கேரளாவில் சத்தீஸ்கர் தொழிலாளி ஒரு கும்பலால் அடித்துக் கொலை - என்ன நடந்தது?

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் தொழிலாளி

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, ராம்நாராயணை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி தாக்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
    • எழுதியவர், இம்ரான் குரேஷி & அலோக் புதுல்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

கேரள மாநிலம் பாலக்காட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "இது போன்ற சம்பவங்கள் கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைத்துவிடும்." என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பு அரசியலால் ஏற்பட்டதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் ரீதியாக ஏற்பட்டது அல்ல, மாறாக உள்ளூரை சேர்ந்தவருக்கும் வெளியிலிருந்து வந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு எனவும் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபரின் மரணத்திற்கு பின் அமைதி நிலவுகிறது, தன் மகனுடன் தன்னுடைய நம்பிக்கைகளும் முடிந்துவிட்டதாக உயிரிழந்தவரின் தாயார் வேதனை தெரிவித்துள்ளார்.

"வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி கொன்றனர்"

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தை சேர்ந்த கராஹி கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான ராம்நாராயண் பாகெல். இவர், பாலக்காட்டின் வாளையார் பகுதியில் தன் உறவினர் சசிகாந்த் பாகெல் வேலை பார்த்த கட்டுமான நிறுவனத்தில் வேலைக்காக கடந்த வார தொடக்கத்தில் வந்துள்ளார்.

கடந்த 17-ஆம் தேதி வாளையார் போலீஸிடமிருந்து சசிகாந்துக்கு போனில் அழைப்பு வந்துள்ளது. ராம்நாராயண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆனால் மருத்துவமனையை அடைவதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கும்பல் அவரை கம்பு, பைப் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபிசி ஹிந்தியிடம் சசிகாந்த் கூறுகையில், "அவரை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி சூழ்ந்துகொண்டு, அடித்துள்ளனர்." என்றார்.

பிபிசி ஹிந்தியிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவர் (ராம்நாராயண்) ஒரு திருடர் என்றும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்," என்றார்.

ராம்நாராயண் நடவடிக்கை குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "ராம்நாராயண் இங்கு வேலை தேடி வந்தார், ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கே செல்ல விரும்பினார். செல்லும் வழியில் அவரை தடுத்து நிறுத்தி, அத்துமீறி, 'வங்கதேசத்தை சேர்ந்தவன்' என்று கூறி அடித்துள்ளனர். அவர் நல்ல நிலையில் இல்லை என்பது வீடியோவை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது." என்றார்.

இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கோபகுமார் தலைமை வகிக்கிறார், இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் இவ்வழக்கை விசாரிப்பார். தெஹ்சீன் பூனாவாலா எதிர் இந்திய ஒன்றியம் (தெஹ்சீன் பூனாவாலா vs இந்திய ஒன்றியம்) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராம்நாராயண் கொலை தொடர்பாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். இன அல்லது சாதி ரீதியான கும்பல் வன்முறை குற்றத்திற்கான பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரள அமைச்சர் எம்.பி. ராஜேஷ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தலைவர்கள், இந்த சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜேஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரும் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகியின் கொலை உட்பட மற்ற குற்றங்களில் அவர்களுக்கு தொடர்புள்ளது. ஆர்எஸ்எஸ் பரப்பும் வெறுப்பு அரசியலின் விளைவுதான் இச்சம்பவம்." என்றார்.

அதேநேரத்தில், கேரள பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்ரீபத்மநாபன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர், முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குச்சாவடி நிர்வாகியாக இருந்தவர், இரண்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் காங்கிரஸ் ஆதரவாளர், மற்ற இருவர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கலாம். இது அரசியல் பிரச்னை அல்ல. உள்ளூர் மக்களுக்கும் வெளியிலிருந்து வந்தவருக்கும் இடையேயான தகராறு." என தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் கூறியது என்ன?

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் தொழிலாளி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராம்நாராயண் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவில் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இருப்பதாக தெரிவித்தார். கேரள வருவாய் துறை அமைச்சர் கே. ராஜன் மற்றும் இரண்டு மாவட்ட ஆட்சியர்களை திருச்சூருக்கு அனுப்பி, குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை வழங்கச் செய்தார்.

பினராயி விஜயன் கூறுகையில், "பாலக்காடு வாளையாரில் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட ராம்நாராயணின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

"பாலக்காடு மாவட்ட கண்காணிப்பாளரின் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு விசாரிக்கும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைக்கும் இத்தகைய சம்பவங்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காத வண்ணம், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்."

சசிகாந்த் கூறுகையில், "ராம்நாராயணின் உடலை ராய்ப்பூருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என, வருவாய் அமைச்சர் (கே ராஜன்) உறுதியளித்துள்ளார். இழப்பீட்டுத் தொகை குறித்து அமைச்சரவை முடிவு செய்யும் என்றும் உறுதியளித்துள்ளனர்." என்றார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் தன் சமூக ஊடகப் பக்கத்தில் ராம்நாராயணின் மரணம், "அளவில்லா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என பதிவிட்டுள்ளார்.

அவர் தன்னுடைய பதிவில், "வன்முறை சக்திகள் இந்தளவுக்கு ஆதிக்கத்துடன் இருந்திருப்பதும் அவர்கள் கண்காணிக்கப்படாமல் இருந்ததும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. 2018-ஆம் ஆண்டு மது என்பவருக்கு நடந்தது (கும்பல் வன்முறையால் கொல்லப்பட்டவர்) இன்னும் நம் நினைவுகளில் நீங்காமல் இருக்கிறது, ஆனால் இப்போது நாம் அதேபோன்ற ஒன்றை பார்க்கிறோம். சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் போன கேரளாவில் தொடர்ந்து கும்பல் வன்முறை நடப்பது அவமானகரமானது." என தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக செயல்படுபவர்கள் 'கவலை கொள்ளத்தக்க' மற்ற காரணங்களும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

"இது நிச்சயமாக கும்பல் வன்முறை, இது மிகவும் மோசமானது," என்கிறார் புலம்பெயர் மற்றும் உள்ளடங்கிய மேம்பாட்டுக்கான மையத்தின் செயல் இயக்குநர் பெனோய் பீட்டர். "ஆனால், கேரளாவில் நடக்கும் கும்பல் வன்முறைகளை உற்றுநோக்கினால், இத்தகைய சம்பவங்களுக்கு இடையேயான கால இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் குறைந்துவருவது இன்னும் கவலை தரக்கூடியது."

முந்தைய சம்பவங்கள்

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் தொழிலாளி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இதுவரை கைது செய்யப்பட்ட அனைவரும் ஆர்எஸ்எஸ்சை சேர்ந்தவர்கள் என்று கேரள அமைச்சர் எம்.பி. ராஜேஷ் தெரிவித்தார்.

2016-ஆம் ஆண்டு மே மாதம் அசாமை சேர்ந்த 30 வயது நபர் கைலாஷ் ஜோதி பெஹேரா என்பவர் தன் மூன்று நண்பர்களுடன் கோட்டயத்தில் உள்ள சிங்காவனம் எனும் பகுதிக்கு சென்றார். அப்போது தன் நண்பர்களிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அவர்களை தேடியுள்ளார். அப்போது, அவரை சிலர் திருடன் எனக்கூறி அடிக்க ஆரம்பித்துள்ளனர். பின்னர் அவரை கட்டிவைத்து, கடும் வெயிலில் ஒரு மணிநேரம் விட்டுள்ளனர். காவல்துறையினர் அங்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார்.

எர்ணாகுளம் மாவட்டத்தின் பெரும்பாவூரில் சட்ட கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் தான்.

இரண்டு ஆண்டுகள் கழித்து மேற்கு வங்கத்தை சேர்ந்த 50 வயது மானிக் ராய் என்பவர் கோழி இறைச்சியை வாங்கிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி கொண்டிருக்கும்போது இறைச்சியை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கும்பல் ஒன்று அவரை தாக்கி கொலை செய்தது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

2023-ஆம் ஆண்டு மே மாதம் கிழிசேரியில் 31 வயது ராஜேஷ் மாஞ்சி என்பவர், ஒரு வீட்டை சுற்றி சந்தேகிக்கும் வகையில் உலவியதாக, பைப் போன்ற ஒரு பொருளை கொண்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

அதன்பின், கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து, அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 32 வயது அசோக் தாஸ் என்பவர் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழை எனும் பகுதியில் அடித்துக் கொல்லப்பட்டார். தான் வேலை பார்த்துவந்த உணவகத்தில் வேலை பார்த்த பெண் உட்பட இரு பெண்களை அவர் பார்க்க சென்றபோது இது நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்போக்கு தொழிலாளர் அமைப்பை சேர்ந்த ஜார்ஜ் மேத்யூ பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "கும்பல் வன்முறையால் நடக்கும் கொலைகள் மட்டும் பிரச்னையல்ல. புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டு, தாக்கப்படுகின்றனர். தன்னைப் போன்ற புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தாக்கப்படுவதை புகைப்படம் எடுக்க முயன்றதற்காக, 55 வயது பெண் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்." என்றார்.

'வீடு கட்ட வேண்டும் என ஆசை'

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் தொழிலாளி

பட மூலாதாரம், Alok Putul

படக்குறிப்பு, சத்தீஸ்கரில் உள்ள கராஹி கிராமத்தை சேர்ந்தவர் ராம்நாராயண்.

சத்தீஸ்கரில் உள்ள பிபிசி குழு ராம்நாராயண் பாகெலின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசியது. ராம்நாராயண் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் மாநிலத்துக்கு வெளியே பணிக்காக புலம்பெயர்ந்தவர் என்றனர்.

பாகெலின் குடும்பத்தார் சட்னாமி சமூகத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளது. தங்களிடம் உள்ள சேமிப்பை வைத்து கிராமத்தில் சிறிய வீடு ஒன்றை கட்ட முயற்சித்து வருகின்றனர்.

ராம் நாராயண் பாகெலுக்கு எட்டு மற்றும் 10 வயதில் இரு மகன்கள் உள்ளனர். அவருடைய சகோதரரின் வீட்டில் உள்ள அவருடைய தாய் மற்றுன் மனைவி இருவரும், அவருடைய வருமானத்தைக் கொண்டு எப்படியாவது வீட்டைக் கட்டி முடித்துவிட வேண்டும் என நினைத்தனர். தான் பணத்தைக் கொண்டு வரும்போது வீட்டுக்குக் கூரை அமைத்துவிடலாம் என்றும் இனியும் தன் சகோததரரின் மண் வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் ராம் நாராயண் கூறியுள்ளார்.

அந்த கிராமத்தை சேர்ந்த மேலும் சிலரும் பாலக்காட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் மூலமே ராம்நாராயணும் கேரளா சென்றுள்ளார்.

ராம்நாராயணின் மாமா கிஷன் பாகெல் கூறுகையில், "இம்மாதம் 13-ஆம் தேதி ராம்நாராயண் கேரளா சென்றார். டிசம்பர் 15-ஆம் தேதி அவர் பாலக்காட்டை அடைந்ததும் அவர் அம்மாவிடம் போனில் தான் பாதுகாப்பாக சென்றுவிட்டதாக கூறியுள்ளார்." என்றார்.

ராம்நாராயணிடம் செல்போன் இல்லை என்று கூறும் குடும்ப உறுப்பினர்கள், ஒரு தாளில் குடும்பத்தினர் எண்களை அவர் எழுதிக்கொண்டதாக தெரிவித்தனர். அந்த தாளில் இருந்த எண்ணை வைத்தே போலீஸார் அவர்களை தொடர்புகொண்டு ராம்நாராயண் உயிரிழந்தது குறித்து தெரிவித்துள்ளனர்.

அவரின் உறவினர் சசிகாந்த் பாகெல் கூறுகையில், அங்கு வேலை செய்வதற்கு ராம்நாராயணுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் டிசம்பர் 17 அன்று மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர் வழிதவறி வேறு இடத்திற்கு சென்ற நிலையில் அங்கு ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ராம்நாராயணின் உடலை பெறுவதற்காக வந்திருந்த சசிகாந்த் செந்தில் கூறுகையில், "ராம்நாராயண் பாகெல் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அதனால் நான் வரவேண்டும் என்றும் என்னிடம் வாளையார் போலீஸார் கூறினர். நான் அங்கு சென்ற பின்னர் என்னிடம் முழு தகவல்களையும் கேட்டனர். அதன்பின், என்னிடம் ராம்நாராயண் இறந்துவிட்டதாக கூறினர். அவரை சூழ்ந்துகொண்டு, 'வங்கதேசத்தை சேர்ந்தவன்' என்று கூறி மோசமாக தாக்கியுள்ளனர் என்பது வீடியோவில் தெரிகிறது" என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'கனவுகள் நொறுங்கிவிட்டன'

தன்னுடைய இரு குழந்தைகளுடன் கணவரின் உடலை பெறுவதற்காக ராம்நாராயணின் மனைவி கராஹி கிராமத்திலிருந்து லலிதா, கேரளா வந்துள்ளார். உடன் ராம்நாராயணின் வயதான தாயாரும் உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாராயணின் தாயார், தன்னுடைய குடும்பத்திற்கு ஒற்றை ஆதாரமாக தன் மகனின் சம்பளமே இருந்ததாக கூறினார். மற்றொரு மகன் ராய்ப்பூரில் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பதாகவும் ஆனால், வீட்டுச் செலவுகளை கவனிக்க அவருடைய சம்பளம் போதாது என்றும் கூறினார். தன் மகனின் மரணத்தால், தன்னுடைய அனைத்துக் கனவுகளும் நொறுங்கிவிட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே சத்தீஸ்கர் மாநில எதிர்க்கட்சி தலைவர் சரண்தாஸ் மஹந்த் இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சந்தேகத்தின் பேரில் ராம்நாராயண் பாகெல் மோசமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவித்தார். "இது மனிதத்திற்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமல்ல, நாடு முழுவதும் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை இது எழுப்புகிறது." என்றார்.

இந்த சம்பவத்தில் முதலமைச்சர் தலையிட்டு, இறந்தவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷில் ஆனந்த் சுக்லா கூறுகையில், நாட்டில் பரவியுள்ள வெறுப்புணர்வின் விளைவுதான் இச்சம்பவங்கள் என தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தை அரசு இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கேரள அரசுக்கு எதிராக முறையான கண்டனத்தை பதிவு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, ராம்நாராயணின் குடும்பத்தினர் மற்றும் கேரள அரசுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் அவருடைய உடலை சத்தீஸ்கருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு