இரானின் முதல் உச்ச தலைவர் காமனெயி மீது 'இந்திய ஏஜென்ட்' என முத்திரை குத்தப்பட்டதன் பின்னணி

ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி, இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்
படக்குறிப்பு, இரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி
    • எழுதியவர், ராகேஷ் பட்
    • பதவி, பிபிசி மானிட்டரிங்

இரானின் முதல் உச்ச தலைவரும் இரான் இஸ்லாமிய குடியரசின் நிறுவனருமான ஆயதுல்லா ருஹோல்லா காமனெயியின் மூதாதையர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

ஆயதுல்லா ருஹோல்லா காமனெயியின் தாத்தா, சையித் அகமது மௌசவி, 1790ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்.

ருஹோல்லா காமனெயியின் தாத்தாவுக்கு 40 வயதாக இருந்தபோது, ​​அவர் அவத் பகுதியின் நவாப்புடன் சேர்ந்து இராக்கிற்கு ஆன்மீக யாத்திரை சென்றார்.

அங்கிருந்து, அவர் இரானில் உள்ள பல ஆன்மீக இடங்களுக்குச் சென்று, இரானின் காமெய்ன் என்ற கிராமத்தில் குடியேறினார்.

ஆனால், அவர் தனது இந்திய வேர்களை நினைவுகூரும் வகையில் தனது குடும்பப் பெயரில் 'இந்தி' என்பதைத் தக்க வைத்துக் கொண்டார். அவரது மகன் 'ஆயதுல்லா முஸ்தபா இந்தி', இஸ்லாத்தின் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவரானார்.

'முஸ்தபா இந்தி'யின் இளைய மகன் ருஹோல்லா ஆயதுல்லா 1902இல் பிறந்தார். பின்னர் அவர் ஆயதுல்லா காமனெயி என்றும், இமாம் காமனெயி என்றும் அழைக்கப்பட்டார்.

இஸ்லாமிய குடியரசின் உருவாக்கம்

ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி, இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹ்லவி சுல்தானுக்கு எதிராக கலகம் செய்த பின்னர் இரானில் இருந்து நாடு கடத்தப்பட்டார் ருஹோல்லா கோமனெயி

ருஹோல்லா பிறந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அவரது தந்தை சையத் முஸ்தபா இந்தி கொலை செய்யப்பட்டார்.

முஸ்தபா இந்தியின் மரணத்திற்குப் பிறகு, ருஹோல்லா தனது தாயார் மற்றும் அத்தையால் வளர்க்கப்பட்டார். அவர் தனது மூத்த சகோதரர் முர்தாஸாவின் மேற்பார்வையில் இஸ்லாமிய கல்வியைப் பெற்றார்.

ருஹோல்லா காமனெயிக்கு இஸ்லாமிய நீதித்துறை மற்றும் ஷரியாவில் பெரும் ஆர்வம் இருந்தது. அவர் மேற்கத்திய தத்துவத்தையும் பயின்றார்.

அவர் இரானிய நகரங்களான அராக் மற்றும் கோமில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பயின்றார், பின்னர் கற்பித்தல் பணியையும் மேற்கொண்டார். இந்த நேரத்தில்தான் அவர் முடியாட்சியை எதிர்க்கத் தொடங்கினார்.

அதற்குப் பதிலாக, அவர்கள் விலாயத்-இ-ஃபாகிஹ் (சட்டவியலாளரின் இறையாண்மை) என்ற அமைப்பை ஆதரிக்கத் தொடங்கினர்.

பஹ்லவி சுல்தானுக்கு எதிராகக் கலகம் செய்த பின்னர் அவர் இரானில் இருந்து நாடு கடத்தப்பட்டார். மறுபுறம், இரான் மக்கள் ருஹோல்லா காமனெயியை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி, இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்
படக்குறிப்பு, ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி

காமனெயி தலைமையின் கீழ் மக்களும் பிற எதிர்க்கட்சி அரசியல் குழுக்களும் ஒன்றுபட்டிருப்பது, பஹ்லவி ஆட்சியின் கவனத்திற்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, ஜனவரி 7, 1978 அன்று, இட்டெலட் நாளிதழ், காமனெயியை இந்தியா மற்றும் பிரிட்டிஷின் ஏஜென்ட்டாக சித்தரிக்கும் முயற்சியில், அவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 'முல்லா' (முஸ்லிம் மதகுருமார்களுக்கான ஒரு பட்டம்) என்று குறிப்பிட்டது.

அது காமனெயியை பிரிட்டிஷ்-இந்திய காலனியின் சிப்பாய் என்று விவரித்தது. இந்தக் கட்டுரை வெளியான பிறகு இரானிய புரட்சி தீவிரமடைந்தது. அதை அடக்க அரசு எவ்வளவு முயன்றாலும், மக்கள் வீதிகளில் இருந்து வெளியேற மறுத்தனர்.

புரட்சி முடிவுக்கு வரப் போவதில்லை என்பதை உணர்ந்த பிறகு, பஹ்லவி வம்சத்தின் இரண்டாவது மன்னர் ஆர்யா மெஹர் முகமது ரெசா பஹ்லவி, ஜனவரி 16, 1979 அன்று நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றார்.

அதிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி 1, 1979 அன்று, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரானுக்கு திரும்பினார் காமனெயி. காமனெயி இரானுக்கு திரும்பியதும், முடியாட்சிக்கு மாற்றாக ஓர் இஸ்லாமிய குடியரசை நிறுவினார்.

காமனெயியின் நிலைப்பாடு

ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி, இரான், மத்திய கிழக்கு, இஸ்ரேல்
படக்குறிப்பு, ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயியின் இறுதி ஊர்வலம்

தனது அரசியல் வாழ்வில் காமனெயி சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றார். 'நமக்கு கிழக்கு அல்லது மேற்கு நாடுகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை, இஸ்லாமிய குடியரசுடன் மட்டுமே தொடர்பு உள்ளது', 'அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை' என்பன போன்ற முக்கியக் கருத்துகளை அவர் கூறினார்.

அவர் ருஹோல்லா இந்தி என்ற பெயரில் இர்ஃபானா கஜல்களை (Ghazal - பாரசீகம் மற்றும் உருது மொழியில் எழுதப்படும் பாரம்பரிய கவிதை) எழுதி வந்தார்.

ஜூலை 27, 1980 அன்று, வெளிநாட்டில் தங்கியிருந்த இரானிய பேரரசர் ஆர்யா மெஹர் முகமது ரெசா பஹ்லவி உயிரிழந்தார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 4, 1989 அன்று, ஆயதுல்லா ருஹோல்லா கோமனெயி உயிரிழந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆயதுல்லா அலி காமனெயி வருகை

உச்ச தலைவர் ருஹோல்லா காமனெயி இறந்த பிறகு, 1989ஆம் ஆண்டு அவரது வாரிசாக ஆயதுல்லா அலி காமனெயி மதகுருக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

ஆயதுல்லா அலி காமனெயி 1939ஆம் ஆண்டு இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில் பிறந்தார். 1962ஆம் ஆண்டில், ஷா முகமது ரெசா பஹ்லவிக்கு எதிராக ருஹோல்லா ஆயதுல்லா காமனெயியால் தொடங்கப்பட்ட மதப் போராட்டத்தில் ஆயதுல்லா அலி காமனெயியும் இணைந்தார்.

ஆயதுல்லா அலி காமனெயி, ருஹோல்லாவின் சீடரானார். 'இன்று தான் செய்யும் மற்றும் நம்பும் அனைத்தும் ருஹோல்லா காமனெயியின் இஸ்லாம் பற்றிய பார்வையில் இருந்து வந்தவை' என்று ஆயதுல்லா அலி காமனெயி கூறுகிறார்.

அவர் ஷாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1979 இஸ்லாமிய புரட்சி நடந்து ஓர் ஆண்டு கழித்து, தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொழுகைகளின் தலைவராக காமனெயி நியமிக்கப்பட்டார். அவர் இடைக்கால அரசிலும் அரசாங்கத்தை நடத்திய புரட்சிகர கவுன்சிலிலும் பணியாற்றினார்.

பின்னர் அவர் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சரானார். இந்தப் பதவி, இரானில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) ஒழுங்கமைக்க அவருக்கு உதவியது. பின்னர் அவர் 1981இல் அவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு