You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போர் நிறுத்தம் வந்தவுடன் இரானில் கைதும், மரண தண்டனைகளும் தொடங்கியது ஏன்?
- எழுதியவர், பிபிசி பாரசீக சேவை
இஸ்ரேலுடன் அண்மையில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, இரானில் கைதுகளும், மரண தண்டனைகளும் தொடங்கியுள்ளன.
இஸ்ரேல் உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலரை இரான் கைது செய்து தூக்கிலிட்டுள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேல் உளவாளிகள் இரானின் உளவு அமைப்புகளுக்குள் ஊடுருவி இருப்பதாக இரான் அதிகாரிகள் சொல்கின்றனர்.
இரானின் உயர் பொறுப்பிலிருந்த தலைவர்கள் கொல்லப்பட்ட முறைக்கு இஸ்ரேல் ராணுவத்திற்கு உளவாளிகள் கொடுத்த தகவல்கள் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் நடைபெற்ற மோதலில் IRGC எனப்படும் இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையைச் சேர்ந்த பல மூத்த தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் இஸ்ரேல் கொன்றது.
இந்தக் கொலைகளுக்கு இரானுக்குள் பணியாற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் உளவாளிகளை இரான் பொறுப்பாக்குகிறது.
இரானின் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் மீதான தாக்குதலின் அளவும், துல்லியமும் இரான் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உளவு குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்
இப்போது நாட்டின் பாதுகாப்புக்கு அபாயத்தை சுட்டிக்காட்டி, வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதாக நம்பப்படும் ஒவ்வொருவரையும் அதிகாரிகள் குறிவைக்கின்றனர்.
எதிர்ப்பு குரல்களை ஒடுக்கவும், மக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காகவும் தான் இவையனைத்தும் செய்யப்படுவதாகப் பலரும் அச்சப்படுகின்றனர்.
12 நாள் போரின் போது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை இரான் அதிகாரிகள் தூக்கிலிட்டனர்.
புதன்கிழமை, போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட ஒரு நாளைக்குப் பிறகு, அதே போன்ற குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர்.
அதன்பின்னர் உளவு பார்த்த சந்தேகத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் எனச் சொல்லப்படுபனவற்றை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் குறித்து மனித உரிமைக் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்டாய வாக்குமூலங்களை பெறுவது மற்றும் நியாயமற்ற விசாரணைகளை நடத்துவது என்ற பாரம்பரியத்தை இரான் கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மரண தண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
"மேற்கத்திய மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள்" என இரான் அழைக்கும் சிஐஏ, மொசாட், எம்ஐ 6 போன்றவற்றுடன் ஓய்வற்ற போரை நடத்தி வருவதாக இரானின் உளவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது முதல் இஸ்ரேலின் உளவு கட்டமைப்பு நாட்டுக்குள் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக, இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையுடன் (ஐஆர்ஜிசி) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
12 நாட்களில், இரானின் உளவு மற்றும் பாதுகாப்பு படையினர் இந்தக் கட்டமைப்புடன் தொடர்புடைய 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்திருப்பதாக ஃபார்ஸ் தெரிவித்தது.
இரானின் உளவு அமைப்புகளிடமிருந்து எச்சரிக்கை குறுஞ்செய்திகள் கிடைத்திருப்பதாக இரானியர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அவர்களுடைய தொலைபேசி எண்கள் இஸ்ரேலுடன் தொடர்புடைய சமூக ஊடக பக்கங்களில் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்தப் பக்கங்களை நீக்கும்படி அவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் அவ்விதம் செய்யாவிட்டால், அவர்கள் சட்டரீதியான பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது நடவடிக்கை
பாரசீக மொழியில் செயல்படும் பிபிசி பாரசீகம், லண்டனைச் சேர்ந்த இரான் இண்டர்நேஷனல் மற்றும் மனோடோ டிவி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதும் இரான் அரசு அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
இரான் இண்டர்நேஷனலின் கூற்றின்படி, அதன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் இரான் - இஸ்ரேல் மோதல் குறித்து செய்திகளை சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவரது தாய், தந்தை மற்றும் சகோதரரை ஐஆர்ஜிசி கைது செய்துள்ளது. அந்த செய்தி வாசிப்பாளருக்கு பதவி விலகும்படி (பாதுகாப்பு அமைப்புகளின் உத்தரவின்படி) அவரது தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அவ்வாறு செய்யாமல் விடுவதால் மோசமான விளைவுகளை சந்திக்கக்கூடும் என சொல்லப்பட்டது.
இரான்- இஸ்ரேல் போர் தொடங்கியது முதலே, பிபிசி பாரசீக செய்தியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இரான் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு போர்க்காலத்தில் குடும்ப உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக எடுப்பதை நியாயப்படுத்தமுடியும் எனக் கூறியதாக இந்த மிரட்டல்களால் பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் செய்தியாளர்களை மொஹாரிப் என அழைத்தனர். அல்லாஹ்வுக்கு எதிராக போர் தொடுப்பவர்களுக்குத்தான் மொஹாரிப் எனப் பெயரிடப்படுகிறது. இரான் சட்டத்தின்படி, இந்தக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், அதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
இதே போன்று தனது ஊழியர்கள் தொலைக்காட்சி சானலுடனான தொடர்புகளை முறித்துக்கொள்ளும்படி மிரட்டப்பட்டதாக மனோடோ டிவியும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
"உளவு பார்த்த குற்றச்சாட்டுகளுக்கு" உள்ளாகலாம் என சிலரின் உறவினர்களிடம் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் இரான் சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அதிருப்தியை அடக்கும் முயற்சி
எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கவும் வெளியேற்றப்பட்ட ஊடக ஊழியர்களை அச்சுறுத்தவும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த முயற்சிகள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பல செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்களையும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பலர் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்யப்படுள்ளனர்.
"பெண்கள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம்" என அழைக்கப்படும் 2022 போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் குறிவைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
போரின்போது, இணையத்தைப் பயன்படுத்துவதன் மீது கடுமையான கட்டுப்பாடுகளை இரான் அரசு விதித்தது. போர்நிறுத்தத்திற்கு பிறகும் அது முழுமையாக விலக்கப்படவில்லை.
நெருக்கடிகளின் போது, அதிலும் குறிப்பாக நாடுதழுவிய அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது இணைய சேவையை கட்டுப்படுத்துவது இரானில் வழக்கமான நடைமுறையாகியுள்ளது.
இவை தவிர, சமூக ஊடக தளங்களான இன்ஸ்டாகிராம், டெலிகிராம், எக்ஸ், யூடியூப் மற்றும் பிபிசி பாரசீகம் போன்ற தளங்கள் இரானில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளன.
அவற்றை விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (Virtual Private Network - விபிஎன்) மூலம் மட்டுமே காணமுடியும்.
சமீபத்திய நிகழ்வுகள் 1980களில் இரான்-இராக் போரின்போது இரானிய அதிகாரிகள் அரசியல் எதிர்ப்பை கொடூரமாக அடக்கிய நிகழ்வுகளை நினைவூட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலுடனான மோதலுக்குப் பிறகு இரானின் சர்வதேச அந்தஸ்து பலவீனமடைந்துள்ளதால், இரானிய அதிகாரிகள் மீண்டும் ஒடுக்குமுறையை பின்பற்றுவார்கள் என பலர் அஞ்சுகின்றனர்.
இதில் ஒட்டுமொத்த கைதுகள், தூக்கிலிடுதல் மற்றும் கடுமையான அடக்குமுறைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கலாம்.
விமர்சகர்கள் 1988-ஆம் ஆண்டு நிகழ்வுகளை சுட்டிக்காட்டுகின்றனர், மனித உரிமைக் குழுக்களின் கூற்றுப்படி, அப்போது ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு - அவர்களில் பலர் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வந்தவர்கள் - குறுகிய மற்றும் ரகசிய விசாரணைகளுக்குப் பின் "மரண ஆணையங்கள்" என அழைக்கப்பட்ட குழுக்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பெரும்பாலானவர்கள் அடையாளம் தெரியாத புதைகுழியில் புதைக்கப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு