ரணிலின் கைதை முன்கூட்டியே சொன்ன யூடியூபர் - தகவல் கிடைத்தது எப்படி ?

ரணில் விக்ரமசிங்க
படக்குறிப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று ஆஜரான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அவருக்கு ஆதரவாக கட்சி பேதமின்றி அனைத்து எதிர்கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீம், சாமர சம்பத் தஸநாயக்க, ரவி கருணாநாயக்க, உள்ளிட்ட பலர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைத் தந்தனர்.அத்துடன், நீதிமன்ற வளாகத்தை சூழ ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களும் கூடியிருந்தனர்.

இந்த நிலையில், நீதிமன்ற விசாரணைகள் 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் மின்சார தடை ஏற்பட்டமையினால் பல மணிநேரம் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாகியது. இறுதியாக ரணிலின் பிணை மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரணிலின் கைதை முன்கூட்டிய சொன்ன யூடியூபர்

ரணில் விக்ரமசிங்க கைது, இலங்கை முன்னாள் ஜனாதிபதி கைது

பட மூலாதாரம், Getty Images

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைக்கு அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என இலங்கையின் சிங்கள யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் சுதத்த திலக்கசிறி என்பவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்த இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

''ரணில் விக்ரமசிங்க சி.ஐ.டி.க்கு வருவார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 14 நாட்களுக்கு ரணில் விக்ரமசிங்க உள்ளே செல்வார் என்பது நிச்சயம். அப்படியில்லையென்றால், சுதத்த யூடியூப் சேனலிலிருந்து விடைபெறுவார்.'' என அவர் தனது சேனலில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தார்.

"நீதிமன்ற நடவடிக்கைககளை முன்கூட்டியே கூறுவதானது, ரணில் விக்ரமசிங்கவை திட்டமிட்டு கைது செய்வதற்கான திட்டம்" என ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்படுவோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, காணொளி: ரணில் விக்ரமசிங்க கைது - நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்சி

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்பதை கூறிய சுதத்த திலக்கசிறிக்கு எதிராக விசாரணையொன்றை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் வழக்கறிஞர்கள் சிலர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் ''யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவார் என்பது நடப்பதற்கு முன்னமே எதிர்வு கூறுவது? இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா? அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சியாக மாறும் அந்நாள் மோசமானதொரு நாளாகும்.'' எனத் கூறுயுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், குறித்த யூடியூபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

சுதத்த திலக்கசிறி என்ன கூறுகிறார்?

ரணில் விக்ரமசிங்க கைது, இலங்கை முன்னாள் ஜனாதிபதி கைது

பட மூலாதாரம், Sudaa Creation YOUTUBE

படக்குறிப்பு, தனக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதையும் கூறவில்லை என சுதத்த திலக்கசிறி தெரிவித்திருந்தார்.

தனக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதையும் கூறவில்லை என சுதத்த திலக்கசிறி இன்று வெளியிட்ட வீடியோவொன்றில் தெரிவித்திருந்தார்.

பிரபஞ்சத்திலிருந்து தனக்கு தகவல் கிடைப்பதாகவும், அந்த தகவலையே தாம் வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

''சுதா நேற்று கூறிய எதிர்வு இன்று சரியாகியுள்ளது அல்லவா?. சுதா கூறியது எதிர்வு கூறல் மாத்திரமே. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்னிடம் எதையும் கூறவில்லை. இந்த பிரபஞ்சத்தில் எனக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது. பிரபஞ்சம் எனக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றது. அந்த தகவல் கிடைத்தவுடன் நான் அதனை உங்களுக்கு கூறுகின்றேன். அந்த பெருமை எனக்குள்ளது. சுதத்திற்கு அநுர குமார திஸாநாயக்க சகோதரர் ஒன்றையும் கூறவில்லை. நான் நினைத்து கூறினேன். அனைவருக்கும் ஒரேவிதமாக சட்டம் அமல்படுத்தப்படுகின்றது என்பதை நினைவுப்படுத்திக் கொள்கின்றேன்.'' என சுதத்த திலக்கசிறி வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு