You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை: ஈசிஆர் சாலையில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்கள் யார்? காவல்துறை வெளியிட்ட தகவல்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை சிலர் துரத்திய சம்பவத்தில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் நான்கு பேர் கல்லூரி மாணவர்கள் எனவும் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 31) செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்த்திகேயன், இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்று பேரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களும் பிடிபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"புகார் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதா?" என்ற கேள்விக்குப் பதில் அளித்த காவல் துணை ஆணையர், "24ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு 26ஆம் தேதி பெண்ணின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதற்கான புகார் மனு ஏற்பு சான்றிதழ் உடனே கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது" என்றார்.
குற்றம் சுமத்தப்பட்ட நபர்களின் கார் மீது பெண்ணின் கார் இடித்ததால் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்துப் பேசிய காவல் துணை ஆணையர், "வாகனத்தில் இடிக்கவில்லை என்கின்றனர். அது விசாரணையில் தெரிய வரும்" என்றார்.
இது தவிர, "அந்த நேரத்தில் யார் அங்கே போகச் சொன்னது என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காவல்துறையில் உள்ளவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை" என்றும் கார்த்திகேயன் கூறினார்.
வழக்கில் தொடர்புடைய கார்களின் விவரம் குறித்துப் பேசிய அவர், "இதில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஒரு காரை பறிமுதல் செய்துள்ளோம். இவை 2011, 2012ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட கார்கள். பல பேரிடம் அது கைமாறியுள்ளது. ஒரு வாகனத்தை அனீஸ் என்ற நபரிடம் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்பு சந்துரு வாங்கியுள்ளார். அதை அவர் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார்" எனக் கூறினார்.
திமுக கட்சிக் கொடி இருந்தது தொடர்பான சர்ச்சை
குற்றம் சுமத்தப்பட்டவர்களின் காரில் திமுக கட்சிக் கொடி இருந்தது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த கார்த்திகேயன், "கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுங்கச் சாவடிகளில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு பயன்படுத்தியதாக வாகனத்தின் ஓட்டுநர் தெரிவித்துள்ளதாக" குறிப்பிட்டார்.
அதோடு, "அந்த நபருக்கும் திமுகவுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸ் விசாரணையில் தகவல் எதுவும் தெரிய வரவில்லை" எனவும் அவர் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏழு பேரில் சந்துரு என்ற நபர் மீது மட்டும் நகர காவல் எல்லையில் இரண்டு குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீது கடத்தல் வழக்கு ஒன்றும் மோசடி வழக்கு ஒன்றும் பதிவாகியுள்ளது. முட்டுக்காடு சம்பவத்தில் வழிப்பறி செய்யும் நோக்கம் எதுவும் இல்லை" எனக் கூறினார்.
"கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு போதுமான அளவுக்கு இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இவையெல்லாம் மூன்று நிமிடத்தில் நடந்துவிட்டது. இதுதொடர்பான வீடியோவை தனது நண்பரிடம் அந்தப் பெண் கொடுத்துள்ளார். அது வெளியில் வந்துள்ளது" எனக் கூறினார் கார்த்திகேயன்.
என்ன நடந்தது?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூரில் வசித்து வரும் பெண்மணி ஒருவர், தனது குழந்தை மற்றும் உறவினர்களான மூன்று பெண்களுடன் கடந்த 25 ஆம் தேதி இரவில் முட்டுக்காடு படகுகள் குழாமை பார்க்கச் சென்றுள்ளார்.
ஆனால், அந்தப் பகுதியில் ஏற்கெனவே இரண்டு கார்களில் வந்திருந்த இளைஞர்கள் சிலரைப் பார்த்ததும் தனது காரை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியில் இருந்து வேகமாக பெண்மணி வெளியேறியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதை கவனித்த அந்த இளைஞர்களுள் சிலர், அப்பெண்மணியின் காரை ஈசிஆர் சாலையில் விரட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் சாலையின் குறுக்கில் இளைஞர்களின் கார் நிறுத்தப்படவே, அதில் இருந்து இறங்கி வரும் ஒருவர், காரை வழிமறிக்கும் வீடியோ காட்சிகள் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
அந்த நபர் வழிமறித்தபோது காரில் இருந்த பெண்கள், கத்திக் கூச்சலிடுவதை வீடியோ வாயிலாக கேட்க முடிகிறது. "காரை விட்டு யாரும் இறங்க வேண்டாம்" என அப்பெண்கள் அலறும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது.
இதுதொடர்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை (26 ஆம் தேதி) கானாத்தூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் மனுவைக் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சம்பவம் நடைபெற்று மூன்று நாட்கள் கழித்து பெண்களின் காரை இளைஞர்கள் சிலர் துரத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, ஊடகங்களில் வெளியான தகவலில், இளைஞர்களின் காரை பெண்மணியின் கார் உரசிச் சென்றதால் அதைத் தட்டிக் கேட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதனை பாதிக்கப்பட்ட பெண்மணி முழுவதுமாக மறுத்துள்ளார். "யாருடைய காரையும் நாங்கள் உரசிச் செல்லவில்லை. எதற்காக துரத்தப்பட்டோம் என்று தெரியவில்லை. நாங்கள் புகார் அளித்ததும் காவல்துறையினர் எங்களுக்கு உதவி செய்தனர்" என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை விமர்சனம்
அதேநேரம், பெண்களின் காரை நடுரோட்டில் இளைஞர்கள் சிலர் வழிமறிக்கும் காட்சிகள், அரசியல் ரீதியாக விவாதப் பொருளாக மாறியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
காரில் திமுக கொடி பொருத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது. எனினும், தொடர்புடைய நபர்களோ அல்லது காரின் உரிமையாளரோ திமுகவை சேர்ந்தவரா என்பது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இதில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈ.சி.ஆர் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "கிழக்கு கடற்கரை சாலையில் எப்போதும் முறையான பாதுகாப்பு இருக்காது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்தளவு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, "காவல்துறைக்குப் போதுமான ரோந்து வாகனங்களையும் இருசக்கர வாகனங்களையும் வழங்க வேண்டும். எந்தவித உபகரணங்களும் வழங்காமலும் போதுமான ஆட்களைப் பணிக்கு எடுக்காமலும் திமுக அரசு செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
நான்கு பிரிவுகளில் வழக்கு
இந்தநிலையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, புதன்கிழமையன்று (ஜனவரி 29) தாம்பரம் மாநகர காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 26 ஆம் தேதியன்று கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜரான மனுதாரர், 25 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தான் காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்தபோது இரண்டு கார்களில் வந்த 7-8 நபர்கள் திடீரென வழிமறித்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் தனது வீட்டுக்கு சென்ற மனுதாரரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்திச் சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்னை செய்து காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறி உள்ளனர் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வீட்டருகே நிறுத்தி பிரச்னை செய்ததாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை மனுதாரர் தரப்பு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கானத்தூர் காவல் நிலையத்தில் 126(2), 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
TNPHW என்பது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையிலான சட்டம்.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்களின் கார்களைப் பறிமுதல் செய்யவும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்வதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் எதுவும் காவல்துறை தரப்பில் வெளியாகவில்லை.
கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)