ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு - பிசிசிஐ கூறியது என்ன?

ஆஸ்திரேலிய வீராங்கனைகள், கிரிக்கெட், பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மீதான பாலியல் சீண்டல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாரத் நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 74 (ஒரு பெண்ணின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலப் பிரயோகம்) மற்றும் பிரிவு 78 (பெண்களைப் பின்தொடர்தல், தொடர்பு கொள்ள முயற்சிப்பது) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து இந்தூரின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்) ராஜேஷ் தண்டோதியாவிடம் பிபிசி பேசியது. "கஜ்ரானாவில் வசிக்கும் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அகில் அகமது என்ற அந்த நபர் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, நடந்து சென்றுக் கொண்டிருந்த இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகளை பாலியல்ரீதியாக சீண்டினார். பின்னர் தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஐந்து காவல் நிலையங்களைச் சேர்ந்த குழு ஒன்றிணைந்து குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளது" என தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, கிரிக்கெட் , பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு எதிரான சம்பவத்தை கண்டித்து பிசிசிஐயின் கௌரவச் செயலாளர் தேவஜித் சைகியா அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இது மிகவும் வருந்தத்தக்க மற்றும் தனிப்பட்ட சம்பவம். இந்தியா எப்போதுமே தன்னுடைய விருந்தினர்களிடையே விருந்தோம்பல், அரவணைப்பு மற்றும் அக்கறைக்கு பெயர் பெற்றது. இதுபோன்ற செயல்களை நாங்கள் ஒருபோது சகித்துக்கொள்வதில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதில் மத்தியப் பிரதேச காவல்துறை எடுத்த விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கையை பாராட்டுகிறோம். நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய சட்டம் அதன் சரியான பாதையில் செல்லும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளையும் மதிப்பாய்வு செய்வோம், தேவைப்பட்டால் அவற்றை மேலும் வலுப்படுத்துவோம்." என்று தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

போலீசார் சொல்வது என்ன?

காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின்படி, வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கஜ்ரானா சாலையில் அமைந்துள்ள ஒரு சிற்றுண்டி விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

"இரு பெண்களும் சென்றுக்கொண்டிருந்தபோது, ​​பைக்கில் வந்த ஒரு நபர் அவர்களைப் பின்தொடர்ந்துச் சென்று ஆபாசமாக பேசத் தொடங்கினார். பயந்துபோன வீராங்கனைகள் உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்பி அணி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர், ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்," என இந்தூர் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டனர். பாலியல் சீண்டல் குறித்த தகவல் கிடைத்தவுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வந்து இரு பெண்களையும் துரத்திச் செல்வது கண்டறியப்பட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்" என்று ராஜேஷ் தண்டோதியா கூறினார்.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை செப்டம்பர் 30 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது, இதன் இறுதிப் போட்டி நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு