை தற்போது வரை தெளிவாகவில்லை. ஆனால் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குண்டமலா இந்தப் பகுதியின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இதனால் வார இறுதி நாட்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று ஞாயிறு என்பதால் கூட்டம் இருப்பதற்கான சாத்தியம் இருந்துள்ளது.
மீட்புப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் என்ன சொன்னார்?
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"விபத்து செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தின் துக்கத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். ஒரு சிலர் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேட போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்தில் உள்ளனர். மீட்புப் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன" என முதலமைச்சர் ஃபட்னவிஸ் எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.
விபத்துக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) நாடாளுமன்ற உறுப்பினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில். "குண்டமலா நதி மீது உள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் சில பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து மிகவும் துர்திருஷ்டவசமானது, அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நான் கடவுளிடம் பிராத்திக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கு பிரார்த்திப்பதாக ஆதித்யா தாக்கரே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தலைவர் சுஷ்மா அந்தாரே, "இந்த விபத்து மிகவும் துர்திருஷ்டவசமானது. இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என நாம் விசாரிக்கிற வேளையில், இந்திரயானி நதியில் மட்டுமல்ல, மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகளும் கட்டப்பட்டுள்ள பாலங்களில் தேவையான பணிகள் பருவமழைக்கு முன்பே மேற்கொள்ளப்பட வேண்டும். சிதிலமடைந்த நிலையில் உள்ள பாலங்களை அரசு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனினும் இந்தப் பாலத்தில் அத்தகைய எந்த முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.
இந்த விபத்துக்கு அரசே காரணம் எனக் கூறுகிறார் அந்தாரே. ஏனென்றால் உள்ளூர் பிரதிநிதிகள், மாற்றுப்பாதை இல்லாததால் புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற கிராமத்து மக்களின் கோரிக்கையை புறக்கணித்துள்ளனர் என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு